பழைய கதையின் பாடல்

"நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை". (உன்னதப்பாட்டு 1 :6).மணவாட்டி தன் தகுதியில்லாதத்தன்மையையும் நான் செய்யத்தவறிய காரியங்களையும் நினைத்து நினைத்து மனங்கசந்து அழுகிறாள். அவரது அக்கினி ஜுவாலை போன்ற கண்களின் பார்வைக்குமுன் அவளால் கதறாமல் இருக்க முடியவில்லை. அவளது நேசர், அவளது கருமைக்குக் காரணங்களைத் திட்டவட்டமாக அறிந்திருந்தும், அவள் தன் தவறுகளை உணர்ந்து உள்ளம் நொறுங்கி அழுகையில், பழங்கால கதைகளை இனிமையான பாடல்களாக பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டு ஒருவர் ரசிப்பதைப் போல, ரசித்துக்கொண்டிருக்கிறார்.

ஓ, இந்த மணவாளன் இந்தப் பாடலில் எத்தனையாய் மகிழ்ந்து கொண்டிருக்கிறார் - ஏனெனில் அவர் அவள்மேல் செலுத்திக்கொண்டிருக்கும் அன்பின் பிரவாகத்தினால் அவளது கதறல், உன்னத பாட்டாக, இனிய கீதமாக அவர் செவிகளுக்கு கேட்கிறது!

அவள் தன் கடந்த கால பாவங்களை அழுகையோடு அவரிடம் அறிக்கை செய்ய அவர் அவளைக்குறித்து கோபங்கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மேலும் அன்பையே பொழிகிறார்!

அவளது பாடலை நாமும் கேட்போம்! அவளது வேலை அதிக கடினமானது. இரவும் பகலும் அந்த திராட்ச தோட்டத்தில் வேலை செய்யவேண்டும். வெயில் ஏற ஏற அந்த வெப்பம் தாங்க முடியாததாயிருக்கும். ஒரு காலம் அவள் வெண்மையும் அழகும் உள்ளவளாயிருந்தாள். அவள் தாயின் பிள்ளைகள் அவளிடம் ஒப்படைத்திருந்த இந்த வேலையை சுயலாபம் ஏதுமின்றி எந்த ஓய்வுமின்றி அகோர வெயிலிலும் கூட அவள் செய்து வந்ததால் இப்போது அவள் கறுப்பாகிவிட்டாள்! கடும் வெயில் அவள் சரீரத்தில் தன் முத்திரையை பதித்துவிட்டது!

எரித்துவிடக் கூடிய அக்கினியில் அகப்பட்டு விட்டவர்களை மீட்பதற்கு முன் வருகிறவர்கள், சில வேளைகளில் அந்த நெருப்பினால் தாக்கப்பட்டு விடுகிறார்கள்!

தேவபிள்ளைகளின் திராட்சத்தோட்டங்களை தூங்காமல் காவல் காத்துக்கொள்ளுகிற ஊழியர்கள் உண்டு. ஆனால் தங்களதுதிராட்சத்தோட்டங்களை காக்காமல் விட்டுவிடுகிறார்கள்! சிலவேளைகளில் சோதனைக்காரன் திரும்பத்திரும்ப அவர்களை சோதித்துக்கொண்டிருப்பதினால் அவர்கள் பாவ வலைக்குள் சிக்கிவிடுகிறார்கள். அந்த "வெப்பத்தினால்" அவர்கள் கறுத்துவிடுகிறார்கள். அவர்களின் ஆவிக்குரிய ஜீவியம் கறைப்பட்டு போகிறது. சிலவேளைகளில் அவர்களுடைய வாழ்க்கையே அழிந்துவிடுகிறது. தங்கள் தாயின் பிள்ளைகளுக்கு நடுவே, அதாவது ஒரு நாள் அவர்களுக்காக இவர்கள் அதிகமாய் தங்களையே தியாகம் செய்து ஜெபித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொடுத்தவர்கள் மத்தியில், உடன் விசுவாசிகள் மத்தியில் கேலிப்பொருளாக நிற்கும் நிலைகூட வந்துவிடுகிறது. இந்நாட்களில் நடந்துக்கொண்டிருப்பது இதுவே!

ஒரு தேவ ஊழியர் யோபைப்போல சாத்தானால் சோதிக்கப்படுகையில் தேவப்பிள்ளைகளே அவரைச்சுற்றிலும் நின்று தங்கள் வார்த்தைகளாகிய ஈட்டிகளால் குத்துவார்கள்! இவர்கள் ஒருநாள் தேவனுடைய நியாயாசனத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள்!

(மொழியாக்கம் by Caroline Jeyapaul)

Next....அவரது மந்தை