என்னோடே வா

Previous.....நீ பூரண ரூபவதி

என்னோடே வா

"லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்," என்று பயந்துநடுங்கும் மணவாளியை நோக்கி மணவாளன் கூறுகிறார் (உன்னதப்பாட்டு 4:8). லீபனோன் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் பலத்தின் மெல் பலம் அடைந்து வளரும் இடமாகும். இங்கே தேவனின் மகிமையைக் காணலாம். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதல் லீபனோனில் ஜீவிக்க தொடங்கிவிட்டீர்கள். தேவ வசனங்களைக் கேட்டு, ஜெபம், ஆராதனை செய்து பரிசுத்தவான்களோடு ஐக்கியம் வைத்து நீங்கள் ஆத்துமாவில் வளர்ந்து வருகிறீர்கள். இப்போது மணவாளன் உங்களை லீபனோனிலிருந்து அவரோடு கூட வந்து, அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும், கீழே எட்டிப்பார்க்க சொல்கிறார். லீபனோனிலிருந்து உங்களை அவரின் திராட்ச தோட்டங்களுக்கு வரும்படி விரும்புகிறார். அந்த தோட்டங்களில் நீங்கள் அவருடன் சேர்ந்து அவரின் உடன்வேலையாட்களாக உழைக்க விரும்புகிறார். "நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்..." (1 கொ 3:9). சபை சரித்திரம் எவ்விதம் வில்லியம் கேரி, அன்னை தெரசா போன்ற தேவ ஊழியர்கள் தங்களின் சொந்த தேசங்களை விட்டு தேவனுக்கு உடன்வேலையாட்களாக தூர இடங்களிலுள்ள அவரின் திராட்ச தோட்டங்களில் உழைத்து, மரித்து அந்த தோட்டங்களில் விதைகளாக புதைக்கப்பட்டனர்.

அமனாவின் கொடுமுடி ஒரு உயரமான மலை. கிறிஸ்துவோட உன்னதத்தில் வீற்றிருக்கும் நீ தாழேயுள்ள சமவெளியில் அழிந்து கொண்டிருக்கும் ஆத்துமாக்களை காணும்படி தரிசனம் கிடைக்கவேண்டும். உனது சபை இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள தேசங்களைப் பார்! சேனீர் எர்மோனின் தேசத்தில் கொடிய சுபாவம் உடையவர்களும் விக்கிர ஆராதனைக்காரர்களும் வசித்தனர். இந்த தேசத்தை மோசே பிடித்துக்கொண்டான் (உபா 3: 8-9).

இன்று அநேகர் பரிசுத்தாவியானவரின் அபிஷேகம் கிடைத்துவிட்டது என்று கருதி தங்களை இந்த உலக பொருட்களான விக்கிரங்க ஆசைகளுக்குத் தங்களை அடிமைகளாக்கிக்கொண்டு அமலேக்கியரைப் போல வாழ்கிறார்கள். ஆவிக்குரிய அமலேக்கியரின் மேல் வெற்றிக்கொள்ளாமல் வெறுமனே ஆராதனையில் கலந்துக் கொண்டு ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறார்கள். மிஷனரி பணிகளுக்காக தியாகத்தோடு கொடுக்காமல், தங்களுக்குப் உலகப்பிரகாரமான பொருட்கள் கிடைக்கும்படி ஜெபிக்கும் ஊழியர்களுக்கு மாத்திரம் பண உதவி செய்கின்றனர். "உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (I யோவான் 2:15-16).

மணவாளியே நீ கிறிஸ்துவின் நாமத்தில் பாடுகள் அனுபவித்து சிங்க கெபியில் அடைபட்டு, நம்பிக்கை இழந்து, இருக்கலாம். கிறிஸ்து உன்னை சிங்கங்களின் தாபரங்களிலிருந்து அவரோடு வர அழைக்கிறார். அல்லது நீ இதுபோல சிங்கங்களின் தாபரங்களிலல் துன்பம் அனுபவிக்கும் தேவ ஊழியர்களுக்காகவும் , கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு துன்பம் அனுபவிக்கும் மக்களுக்காகவும் ஜெபிக்கவும், உதவி செய்யவும் கடமை பட்டிருக்கிறாய்!

நீ சிவிங்கிகளின் (Leopards) மலைகளில் வசித்துக்கொண்டிருக்கலாம். வெளிப்படுதலின் விசேஷத்தில் யோவான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது (வெளி 13:2). இந்த மிருகமானது அந்தி கிறிஸ்துவைக் குறிக்கிறது. தேவ மக்களை வஞ்சிக்கும்படி இந்த மிருகம் நமது கிறிஸ்தவ உலகத்தில் அலைந்து திரிகிறது. இந்த மலையுச்சியிலிருந்து நீ கீழே பார்த்தால் நமது சபைகள் எவ்விதம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை அறிவாய்.

Next.....மணவாளியின் கண்ணும் கழுத்தின் சரப்பணியும்