உன்னதப்பாட்டின் மேன்மை

உன்னதப்பாட்டின் மேன்மை

சாலமோனின் உன்னதப்பாட்டு மிகுந்த ஆறுதலும் அலங்காரமும் கவர்ச்சியும் பொதிந்த சிறந்த நூலாகும். இது பின்வாங்கிப்போய்க்கொண்டிருக்கும் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபைக்காக எழுதப்பட்டிருக்கிறது. அவரது சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள் பாவ இன்பங்களாகிய பாழான இடங்களில் காணாமல் போய்விட்டார்கள். ஆகவே, அவர்கள் மனதிலே ஆறுதலற்று அமைதி இழந்து,விரக்தியோடு கூட இருக்கிறார்கள் ! உன்னத நிலையில், சமாதானமும் சந்தோஷமும் நிறைந்து காணப்பட வேண்டிய மணவாட்டி, விழுந்துபோன பரிதாப நிலையிலிருக்கிறாள்!

சாலமோன் மூன்று நூல்கள் எழுதினார். முதலாவது தேவனால் கொடுக்கப்பட்ட விசேஷித்த ஞானத்தால் எழுதப்பட்ட "நீதிமொழிகள்". அடுத்தது "பிரசங்கி". இது அவருடைய ஞானத்தால் எழுதப்பட்டது என்பது மட்டுமல்ல! தேவனுடைய கட்டளைக்கு மீறி "அந்நிய ஜாதியரான அநேகம் ஸ்திரீகள் மேலும் ஆசை வைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்". 1 ராஜாக்கள் 11:1-4 என்றபடி தேவன் விரும்பாதவைகளைச் செய்ததினால், அவருடைய இருதயம் தேவனை விட்டு வழுவிப்போயிற்று. தன் சொந்த அனுபவங்கள் மூலம் உலகில் "எல்லாம் மாயை" என்பதையும் "எல்லா மனதுக்கு சஞ்சலம் தருவதே" என்பதை உணர்ந்து இதை எழுதினார். மூன்றாவதாக "உன்னதப்பாட்டு" என்ற நூல் சூலேமித்தியாளோடு அவருக்கிருந்த ஈடுபாட்டையும், பின்வாங்கிப்போன தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர் பாவமன்னிப்பைத் தந்து அந்த ஆத்துமாக்களை திரும்ப தன்னோடு சேர்த்துக்கொள்ளுவதில் அவர் உறுதியாயிருப்பதையும் அவருடைய மகா இரக்கத்தையும் அதில் திட்டவட்டமாக எழுதியிருக்கிறார்.

இந்நூல் தேவவாக்கியங்களை உள்ளடக்கியதோடு மட்டுமல்ல, விளங்கிக்கொள்ள முடியாத, அளவிடமுடியாத பேரன்பை கிறிஸ்து தன் மணவாட்டியின் மேல் செலுத்திக் கொண்டிருப்பதை முற்றிலும் நூதனமான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். கிறிஸ்து தனக்கென்று தேர்ந்தெடுத்த தன் மணவாட்டியின் மீது தனிப்படட முறையில் அவர் செலுத்தும் நித்தியமான அன்பை விசேஷித்தவாறு எழுதியிருக்கிறார்!

இந்த அற்புதமான, அன்பை மட்டுமே இது விளக்கும் நூல். "இயேசு தன் மணவாட்டிக்கு எழுதின அன்பு கடிதங்கள்", என்றும் கூறப்படுகிறது! ஆண்டவர் பின்வாங்கிப்போன தமது ஜனத்தின் மேல் தமது கோபத்தை ஊற்ற காத்திருப்பதாக் கூறும் தீர்க்கதரிசன ஆகமங்களுக்கு முன்னரே இந்நூல் வைக்கபட்டிருக்கிறது. இதில் எந்த ஆக்கினைத் தீர்ப்போ, குற்றச்சாட்டோ குறிப்பிடவே இல்லை! "பாவம்" என்ற வார்த்தை மற்ற நூல்களிலிருப்பது போல் இதில் காணப்படவில்லை! இந்த உயரிய நூல் இருந்திராவிட்டால், பரிசுத்த வேதமாகம், தன்னுடைய விசேஷித்த தன்மையையும் கம்பீர தன்மையையும் இழந்திருக்கக்கூடும்!

பின்வாங்கிப்போயிருக்கிற சபையைப் பார்த்து, கடந்துபோன வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தாலும், நடைமுறையிலுள்ள காரியங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இப்போது நீ இந்த பின்மாற்றத்திலிருந்து உடனே எழும்பு என்று இந்த நூல் கூறுகிறது!

கிறிஸ்து தாம் தெரிந்துகொண்ட மணவாட்டியின் மீது யாரும் புரிந்து கொள்ள முடியாத பேரன்பை பொழிகிறார்! எப்படிப்பட்ட அன்பு தெரியுமா? எத்தனை எத்தனை பாவங்களையும் மூடிப்போட்டு பின்னும் அடைக்கலம் தருகின்ற விசாலமான அன்பு! மணவாட்டியின் எல்லா அருவருப்பான காரியங்களையும், தகுதியற்ற தன்மையையும் பார்த்து தன் கண்களை மூடிக்கொண்டு, மேலும் மேலும் பொழிகிற அன்பு! "திரளான தண்ணீர்களைக்" கொண்டும் அவிக்க முடியாத கொழுந்து விட்டு எரியும் அன்பு! "பெரு வெள்ளங்களாலும்" மூழ்கடிக்க முடியாத விலையுயர்ந்த அன்பு! அந்த அன்பை யாரும் அளவிடவோ மதிப்பிடவோ முடியாது!

இந்நூல் சிறந்த கவிதை நயத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இது வரை எந்தக் கவிஞரும் இத்தனை கருத்தாளமும் பொருட்ச்செறிவும் கொண்ட நூலை எழுதியிருக்கவில்லை, எழுதப்போவதுமில்லை. ஓ! கிறிஸ்துவின் தர்பாரில் இசை அறிவு இல்லாத மனிதனான நான் இந்த பரலோக இசைக்கருவியை மீட்டத் தொடங்கியதும், அதாவது வீணையின் சில நரம்புகளை தொட்டதும், எனது நேசரின் இனிய, மெல்லிய சத்தத்தை என் ஆவிக்குரிய காதுகளில் கேட்டேன். இந்த வீணையில் எட்டு நரம்புகள், அதாவது எட்டு அதிகாரங்கள் இருக்கின்றன. முதலாவது நரம்பை நான் தொட்டவுடன் அன்பரின் சத்தத்தை கேட்க ஆரம்பித்தேன். அவரின் சத்தம் என் செவிகளில் ரீங்காரம் செய்ததே!உன் எல்லா வேலைகளையும் உதறிவிட்டு உன் நேசரோடு தனித்திருக்க வரமாட்டாயோ? இந்த தெய்வீக நாடகத்தில் சூலமித்தியாவினுடைய பகுதியை, மற்ற உலகத்து நடிகைகளைப்போல இல்லாமல், கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டியாக நடிக்க வர மாட்டாயா?

இந்த பரலோக இசைக்கருவியின் முதலாம் நரம்பை தொடலாமோ!

ஒவ்வொரு அதிகாரத்தின் அடங்கியுள்ள வசனங்களை தனித்தனியாக விளக்கி எழுதியிருக்கிறேன்.

(மொழியாக்கம் by Caroline Jeyapaul)

இந்த வெளியீட்டின் பொருளடக்கத்தை இங்கே கிளிக் செய்யவும்.

by Job Anbalagan

jobanbalagan@gmail.com