Welcome..! Join us to Develop your Humanity
தொழுநோய் ஒழிப்பிற்கான 50 ஆண்டுகால முழு அர்ப்பணிப்பு- சமூக சேவகர் தாமோதர் கணேஷ் பாபட் (Damodar Ganesh Bapat )
83 வயது கொண்ட மிகவும் மெலிந்த தோற்றம் உள்ள முதியவர் ஒருவர், ஒரு சாதாரண வெள்ளை அரைக்கை சட்டையும், கசங்கிய வேட்டியும் அணிந்த படி, தனக்கு வணக்கம் சொல்பவர்களை எல்லாம் விசாரித்தபடி, மெதுவாக, சிறிது அசைந்தாடிய படி வருகிறார். அவருடைய தோற்றத்தையும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வலது காலையும், பார்வைத்திறன் குறைந்த வலது கண்ணையும் பார்ப்பவர்கள் யாரும் தொழுநோய் ஒழிப்புக்கு எதிரான அவருடைய 50 ஆண்டு கால போராட்டத்தை சிறிதும் கற்பனை செய்துகூடப் பார்க்க வாய்ப்பில்லை.
இத்தகைய எளிய மனிதர் தான் தாமோதர் கணேஷ் பாபட் (Damodar Ganesh Bapat)ஆவார். இவர் சத்தீஸ்கரில் உள்ள ஜன்ஜ்கீர் சம்பா மாவட்டத்தில் இயங்கி வரும் பாரதிய குஷ்ட நிவாரக் சங்க் (BKNS) எனும் சேவை அமைப்பில் தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும், சேவைக்காகவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் ஒரு ரயில்வே துறை ஊழியராக இருந்தவரின் மூன்று மகன்களில் இளையவர் தான் பாபட் ஆவார். அவரது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு அவர் சத்தீஸ்கரில் உள்ள ஜஷ்பூருக்கு இடம் மாறிவிட்டார். அங்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரிவார் அமைப்பான வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தொடர்புக்கு வந்தார். ஒரு முறை பாரதீய குஷ்ட நிவாரக் சங்கத்தை நேரில் சென்று பார்த்த போது அதில் சேவை புரிந்த காலஞ்சென்ற சதாஷிவ் காத்ரே (Sadashiv Katre) -வைப் பார்த்து, அவரால் ஈர்க்கப்பட்டு தொழுநோய் ஒழிப்பிற்கும், அது தொடர்பான சமுதாய புறக்கணிப்பை மாற்றவும் அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 1972 ஆம் ஆண்டில் இந்த சங்கத்தின் செயலாளராக சேவைப் பணியில் இணைந்ததிலிருந்து அவரது வாழ்வின் இறுதி மூச்சு வரையிலும் அவரது வழிகாட்டுதலில் இந்த நிவாரக் சங்கம் மிகவும் முன்னேற்றம் அடைந்தது.
குஷ்ட நிவாரக் சங்கத்தில், நோயாளிகளுடன் தங்கி இருந்து, அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், உறைவிடம் ஆகிய தேவைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தது அவருக்கு அவ்வளவு எளிதான வேலையாக இருக்க வில்லை.. ஒரு பத்திரிகை பேட்டியில் அவர் இதைப் பற்றி குறிப்பிடும் போது, அவர் ஒரு பேருந்தில் ஏறுவதற்குக் கூட மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்கள். பாபட் மற்றும் அவரது குழுவினரோடு மக்கள், பேசக் கூட முன்வரவில்லை. இவ்விதம் அவர்களிடம் பேச்சுக் கொடுப்பதை யாராவது பார்த்து விட்டால், அவர்களின் குடும்பத்தினர் யாருக்கோ தொழுநோய் உள்ளது என்கிற சமுதாய புறக்கணிப்பும், களங்கமும் அவர்கள் மீது சுமத்தப்படும் என்று அவர்கள் பயந்தார்கள்.
இத்தனை ஆண்டு கால அயராத உழைப்பு மற்றும் விழிப்புணர்வின் பயனாக, தற்போது இவருடைய நிவாரக் அமைப்பு , 160 நோயாளிகளும் 17 பேர் கொண்ட கட்டுக்கோப்பான முழுநேர தன்னார்வப் பணியாளர்களும் உள்ளதாக மாறியுள்ளது.
இந்திய தொழிலக வளர்ச்சி வங்கியின் மூலம் கடனுதவி பெற்று இங்கு ஒரு தொழில் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இங்கு உள்ள நோயாளிகள், பாய் முடைதல், கரும்பலகையில் எழுதும் சாக்பீஸ் தயாரித்தல், கயிறு தயாரித்தல்,இயற்கை எரு தயாரித்தல் ஆகிய தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த ஆசிரம வளாகத்தில் விளைவிக்கப்படும் நெல், காய்கறிகள், பழங்கள் இவற்றால் இம்மையம் தனது உணவுத் தேவையில் தன்னிறைவு பெற்றதாக விளங்குகின்றது.
உடல் நலத்துறையின் ஒத்துழைப்போடு இங்கு உள்ள நோயாளிகளின் தொழுநோய் குணமாக கூட்டு மருத்துவ சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. நோய் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் , தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் குணமாக்கப்படுகின்றனர்.
பலவருட தன்னலமற்ற சேவைக்குப் பிறகு சத்தீஸ்கர் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை இந்த நிவாரக் சங்கத்தின் மீது விழுந்தது. அதன்பிறகு அரசாங்க நிதி உதவியும் கிடைக்க தொடங்கியுள்ளது.
இவருடைய இந்த அமைப்பானது தொழுநோயாளிகளின் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறது. இவ்விதமான நோயாளிகளின் அனைத்து குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இத்தகைய ஆரோக்கியமான குழந்தைகளுக்காக சுசில் பாலக் கிருஹ் (Sushil Balak Grah) என்கிற இல்லமானது 150 குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகிறது.
பொதுவாக தொழுநோயாளிகள் சமுதாயத்தில் சுயசார்பு கொண்டவர்களாக மாறுவதில்லை. இந்த அம்சம் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே போய் விடுகிறது. ஆனால் இந்த நிவாரக் சங்கம் இவர்களை தற்சார்பு உள்ளவர்களாக மாற்றும் குறிக்கோளோடு இயங்குகிறது. பெரும்பாலான இளையவர்கள் சிகிச்சை முடிந்து நலம் பெற்று, தங்களின் வேலையைத் தொடர்ந்து செய்ய வீடுகளுக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனால் வயதானவர்களுக்கு அந்த தைரியம் வருவதில்லை. அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் வயதானவர்களை புறக்கணித்து விடுவார்கள் என்கிற அச்சத்தால் அவர்கள் இங்கேயே தங்கிவிட விரும்புகிறார்கள். இவர்களுக்காக ஒரு தனிப்பட்ட முதியோர் இல்லமும் இங்கே இயங்கி வருகிறது.
பாபட் அவர்களின் இடைவிடாத சேவைப் பணிகளில் அவருக்கு பல பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. கல்கத்தாவின் ஸ்ரீ படாபஜார் குமார் சபா புஸ்தகாலயா நிறுவியுள்ள விவேகானந்தா சேவா புரஸ்கார் இவருக்கு கிடைத்தது . தேவரஸ் அமைப்பின் பாவு ராவ் தேவரஸ் சேவா ஸ்மிருதி புரஸ்காரும் இவருக்கு கிடைத்தது. சத்தீஸ்கர் மாநில விருதான சத்தீஸ்கர் ராஜ அலங்கார் கௌரவமும் கிடைத்தது.
இவற்றிற்கு முத்தாய்ப்பாக 2018 இல் பாபட் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டிலேயே இவரது சமர்ப்பண மயமான வாழ்வு நிறைவு பெற்றது . இவர் இறைவன் திருவடியை அடைந்தார்.
இத்தனை விருதுகளும், பரிசுகளும், பாராட்டுதல்களும் கிடைத்தாலும் பாபட் அவர்களைப் பொறுத்தவரை, பாரத தேசத்தில் பிறந்ததே மிகப்பெரும் பேறாக அவர் கருதினார். அவர் எத்தகைய விருது அல்லது அங்கீகாரத்திற்கும் தானாகவே விண்ணப்பித்தது இல்லை . இவருக்கு தெரியாமலேயே இவருடைய சேவையைப் பார்த்து ஈர்க்கப்பட்ட பலரின் முயற்சியாலேயே இத்தனை விருதுகளும், பாராட்டுகளும் இவருக்கு குவிந்தன.
தற்போது இவருடைய பாரதீய குஷ்ட நிவாரக் சங்கத்தின் நோயாளிகள் மகிழ்ச்சியாகவும், மன நிறைவு பெற்றவராகவும், சமுதாய புறக்கணிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக தாமோதர் கணேஷ் பாபட்டின் தொழுநோய்க்கு எதிரான, அவரது தன்னலமற்ற, ஓய்வு ஒழிவு இல்லாத போராட்டத்தின் விளைவே ஆகும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.