சிறிய சகோதரி ஒரு மதில், ஒரு கதவு

Previous.....சிறிய சகோதரி

சிறிய சகோதரி ஒரு மதில், ஒரு கதவு

"அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம் ", என்று மணவாளி தனது சிறிய சகோதரியை பற்றி மேலும் கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 8:9).

ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரி ஒரு மதிலானால் அந்த மதிலைச் சுற்றி ஒரு வெள்ளிக்கோட்டையைக் கட்டவேண்டுமாம். சாதாரண செங்கல், காரை, போன்றவைகளை வைத்து ஒரு வலிமையான கட்டிடம் கட்டமுடியாது. வெளியில் ஒரு வெள்ளிக்கோட்டை கட்டி மதிலை பலப்படுத்தலாம். ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களின் பாதங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டது (யா 38:19). "கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது"( சங் 12:6). ஆண்டவரின் புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களை வைத்துத்தான் ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரியை ஆவிக்குரிய வாழ்க்கையில் கட்டி எழுப்பவேண்டும். சரியான சத்தியங்களைப் போதித்துத் தான், பலவீனரான விசுவாசிகளை ஆத்துமாவில் ஒரு பலமுள்ள மதிலாக கட்டமுடியும். இந்த தேவ மக்களை இயேசுவின் சீடராக்கி தேவனின் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பலமான தடுப்பு மதிலாக கட்டுவோம். இந்த தரிசனம் நமது சபை போதகர்களுக்கு கிடைக்கவேண்டும். இன்று தாயை போல பாலூட்டும் ஆவிக்குரிய ஸ்தனங்களுடைய தேவ மக்கள் மிகவும் குறைவானவர்களே! உனது சிறிய சகோதரி வளர்ச்சி அடையாமலிருப்பதற்கு காரணம் என்னவென்றால், அவள் புதுப்பிறப்பு அடைந்தபின்பு, சத்துள்ள ஆவிக்குரிய பாலான, அடிப்படை வேத சாத்தியங்களை சபையில் ஊட்டப்படாமல் , சிறு குழந்தையாகவே கடைசி வரை சபையில் இருந்துவிட்டாள். "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்". (! கொ 1:27). பலவீனமானவர்களான சிறிய சகோதரிகளை தேவன் தெரிந்துகொண்டிருக்கிறார்.

சூலமேத்தியாள் தனது ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரியை ஒரு கதவாக வைக்க விரும்பி, கேதுருப்பலகைகளினால் கதவான அவளை பலப்படுத்த விரும்புகிறாள். தேவனுடைய வீட்டிற்குள் பிரவேசிக்கும் மக்கள் இந்த கதவு வழியாகத்தான் நுழைகிறார்கள். இவள், தேவனுடைய வீட்டை சுற்றி ஒரு பலமுள்ள மதிலாக மாத்திரம் இல்லாமல், ஒரு நுழை வாசலாகவும் இருக்கும்படி சூலமேத்தியாள் விரும்புகிறாள். சபை போதகரே, இதைப்போல உங்களுக்கு ஒரு தரிசனம் உண்டா? கேதுருப்பலகைகள் என்றால் தேவ வார்த்தைகள்! இன்று சரியான சாத்தியங்களை தீர்க்கதரிசன வார்த்தைகளாக போதிக்கும் உண்மையான சபை போதகர்கள் எங்கே?

Next.....மணவாளி ஒரு மதில்