Welcome..! Join us to Develop your Humanity
கார்த்திகேயன்- ஒரு கிராமத்தை அறிவுத்திறன் குறைபாடு உடையவர்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கியவர்-நாம் ஒதுக்கி வைக்கும் இந்த கிராமத்தின் மக்கள் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும்
இந்த பொருத்தமற்ற கூட்டத்தில் இருக்கும் இத்தகைய மக்கள்தான், நாம் எப்படிப்பட்ட உதாரண புருஷர்களாக விரும்புவோமோ, அப்படிப்பட்டவர்களாக மாறியிருக்கிறார்கள்.. ஒருவர் தான் வேலை பார்த்த இடத்திலிருந்து துரத்தப்பட்டவர். மற்றொருவர் அவரின் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்னொருவர் வருடக்கணக்கில் தெருக்களில் சுற்றித் திரிந்தவர்.
அவர்கள் நம்மைப் போல் காலை எழுவது முதல் நேரம் பார்த்து காரியமாற்றுபவர்களல்லர். இரைச்சல் எழுப்பக்கூடிய வாகனங்களில் பயணிப்பவர்களல்லர். சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுபவர்களல்லர். இந்த சமூகத்துக்குப் புலப்படாமல் இருக்கும் அறிவுத்திறன் குறைபாடு உடையவர்களே இந்த மனிதர்கள். நம் நாட்டில் (இந்தியாவில்) இந்த அறிவுத்திறன் குறைபாடு உடையவர்கள் 2011 -ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 16 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் பொதுமக்களின் கண்களில் படாத வண்ணம், இருண்ட ரகசியம் போல மறைவாக இருக்கிறார்கள்.
இவர்கள் நல்ல குடும்பங்களில் பாதுகாப்பாக இருந்தாலும், ஆணானாலும், பெண்ணானாலும், எதையும் செய்ய இயலாதவர்களாகவே வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.தினசரி காலை முதல் இரவு வரை எதையும் செய்ய இயலாமல் இருப்பது எவ்வளவு கடினம் என நாம் அறிவோம். இவர்களின் வாழ்வின் வெறுமையை, பணமோ பொருளோ கொண்டு ஈடு செய்ய முடியாது. இதை விடக் கொடுமை என்னவென்றால், இவர்களின் நிலைமையைக் குறித்து யோசிக்கவும் எவரும் இல்லை.
இந்த வலி எப்படிப்பட்டது என 37 வயதான கார்த்திகேயன் உணர்ந்தார். அவரும், அவரது சகோதரர்களும் நல்ல கவனிப்புடன் கூடிய ஒரு அநாதை இல்லத்தில் வளர்ந்தவர்கள். படிப்பு முடிந்து உரிய காலம் வந்ததும், அவரது உடன் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவரவர் வழி சென்றனர். ஒரு சிலர் மட்டும் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் பராமரிப்பு குறித்து கார்த்திகேயனுக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால் அங்கு இருக்கும் அந்த சிலருக்காக ஏதேனும் மேற்கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் கார்த்திகேயன்.
அவர்களும், வேலை பார்ப்பதின் அவசியத்தையும், தங்களுக்கான நல்ல எதிர்காலம் குறித்த தேவையையும் உணர வேண்டும் என கார்த்திகேயன் விரும்பினார்.
அவரின் இந்த எண்ணமே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தழுதலி என்ற கிராமத்தில் 8.39 ஏக்கர் பரப்பளவுள்ள “சிருஷ்டி” என்ற பண்ணைப் பயிற்சிப் பள்ளியாக உருப் பெற்றது. இந்த விவசாயம் சார்ந்த உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சிப் பள்ளி, அறிவுத்திறன் குறைபாடுடையோருக்காக, அவர்களும் இயற்கை விவசாயம், பால் பண்ணை, தேனீ வளர்த்தல் ஆகியவற்றைக் கற்றுச் செய்யவும், அதன் மூலம் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டவும் உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது. இந்த இடமானது அனைவரது கவனத்தை ஈர்க்கவும், வியப்பில் ஆழ்த்தவும் தவறுவதில்லை. இந்த இடத்தில சுவாசிக்கத் தூய்மையான காற்றும், சுதந்திரமாகத் திரியும் சூழலும் என்றும் மாறாமல் இருக்கிறது.
கார்த்திகேயன் தன்னுடைய விவசாயப் பயிற்சிப் பள்ளியை இங்குத் துவங்க முடிவெடுத்தபோது, இந்த இடம் சரியான பராமரிப்பின்றி, கவனிப்பாரின்றி சீரழிந்து கிடந்தது. அவருடன் இருந்தவர்களை பணிக்கமர்த்தியபோது இரண்டு குறிக்கோள்கள் மட்டுமே கவனத்தில் கொண்டார். முதலாவது, இந்த இடத்தை சமன்படுத்தி, சீர் செய்து, இயற்கை முறையில் பயிரிடுதல், இரண்டாவது பணிபுரிவோர் விவசாயம் செய்ய முறையாக கற்றுக் கொள்ளுதல், அதன் மூலம் அனைத்து அல்லது பெரும்பாலான தேவைகளைச் சுயமாகப் பூர்த்தி செய்து கொள்ளுதல் - இவையே அவரது குறிக்கோள்கள். ஓர் உள்ளூர் விவசாயி, மலையனூரான் தாத்தா மற்றும் ஐந்து நபர்களுடன் கார்த்திகேயன் 2014 -ஆம் ஆண்டு இந்தப் பயணத்தைத் துவக்கினார்.
கடந்த ஆறு வருட காலத்தில், அந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறது. 300 நாட்டு மரங்களும், நான்கு நீர்பிடி குளங்களும், ஆழ் கிணறுகளும், பாரம்பரிய பயிர் வகைகளான தினை, வரகு, சாமை மற்றும் பலவும் என அங்கு இருக்கின்றன. “சிருஷ்டி”யின் சிறப்புப் பயிற்சியாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் உள்ள தன்னார்வலர்களின் இடையறாத உழைப்பினால், தற்போது 13 மாணவர்கள் அங்கு தங்கியும், 15 மாணவர்கள் வெளியில் இருந்து வந்தும் , தங்களுக்கு நிலையானதும் மற்றும் பிறரை அதிகம் சாராததுமான வாழ்வியல் பயிற்சியினைப் பெற்று வருகின்றனர். அங்கு வாழ்வியல் பயிற்சியானது அவரவர் திறனுக்கேற்றவாறு- சிலருக்கு விலங்குகள் வளர்ப்பு மற்றும் சிலருக்கு உரம் தயாரிப்பு மற்றும் பல்வேறு வகைப் பயிற்சிகளும் முறைப்படுத்தப்பட்டுத் தரப்படுவதாக கார்த்திகேயன் தெரிவிக்கிறார்.
ராஜேஷும் மற்றும் சில சிறுவர்களும், மணல், சரளைக்கல்,வைக்கோல் போன்ற இவர்களின் நிலத்தில் கிடைப்பவற்றை உபயோகித்து வீடு கட்டப் பயன்படும் செங்கல் செய்வதில் கடுமையாக உழைக்கின்றனர். இந்த செங்கற்கள் இங்கேயே பால் பண்ணை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன.
அருண்குமார் ராஜேஷுக்கு முற்றிலும் மாறானவர். யாரையும் நேராகப் பார்ப்பதற்குக்கூட தயங்குபவர். நன்கு பரிச்சயமான பிறகுதான், நல்லதொரு ஆனந்தப் புன்னகையை வழங்குவார். அந்தப் புன்னகையானது, அந்தப் பண்ணையில் அவர் பராமரிக்கும் பசுவினால் கிடைக்கும் பெருமிதத்தால் வருவது. அதுவுமின்றி, அவர்தான் அந்தப் பண்ணையில் இருக்கும் அனைத்து பசுக்களுக்கான பராமரிப்பாளர். மேலும் அங்கிருக்கும் நாய்களும் இவருடைய விரலசைவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றன.
அவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பானது தலையாயது. நம்மைப் போன்ற பல வகையான தன்மைகளால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்வது என்பது இயலாததொன்று.
கால்நடை வளர்ப்பு என்பது மனதிற்கு இதமளிக்கும் நல்லதொரு சிகிச்சைமுறை என உலகின் பல்வேறு பராமரிப்பு மையங்களும் நமக்குக் காண்பித்திருக்கின்றன. அருண்குமார் பசுக்களிடம் பால் கறப்பதினாலும், பண்ணையைப் பராமரிப்பதினாலும் , பண்ணைக்குத் தேவையான பாலும், உரமும் கிடைக்கின்றன. இது யாவருக்கும் அனுகூலமான ஒன்று.
இவர்களின் விவசாய முறை பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் ஏதும் இல்லாமலும், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையுடன் இணைந்ததாகவும் இருக்கின்றது. இங்கு பயிலும் மாணவர்கள் தழைச் சத்து, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் பூச்சி கொல்லியாக பஞ்சகவ்யம் உபயோகித்தல் போன்றவற்றை அறிந்து கொள்ளக் கற்பிக்கப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் குப்பைக் கூளங்களை வகைப் பிரித்து தொட்டிகளில் சேகரிக்கவும், அதன் மூலம் மறுசுழற்சி செய்து அவற்றை உபயோகிக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்தப் பயிற்சிப் பள்ளியில் மனிதக் கழிவினை உரமாக மாற்றி உபயோகிக்கக்கூடிய வகையில் கழிவறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவர்கள் நம்மைப் போல ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தின் நீர்வளத்தைச் சுரண்டி, அந்த நிலத்தை வறண்டு போக விடுவதில்லை. மாறாக மழையின் மூலம் இந்த நிலத்தில் விழக்கூடிய நீரினைச் சேகரித்து, முழுமையாக உபயோகிக்கும்வண்ணம் குழிகளைத் தோண்டுவதும், கிணறுகளை வெட்டுவதும், குளங்களை அமைப்பதும் செய்திருக்கிறார்கள். இவர்கள் பாத்திரங்களைக் கழுவுவதற்குச் சாம்பலைத்தான் உபயோகிக்கிறார்கள் (இது இயற்கையில் நமக்கு கிடைக்கும் அதிகம் செலவு வைக்காத மலிவான கிருமி நாசினியும் கூட). குளியலறைத் தண்ணீரும் கூட சேகரிக்கப்பட்டு, இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு, அந்த தண்ணீரானது தோட்டத்தில் வளர்க்கப்படும் வாழை மரங்களுக்குப் பாய்ச்சப்படுகிறது.
நம்முடைய செயல்முறைகளையோ, சட்டதிட்டங்களையோ புரிந்து கொள்ள இயலாத இவர்கள்தான், நாம் இதுவரை அறிவார்ந்தவை என தவறாக நம்பக்கூடியவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்மால் நமக்கான உணவுப்பொருட்களை நச்சுத்தன்மையற்றதாக படைத்துக்கொள்ள இயலாவிட்டால், அறிவிருந்தும் ஒரு பயனுமில்லை. வெள்ளம் வரும்போது நீர் மேலாண்மை உணராது, அதைச் சேமிக்காமல், இரண்டு வருடங்களில் வறட்சியில் திண்டாடுகிறோம் எனும்போது நாம் பெற்ற அறிவினால் என்ன பயன்? இவர்கள் சிறந்த பேச்சாளர்களல்லர். இவர்களுக்கு மழை பெய்யும்போது தாவரங்களுக்கு நீர் பாய்ச்சத் தேவையில்லை என்பது கூடத் தெரியாது. ஆனால் இயற்கையானது நாம் எவ்வாறு அதனோடு இயைந்து வாழ, நமக்கு அருளப்பட்டிருக்கிறதோ, அந்த முறை தவறாது இவர்கள் இங்கு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இந்த சிருஷ்டி அமைப்பானது, ஓரளவிற்கு காந்தாரி எனும் அறக்கட்டளையிலிருந்து நிதி கொண்டு இயங்கி வந்தாலும், பல தேவைகளுக்காக, உதாரணத்திற்கு, மிதிவண்டி வாங்குவது, உணவுத் தேவைக்கான சில காய்கறிகள் வாங்குவது, தங்கள் பகுதியை மேலும் வசதிப்படுத்துவது போன்றவற்றிற்காக பிறரிடமிருந்து வரக்கூடிய நன்கொடைகளை நம்பியே இருக்கிறது.
"இந்த சிருஷ்டி அமைப்பானது, சுயசார்புடையதாகவும், நீண்ட காலம் நீடித்து இருக்கும் பண்ணையாகவும் விளங்க விரும்புகிறோம். நிச்சயம் நாங்கள் அந்நிலையை விரைவில் அடைவோம். ஏற்கனவே நாங்கள் எங்கள் பண்ணையில் அதிகப்படியாக விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பதற்கு, "நல்ல கீரை" எனப்படும் இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமன்றி, இன்னொரு பால் பண்ணை அமைப்பதற்கான முயற்சியையும் துவக்கியிருக்கிறோம்" என்கிறார் கார்த்திகேயன்.
இவரின் தயாரிப்புக்களை நாமும் நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் நிலை நிச்சயம் விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். அந்த உணவுப் பொருட்களானது நிச்சயம் சிறந்ததாகவும் நச்சுத் தன்மையற்றதாகவும், அமையும் என்கிறார். இவருடன் பண்ணையில் பணியாற்றும் சகோதரர்கள் அனைவரும், இந்தப் பண்ணையில் இருந்து வெளியே சென்று, தங்களுக்கான ஒரு சிறிய சொர்க்கத்தைப் போன்றதொரு வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களை அத்தகையத் திறன் கொண்டவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் இதைத்தான் தன் வாழ்வின் உயர்ந்த லட்சியமாகக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் நம் கார்த்திகேயன்.