நகரத்திலே திரிகிற காவலாளர்

Previous...

Previous.....ஆத்தும நேசரைக் காணவில்லை

நகரத்திலே திரிகிற காவலாளர்

"நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்" (உன்னதப்பாட்டு 3:2-3). தனது மணவாளனைப் பிரிந்து அவரைத் தேடும் மணவாட்டி தன் தோழிகளை நோக்கி இவ்வாறு கூறுகிறாள். தனது மணவாளனின் நேசத்தால் நோயுற்று, மனம் உடைந்த மணவாட்டி அவரைத் தேடி, அரசர்கள், அறிவாளிகள் வசிக்கும் நகரத்தில் பிரவேசிக்கிறாள். வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து நடக்கிறாள். கிராமத்து பெண்ணிற்கு இந்த நகரம் குழப்பத்தை விளைவிக்கிறது. அங்கே குறிகிய தெருக்களைக் காண்கிறாள். பின்பு விசாலமான வீதிகளைக் காண்கிறாள். அருமையான மணவாட்டியே, நீ கிறிஸ்த மதத்திலுள்ள நகரத்தில், சுவிசேஷத்தில் அறிவிக்கப்பட்ட இயேசுவை தேடுகிறாய்! உன்மேல் சுமத்தப்படும் அநேக கட்டளைகளை குறிகிய தெருவில் காண்கிறாயா? அதை செய்யாதே, இதை செய், என்ற கட்டளைகளை உனது சபைகளில் கேட்டு, அந்த குறிகிய தெருவில் மணவாளனைத் தேடுகிறாயா? பழைய ஏற்பாட்டின் கட்டளைகள் கூட அநேக கட்டளைகளை கூட்டுகிற குறிகிய தெருவில் அலைந்து திரிகிறாயா? பின்பு விசாலமான வீதிகளில், "உன் மனம்போல வாழலாம். இங்கே எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது", என்று கேட்கிற கிறிஸ்தவ நகரத்தில் உன் மணவாளனைத் தேடுகிறாயா?

நகரத்தில் உலக அறிவாளிகளும் உலக அரசர்களும் (அரசியல்வாதிகள்) சேர்ந்து வசிப்பதைக் காண்கிறாயோ? அதாவது, இன்று அநேக கிறிஸ்துவ ஊழியர்கள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடம் தங்களுக்கு சலுகைகள் கிடைக்க தொடர்புகள் வைத்துயிருப்பதை காண்கிறாயோ? வேதஅறிவினால் உலக பட்டங்களைப் பெற்ற உலக ஞானிகளைப் போல பட்டங்களை பெற்ற சபை போதர்களையும், சுவிசேடர்களையும் காண்கிறாயோ?

நகரத்திலே திரிகிற காவலாளர் அலைந்து திரியும் மணவாட்டியை காண்கின்றனர். மணவாட்டியே, நீ கிறிஸ்தவ உலகத்தில் காணும் காவலாளர் தேவ வசனத்தைக் பாதுகாக்கும் காவலாளர் அல்ல! தங்களது சபைகளை பாதுகாக்கும் போதகர்களே! தங்களது சுவிசேட ஊழியத்தை பாதுகாக்கும் பிரசங்கிமார்களே! இவர்களுக்கு ஒரு தனிப்பட்ட ஆட்டைக் குறித்து கவலை இல்லை! ஒரு பெரிய கூட்டத்தைக் குறித்துத்தான் கவலை! இவர்களுக்கு கிராமங்களில் வசிக்கும் பாமர மக்களைக் குறித்தோ கவலை இல்லை. இவர்களின் ஊழியங்கள் எல்லாம் நகரங்களில்தான்!

மனமுடைந்து, நம்பிக்கையிழந்த மணவாட்டி நகரத்திலே திரிகிற காவலாளரிடம் போய், என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று கேட்கிறாள். இந்த காவலாளர் கண்ட கிறிஸ்து வேறு ஒரு கிறிஸ்து. கிறிஸ்துவின் முழுமையான ஆள்தத்துவத்தை அறியாதவர்கள்! கிறிஸ்து ஒரு பாவத்தை மன்னித்து இரட்சிப்பு கொடுக்கும் இரட்சகர், அற்புதம் செய்பவர், சுகம் கொடுப்பவர் என்று மாத்திரமே பிரசிங்கிக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் துன்பத்தை அனுபவிக்கும் தேவ மக்களின் உணர்வுகளை அறியாதவர்கள். தங்கள் அங்கமாயிருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தை அறியாதவர்கள். இவர்கள் கிறிஸ்துவை உண்மையாவே நேசிப்பவர்கள் அல்ல. ஏனென்றால் இவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தை நேசிக்காமல் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்று கூறும் மாய்மாலக்காரர்களே!

உன்னதப்பாட்டின் மணவாளி காணும் நகரத்திலே திரிகிற காவலாளர் உண்மையான மணவாளனை கண்டதே கிடையாது. “என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து, என்று தன் மணவாளனின் மர்மமானதும், அதிசயமானதும் ஆள்தத்துவத்தை மணவாட்டி வர்ணித்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 1:14). எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்தாக மலரும் கிறிஸ்துவாகிய மணவாளனை அந்த காவலாளர் கண்டதே கிடையாது!

Next......ஆத்தும நேசரைக் கண்டேன்