மணவாளனின் அற்புத திராட்சரசம்

Previous....மணவாளியின் உயரமும் ஸ்தனங்களும்

மணவாளனின் அற்புத திராட்சரசம்

சூலமேத்தியாள் இப்போது பேச்சில் குறுக்கிட்டு மணவாளனின் வாயைப் புகழுகிறாள். "உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது" (உன்னதப்பாட்டு 7:9). தமிழில் தொண்டை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலோ "Roof of thy mouth" என்று எழுதியிருக்கிறது.

மணவாளனின் வாயிலிருந்து ஜீவ வார்த்தைகள் புறப்பட்டு நல்ல திராட்சரசத்தைப் போல மணவாளிக்கு பயன்தருகிறது. கானா ஊர் கல்யாணத்தில் திராட்சரசம் குறைவுபட்டவுடன் இயேசு கடைசியிலுள்ள திராட்சரசத்தை ஆசிர்வதித்து அதை பெறுக செய்து, நல்ல சுவை உள்ளதாக மாற்றினார். இது ஒரு தரத்தில் உயர்ந்த திராட்சரசம். எந்த மனிதரால் உண்டுபண்ணமுடியாது. உனது வாழ்க்கையிலும் இந்த அற்புதமான திராட்சரசம் அநேக வருடங்கள் கழித்து ஆண்டவர் தரப்போகிறார். இந்த திராட்சரசம் என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதாக இருக்கிறது. உன் நேசரே இந்த திராட்சரசத்தை சுவைத்து உனக்கு கொடுக்கிறார். இது உனக்கென்று அவர் கைகளினால் தயார் பண்ணினது. இது எப்படிப்பட்ட ஆசிர்வாதம் என்றும் அது எவ்வாறு உன் வாய்க்கு சுவைக்கும் என்றும் அவருக்கு நன்றாகவே தெரியும். தெய்வீக எழுத்தர் இந்த திராட்சரசத்தை பருகினால் உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணும் என்று எழுதுகிறார். இதை குடித்து போதை உண்டாகும் என்று எழுதாமல் இவ்விதமாக எழுதுகிறார். இந்த ஆசிர்வாதத்தை பெறும்போது உனக்கே ஆச்சரியமாக இருக்கும். மது குடித்தவன் மதி மயங்கி உளறுவதுபோல நீ உணர்வாய்!

கிறிஸ்து நமக்கு சரியான வார்த்தையை திராட்சரசம் போல சரியான நேரத்தில் தந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறார். அவரே மெய்யான திராட்சைக்கொடி! நமக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு திராட்சைப் பழம் பிழியப்படுவதைப் போல் பிழியப்பட்டு நம்மை ஆசிர்வதிக்கிறார். அவரது வார்த்தைகள், புரட்டப்படாமல் இருக்குமானால், நமக்கு திராட்ச ரசம் போல இன்பம் அளிக்கிறது! இன்று தேவப்பிள்ளைகள் தேவ வார்த்தைகளை தியானித்து அவரின் ஆசிர்வாதத்தை பெறாமல், அங்கும் இங்கும் ஓடி அவரின் "வாக்குத்தந்தங்களை" பெற முயல்கிறார்கள். மணவாளனான இயேசு அவர்களின் அருகிலும், அவர்களின் உள்ளிலும் இருப்பதை அறியாதிருக்கிறார்கள்.

Next..... நான் என் நேசருடையவள்