லீபனோனின் மரத்தினால் ஒரு இரதம்

Previous....சாலொமோனுடைய மஞ்சம்


லீபனோனின் மரத்தினால் ஒரு இரதம்

"சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்", (உன்னதப்பாட்டு 3:9) என்று எருசலேமின் குமாரத்திகள் சாலொமோன் ராஜாவின் இரதத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்கள்.

"அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது"(உன்னதப்பாட்டு 3:10).

சாலொமோன் ராஜா லீபனோனின் மரத்தினால் செய்த பல்லாக்கு, அவரை சுமந்து வருகிறது. இதேபோல, கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம்மிடம் கொண்டுவருவது பல்லாக்கைப் போன்ற உண்மையான ஊழியங்கள். இந்த ஊழியர்களின் வேலை கிறிஸ்துவை சுமந்து, மணவாளியான தேவ பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துவது தான். ஒரு மேடையிலிருந்து பிரசங்கம் பண்ணுவது அல்ல. அற்புதம் செய்வதும், சுகம் கொடுப்பதும் பல்லாக்கில் வரும் ராஜாவே! பல்லாக்கை தூக்கிக்கொண்டு வருபவர்களுக்கு நீங்கள் பணம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. ராஜாவே அவர்களுக்கு கூலி கொடுக்கிறார்.

கிறிஸ்துவின் மகிமையை இந்த ஊழியர்களின் மூலம் வெளிப்படுத்துவது பரிசுத்தாவியானவரே! சீனாய் மலையில் தேவ மகிமை அக்கினியின் மூலம் இறங்கியது. அந்த மலையை யாரும் தொடக்கூடாது என்று மோசே எச்சரித்தான். ஆனால் நாமோ அவரின் மகிமையில் பிரவேசித்து அவரை தரிசிக்கலாம். சாலொமோன் ராஜாவின் இரதம் பகைஞரை விரட்டி, சிதறடிக்கிறது. அதேபோல கிறிஸ்துவின் இரதம் சாத்தானின் சேனைகளை யுத்தம் பண்ணி மேற்கொள்கிறது. அதே நேரத்தில், பாவிகளை பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கிறது.

இந்த இரதம் லீபனோனின் மரத்தினால் செய்யப்பட்டது. "நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்". (சங் 92:12). கேதுரு மரம் தேவ பலத்தைக் குறிக்கிறது. இயேசுவின் மகிமை கேதுருவைப்போல் வல்லமை உடையது. அவரின் மகிமை இந்த உலகத்திலுள்ள எந்த வல்லமையான அரசரின் மகிமையை விட பெரிதானது. அவரின் மகிமை உங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாக இருக்கிறது. யாரோ உங்களைத் தொட்டால் அவரின் கண்மணியை தொடுகிறான். தொடுகிறவன் அக்கினியில் எரிந்து சாம்பலாகி விடுவான். இந்த இரதம் உங்கள் பகைஞரை அழிக்கிறது. ஆனால் உங்களையோ இரட்சிக்கிறது. இந்த பல்லாக்கில் இருக்கும் கிருஸ்துவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் காணலாம். இவரை காணுவதற்கும், அணுகுவதற்கும், பேசுவதற்கும் உங்களுக்கு எல்லா உரிமைகளும், தகுதியும் உண்டு. யாரின் மூலாகவோ அல்லது சபை போதகர் மூலமாவாகவோ அவரிடம் போக அவசியம் இல்லவே இல்லை!

இந்த இரதத்தின் தூண்கள் வெள்ளியினால் செய்யப்பட்டவைகள். "கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது" (சங் 12:6). தேவ வார்த்தையாகிய கிறிஸ்துவின் மகிமை கர்த்தருடைய சொற்களின் மேல் தங்கியிருக்கிறது. இயேசுவின் மகிமையை தேவ வசனத்திலிருந்து பிரிக்க முடியாது. தேவ வசனங்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது! தேவ வசனங்களை கலப்படம் செய்தாலோ குறைத்தோ கூட்டியோ பிரசங்கித்தால் கிறிஸ்துவின் மகிமை மங்கலாகிவிடும். எத்தனை தடவை தேவ சத்தியத்தைக் குறைக்கிறோமோ, அத்தனை தடவை கிறிஸ்துவின் மகிமை (eclipse) குறைந்துவிடும். ராஜா, இந்த இரதத்தின் தட்டை பொன்னினால் செய்தார். "அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம்" (1 பேதுரு 1:7). பொன் உங்களின் அக்கினியினாலே சோதிக்கப்படும் விசுவாசத்தைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மகிமை உங்களது பொன்னான விசுவாசத்தின் மூலம் வெளிப்படுகிறது. உங்களது விசுவாசத்தின் மூலம் அற்புதங்கள், சுகங்கள் மற்றவர்களுக்குக் கிடைக்கிறது. உங்களுக்கு பரிசுத்தாவியானவர் அருளும் இந்த விசுவாச வரம், நீங்கள் அனுபவித்த பாடுகளின் மூலம் சோதிக்கப்பட்டு, விலையேறப்பெற்றதாயிருக்கிறது.

அக்கினியினாலே சோதிக்கப்படும் விசுவாசம் சாதாரண விசுவாசத்தைவிட மேலானது. இதுதான் உயிருள்ள விசுவாசம் (Living faith). இந்த உயிருள்ள விசுவாசத்தை உடையவர்கள்தான் இந்த இரதத்தை பிடித்து ஓட்ட முடியும்.

இந்த இரதத்தின் ஆசனம் இரத்தாம்பரத்தினால் செய்யப்பட்டிருக்கிறது. இரத்தாம்பர நிறம், சிகப்பு நீலம் ஆகிய இரண்டு நிறங்களை உள்ளடங்கியது. சிகப்பு கிறிஸ்துவின் ரத்தத்தையும், நீலம் அவரது நீதியையும் குறிக்கிறது. பிதாவின் நீதி, அவரது ஒரேபேறான பாவம் அறியாத குமாரனை, நமது பாவங்களுக்காக கல்வாரியில் பலி கொடுத்து நம்மை இரட்சித்திருக்கிறது. நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக்கப்பட்டோம் (2 கொ 5:21). நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது நாம் தேவ நீதியாக இருப்போம்.

இரதத்தின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் (Needle work) விரித்திருந்தது. இங்கே எருசலேமின் குமாரத்திகள் கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கும் நேசத்தை வெளிப்படுத்துகிறது. அநேக தேவனின் ஊழியர்கள் தங்களது பெரும் தியாகத்தால் தங்கள் கைகளின் மூலமாக செய்த பணிகள் இந்த இரதத்தில் சமுக்காளமாக விரிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் மகிமை இந்த சமுக்காளத்தின் மேல் வரைபடமாக காட்சியளிக்கிறது. அன்னை தெரசாவின் பணிகளை இன்றும் நாம் அவர் கிறிஸ்துவின் மேல் வைத்த அன்பின் சமுக்காளமாக இன்றும் காண்கிறோம். இந்த இரதத்தை காண்பவர்களின் கவனம் கீழே விரிந்திருக்கும் சமுக்காளத்தின் மேல் கவரப்படுகிறது.

Next.....மணவாளனின் கலியாண நாள்