தண்ணீர் நிறைந்த கண்கள்

Previous.....தங்கமயமான தலை

தண்ணீர் நிறைந்த கண்கள்

"அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது", என்று தொடர்ந்து மணவாளி தன் தோழிகளிடம் மணவாளனின் மகத்துவ ஆள்தத்துவத்தை புகழ்ந்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 5:12). இயேசுவின் கண்கள் தண்ணீர் நிறைந்த கண்கள் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறதாம்.

புறாக்களின் கண்கள் மென்மையையும், சாந்தத்தையும், அப்பாவித்தன்மையையும் வெளிப்படுத்துகின்றது. புறா இலகுவாக வேடனின் வலையில் விழுந்துவிடுகிறது. புறா பழிவாங்க நினைக்காது. ஆனால் கழுகின் கண்களோ வஞ்சகத்தையும், வன்மத்தையும், கொடூரத்தையும் வெளிப்படுத்துகின்றது.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டுவதற்கு முன்பு தன்னை வேடர்களின் (பரிசேய, சதுசேய) கண்ணிக்கு ஒப்புக்கொடுத்தார். ரோம சேனைகளின் ஈட்டிக்கு, அடிக்கப்படும் ஆட்டைப் போல ஒப்புக்கொடுத்தார். அவர்களை எதிர்க்கவே இல்லை.

தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களைப்போல இயேசுவின் கண்கள் எப்போதும் கண்ணீர் நிறைந்துக் காணப்பட்டன. நாம் துன்பம் அனுபவிக்கும்போது அவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார். நீங்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் உங்களின் துக்க நதியின் வெள்ளத்தின் அருகே கண்ணீர் நிறைந்த கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்.

கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற புறா என்று உன்னதப்பாட்டு 2:14 பகுதியில் மணவாளன் மணவாளியை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், இந்த பகுதியில் தெய்வீக எழுத்தர் மணவாளனை தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் ஒரு புறாவிற்கு ஒப்பிடுகிறார். அங்கேயே தங்கும் புறா! தடாகத்தில் வந்து தண்ணீர்குடித்துவிட்டு போகும் புறா அல்ல! நமக்காக 24 மணிநேரமும் கவலை கொள்ளுபவர். நாரையைப் போல எப்போதும் நதியில் தங்கும் பறவை!

இந்த புறா எப்போதும் சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அருகே தங்கி தன்னை சுத்தமாக வைத்திருக்கிறது தங்குகிறது. "ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்" (சங் 46:4). இயேசு தன்னை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தில் ஓடும் நதியின் அருகில் தங்கினார்.

இந்த புறாவின் கண்கள் பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. கண்களை பாலில் கழுவினால் சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். பால் சுத்தமாக வைக்கும்போது கெட்டுப்போகாது. இயேசுவின் கண்கள் பரிசுத்தமானது. ஒரு கிரீடத்தில் நேர்த்தியாய்ப் பாதிக்கப்படட வைரங்களைப்போல இருக்கிறது. அவரின் கண்களில் ராஜரீகம் வாசம்பண்ணுகிறது. அவரின் கண்களில் நீதி தங்குகிறது. இந்த உலகத்தை தனது நேர்த்தியான கண்களால் பார்த்து நேர்த்தியாக படைத்தார்.