திராட்சத்தோட்டங்களில் நரிகள்

Previous.....என் புறாவே

திராட்சத்தோட்டங்களில் நரிகள்

"திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே" என்று மணவாளன் தன் மணவாட்டியிடம் வேண்டுகிறார் (உன்னதப்பாட்டு 2:15).கிறிஸ்துவின் திராட்சத்தோட்டங்களில் பூவும் பிஞ்சுமாயிருக்கிறது. அவைகள் இன்னும் பழங்கள் கொடுக்கவில்லை. இந்த தோட்டங்களைக் கெடுப்பது சின்னஞ்சிறிய நரிகள்தான். இன்று அநேக தேவமக்களிடம் திராட்சத்தோட்டங்கள் இருக்கிறது. இன்னும் கனி தராமல் பூவும் பிஞ்சுமாயிருக்கிறது. இந்த தோட்டங்களைக் கெடுக்கும்படி சத்துருவானவன் குழிநரிகளையும் சிறுநரிகளையும் அனுப்பிக்கொண்டே இருக்கிறான். சத்துரு பெரிய மிருகங்களான யானைகளையும், காட்டுமாடுகளையும் அனுப்பவில்லை. இந்த சாத்தானின் சேனைகள் நாம் செய்யும் கொடிய பாவங்களின் மூலமாக அல்ல, சின்ன சின்ன பாவங்களின் மூலம் நமது தோட்டங்களைக் கெடுக்கிறது. சின்ன சின்ன பொய்கள், சின்ன சின்ன கெட்ட எண்ணங்கள், சின்ன சின்ன இச்சைகள், சின்ன சின்ன களியாட்டம், போன்ற குழிநரிகள் செடிகளின் வேர்களை தோண்டி எடுக்கிறது. பின்பு நமது சிலுவையில் அறையப்படாத சுபாவங்களான கோள் சொல்லுதல், புறங்கூறுதல், பெருமை, அன்பின்மை, சுய சித்தம் செய்தல், மற்ற தேவ மக்களை வெறுத்தல், என்பவைகள் சிறுநரிகளாக திராட்ச செடிகளை பிடித்து விளையாடுகிறது. அப்போது பிஞ்சு பூக்கள் உதிர்ந்துவிடுகிறது.

பெரிய காட்டு மிருகங்கள் வந்தால் நாம் அடையாளம் கண்டு அவைகளை துரத்திவிடலாம். ஆனால் குள்ள நரிகள் எந்தவிதமான பாதிப்பும் செய்யாது என்று நினைத்து மெத்தனமாக இருப்போம். இந்த குள்ள நரிகள் நமது கண்களில் தென்படாது. இன்று நமது ஊழியர்களின் மூலமாக கனி கொடுக்காமல் இருக்கிறோம். ஏனென்றால், உங்களுக்கு தேவன் கொடுத்த தோட்டத்தை நீங்கள் பராமரிக்காமல், குழிநரிகளையும் சிறுநரிகளையும் உள்ளே வரவழைத்துவிட்டீர்கள். அநேக தேவ பிள்ளைகளுக்கு அவர்களுக்கு ஆண்டவர் திராட்சத்தோட்டங்கள் கொடுத்து இருக்கிறார் என்ற சத்தியம் அறியாமலிருக்கிறார்கள்.

அற்பமாக எண்ணும் காரியங்கள் குழிநரிகளாகவும், சிறுநரிகளாகவும் உங்கள் தோட்டத்திற்குள் பிரவேசிக்கிறது. விடுபடும் செயல்கள் (acts of omission) தான் இந்த நரிகளாக உங்கள் தோட்டத்தைக் கெடுக்கிறது. ஒரு பிச்சைக்காரரை கண்டும் காணாதுபோல போனால் இந்த செயல் ஒரு விடுபடும் செயலாகிறது. சின்ன சின்ன காரியங்களில் நீங்கள் நற்கிரிகைகள் செய்ய தவறியிருக்கலாம். இந்த நரிகளை பரிசுத்தாவியானவரின் உதவியுடன் நாம் அடையாளம் கண்டுகொண்டு பிடித்து, விரட்டவேண்டும்.

Next....லீலி புஷ்பங்களுக்குள்