மணவாளியின் கண்ணும் கழுத்தின் சரப்பணியும்

Previous.....என்னோடே வா

மணவாளியின் கண்ணும் கழுத்தின் சரப்பணியும்

மணவாளி இந்த உலக இச்சைகளால் கவர்ந்து இழுக்கப்பட்டு தனது மணவாளனை விட்டு விலகி போய்விட்டாள். உன்னதப்பாட்டின் முழு கவிதையில் மணவாளியை தன்னண்டை வரும்படி மணவாளன் அழைத்துக்கொண்டே இருக்கிறார். தனது தலையை வெட்கத்தில் தொங்கவிட்டு, குற்ற மனப்பான்மையுடன் மணவாளனை காணத் தயக்கத்துடன் இருக்கும்போது, அவர் அவளை நோக்கி, "என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்" என்கிறார். (உன்னதப்பாட்டு 4:9).

இதைக் கேட்டு அவள் தன் தலையை சிறிதளவு தூக்கி மணவாளனைக் காண்கிறாள். அவள் பார்த்ததும், அவர் இவ்விதம் கூறுகிறார்.

ஒரே பார்வை மாத்திரம் போதும்! இந்த ஒரே பார்வையிலே மணவாளியின் மனம்திரும்புதல் அடங்கியிருக்கிறது. ஒரு பாவ அறிக்கை வார்த்தைகளின் மூலமாக இல்லாமல், மணவாளி தனது ஒரே பார்வையினால் மணவாளனைக் கவர்ந்துவிட்டாள்.

மணவாளியே, உன்னிடம் ஒரு முதன்மையான குணாதிசயம் மணவாளனை கவர்ந்து இருக்கிறது. இந்த மேலோங்கிய குணம் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியாக மணவாளனின் கண்களில் தெரிகிறது. நீ கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை நேசித்துருக்கலாம். "நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10). இந்த குணாதிசயம் அவரைக் கவர்ந்துவிட்டது. இதேபோல வேறு ஏதாவது குணாதிசயமும் காணப்படலாம். இந்த ஒரே குணாதிசயத்தை உன் வீட்டாரோ, மற்ற தேவப்பிள்ளைகளோ அறியாமலிருக்கலாம். இந்த குணாதிசயம் உனக்கே தெரியாமலிருக்கலாம். உன்னிடம் அநேக நற்குணங்கள் இருந்தாலும், ஒரே நற்குணம் மாத்திரம் அவரை அதிகம் கவர்ந்திருக்கிறது, இந்த நற்குணம் அவரைக் கவரும் சரப்பணியாக இருக்கிறது. "என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்", என்று இரண்டு தடவை மணவாளன் கூறுகிறார். தான் இன்பத்தில் மூழ்கி இவ்விதம் கூறுகிறார். "என் சகோதரியே!" என்றும் அழைக்கிறார். இது அவரின் சகோதர அன்பையும் காண்பிக்கிறது. உன்னை சகோதர அன்பாலும் மணவாளனின் அன்பாலும் தன்னண்டை இழுத்துக்கொள்கிறார்.

Next.....மணவாளியின் நேசம்