மணவாட்டியின் உதடும் கன்னங்களும்

Previous.....மணவாட்டியின் பற்கள்

மணவாட்டியின் உதடும் கன்னங்களும்

"உன் உதடுகள் சிவப்புநூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது", என்று மணவாளன் மணவாட்டியின் உதடுகளையும் கன்னங்களையும் வர்ணிக்கிறார் (உன்னதப்பாட்டு 4:3). மணவாட்டியின் உதடுகள் பரிசுத்தமாகவும், அசுத்தமில்லாதாகவும் இருக்கவேண்டும் (ஏசாயா 6:5). வாக்கு இன்பமுமாயிருக்கவேண்டும். மணவாட்டியின் உதடுகள் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு சிவப்புநூலுக்குச் சமானமாயிருக்கவேண்டும். நமது உதடுகள் மூலம் பரிசுத்தமில்லாத காரியங்களையும், வீணான காரியங்களையும், கேலியான காரியங்களையும் பேசிவருகிறோம். "நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!....நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.......நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது" (யாக் 3:5-8). தினமும் இரவு வேளையில் உங்களை ஆராய்ந்து பார்த்து பகலிலே ஏதாவது பக்தி விருத்திக்கு இல்லாத காரியங்களை பேசியிருப்போமானால், ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு நமது உதடுகளை பேணிக் காத்துக் கொள்வோமாக.

உதடுகள் மூலம் யாரையோ அல்லது சத்துருக்களையோ சபிக்கக்கூடாது. யாரையும் உரத்த குரலில் சத்தம் போட்டு அதட்டக்கூடாது. பிள்ளைகளாக இருந்தாலும் சரி. அலுவலகத்தில் வேலைப்பார்க்கும்

சகஊழியர்களையோ, தாழ்ந்த ஊழியர்ளையோ, அன்போடு அழைப்போமாக. உன்னதப்பாட்டிலே நமது மணவாளனின் மெல்லிய, இனிய சத்தத்தைக் கேட்போமாக!

உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.பெண்ணின் முக்காடு அவளின் அடக்கத்தையும் தாழ்மை நிலையையும் குறிக்கிறது. தன்னை கிறிஸ்துவுக்குள் மறைத்துக்கொள்ளும் ஒவ்வொரு தேவ பிள்ளையை, கர்த்தர் கனம் பண்ணுகிறார். அந்த ஆத்மீக முக்காட்டிற்குள்தான் மணவாட்டியின் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது. மாதளம் பழத்தை காப்பது அதன் கடினமான தோடு தான். ஆங்கிலத்தில் இதை Temples என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தலையின் கீழேயுள்ள பகுதி. நாம் இங்கே கன்னங்கள் என்ற பதத்தை தியானிப்போமாக. முகத்திற்கு அழகு கொடுப்பது கன்னங்கள். நமது அந்தரங்க ஆவிக்குரிய வாழ்க்கை கிறிஸ்துவிற்குள் மறைந்து இருக்கிறது. கன்னங்கள் எப்படி ஒரு பெண்ணிற்கு அழகு கொடுக்கிறதோ, நமது ஆவிக்குரிய கன்னங்கள், நமது உள்ளான பரிசுத்த அலங்காரத்தை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாவிட்டால், நமது ஆவிக்குரிய கன்னங்கள் முக்காட்டின் நடுவே அழகாக இருக்கவே இருக்காது!

Next...... மணவாட்டியின் கழுத்து