மணவாளன் தோட்டத்தில்

Previous.....நேசர் கனிகளைப் புசிப்பது

மணவாளன் தோட்டத்தில்

"என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்", என்று மணவாளன் எருசலேமின் குமாரத்திகளுக்கு சொல்கிறார் (உன்னதப்பாட்டு 5:1).இப்போது மணவாளன் தன் தோட்டத்திற்கு, அதாவது உன் ஊழிய இடத்திற்கு, வருகிறார் உனது செடிகளையும் மரங்களையும் காண விரும்புகிறார். கமிஃபோரா மரம் உண்டுபண்ணும் வெள்ளைப்போளம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், கிறிஸ்துவின் சரீரத்தின் பரிசுத்தத்தையும் குறிக்கிறது. கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாயிருக்கும் தேவ பிள்ளைகள் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் கந்தவர்க்கங்கள் எவையாகும்? அவரின் குணாதிசயங்களான அன்பு, இரக்கம், நீதி, தாழ்மை போன்றவைகள் கிறிஸ்துவின் கந்தவர்க்கங்களாகும். அவரின் பரிசுத்தமும் அவரின் கந்தவர்க்கங்களும் ஒன்றாகிறது. அவரின் பரிசுத்தத்தை அவரின் குணாதிசயங்களிலிருந்து பிரிக்கமுடியாது. அவரின் அன்பு பரிசுத்தமானது. அவரின் இரக்கம் பரிசுத்தமானது. அவரின் தாழ்மை பரிசுத்தமானது. மனிதர்களின் குணாதிசயங்கள் பரிசுத்தமானது அல்ல! கிறிஸ்து பரிசுத்தர். ஆனால் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட நாமோ பரிசுத்தவான்களாக்கப்படுகிறோம்! மணவாளன் பரிசுத்தத்தில் பிறந்தார். மணவாளியோ பாவத்தில் பிறந்தாள். அவருடைய கந்தவர்க்கங்கள் பரிசுத்தமானது. ஆனால் மணவாட்டியின் கந்தவர்க்கங்களோ பரிசுத்தமாக்கப்படுகிறது. கிறிஸ்துவின் பரிசுத்தம் அவரின் கந்தவர்க்கங்களோடு கலக்கப்பட்டிருக்கிறது.

தேனீக்கள் எப்படி தேனை பலவிதமான மலர்களிருந்து சேகரித்து தேன்கூட்டை கட்டுகிறதோ, நாமும் சத்தியத்தை பிரசிங்கிக்கும் உண்மையான பல போதகர்களிடும் போயோ அல்லது தனித்து ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தியானித்தோ, தேவ வசனங்களின் வெளிப்படுத்தல் பெற்று, ஒரு தேன்கூட்டில் கடைசியாக சேர்த்து வைக்கிறோம். தேவ ஊழியர்கள்

தேவ வசனத்தை தியானித்து, சரியாக விளக்கி கிறிஸ்துவின் தேன்கூட்டில் சேகரிக்கிறார்கள். இந்த தேனை பரிசுத்தாவியானவர் சுவைப் பார்த்து, உண்மையான, கலப்படம் இல்லாத தேன் என்று சாற்றுதல் கொடுக்கிறார். இன்று மார்க்கெட்டில் தேன் வாங்குகிறோம். அதில் கலப்படம் இருக்கிறது. ஆனால் நேராக தேன்கூட்டிலிருந்து, தேனை எடுப்போமானால் அது சுத்தமானதாக இருக்கும். நமது தோட்டங்களிலுள்ள உண்மையான தேவ ஊழியர்கள் கண்டிப்பாக தேன்கூடுகளை வைத்திருப்பார்கள். அநேக கர்த்தருக்குள் நித்திரையடைந்த ஊழியர்களின் கடிதங்கள், புத்தகங்கள், blogs, போன்றவைகள் இந்த தேன்கூடுகளில் தேவனால் பத்திரமாக பாதுக்காக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவின் தேன், கலப்பு இல்லாத தேவ வசனம் ஆகும். கிறிஸ்து இந்த தேனை தன் தேன்கூட்டோடு புசிக்கிறார். நான் 15 வருடமாக எழுதிய "என் நேசரின் சத்தம்" என்ற புத்தகத்தை என் நேசர் அவரின் தேனோடு புசிக்கிறார்.

கிறிஸ்துவின் திராட்சரசம் என்பது அவர் சிந்திய இரத்தம். நற்கருணையின் மூலம் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர் அவரது பாடுகளை நினைவு கூர்ந்து இந்த பானத்தைப் பருகுகிறார்கள். கிறிஸ்துவின் பால் என்பது தேவ வசனத்தின் அடிப்படை தத்துவங்கள். தேவ வார்த்தையும் கிறிஸ்துவின் இரத்தமும் ஒன்றாகவே இருக்கிறது. கிறிஸ்து தரும் பரிசுத்த ரத்தமும், அவரின் பாலான அடிப்படை தேவ சத்தியங்களும் ஒன்றாகவே இணைந்து இருக்கிறது. இந்த அடிப்படை தத்துவங்களை அறியாமலிருந்தால், ஒரு புதிய விசுவாசி ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமுடியாது. யூதர்கள் தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று கள்ள போதகர்கள், இரத்தத்தை சிந்தி மரித்து எழும்பிய கிறிஸ்துவை பிரசிங்கிக்காமல், வேறு ஒரு கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள்.

"சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்", என நம்மை வேண்டிக்கொள்கிறார். இந்த அடிப்படை சத்தியங்களை விசுவாசிப்பதின் மூலம்தான், நமக்கு அவரது இரத்தத்தின் வழியாக கிடைக்கும் இரட்சிப்பை அனுபவமாக்கிக்கொள்ளலாம். இன்று நமக்கு, கள்ள போதகர்கள் குடிக்க கொடுக்கும் பானமானது, கலப்படம் உள்ளதாகும். இந்த கலப்பட தத்துவங்களை ஏற்றுக்கொண்டு அநேகர் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என ஏமாந்துபோயிருக்கிறார்கள்.

Next..... என் நேசரின் சத்தம்