நீ பூரண ரூபவதி

Previous....மணவாளனின் உன்னத மலைகள்

நீ பூரண ரூபவதி

என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை", என்று சோகத்தில் மூழ்கி கிடக்கும் மணவாட்டியை நோக்கிப் பாடுகிறார் (உன்னதப்பாட்டு 4:7). நான் கறுப்பாக இருக்கிறேன் என்று தன்னை எப்போதும் நொந்துகொண்டிருக்கும் மணவாட்டியை இவ்வாறு அடிக்கடி தேற்றுகிறார். உன்னதப்பாட்டு அவரின் காதல் காவியம். இந்த காவியத்தின் முக்கிய சாரம் எந்த வசனத்தில் அடங்கியிருக்கிறது. "நீ ரூபவதி" என்று மாத்திரம் அழைக்காமல், "நீ பூரண ரூபவதி", என்று அழைக்கிறார். மற்ற தேவப்பிள்ளைகளின் கண்களில் நீ கறுப்பாக இருந்தாலும், அவருடைய கண்ணாடியை உனக்குமுன் பிடித்து," என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை", என்கிறார். இதுதான் உன்னைக்குறித்து அவரின் சாட்சி! சாத்தானோ, வேறு எந்த மனிதனோ அல்லது உங்களது குடும்பத்தாரோ உன்னை விரல் நீட்டி உனது பழைய கால வாழ்க்கையை அல்லது பலவீனங்களை குறித்து ஞாபகப்படுத்தலாம். நீயும் தற்பரிசோதனை செய்து உன்னை வெறுத்து குற்ற மனப்பான்மையுடன் இருக்கலாம். "நான் இந்த உலகில் வாழ்ந்து யாருக்குமே பிரயோஜனம் இல்லை", என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் உனது தெய்வீக மணவாளன், "உன்னில் பழுதொன்றுமில்லை", என்று திட்டவட்டமாக கூறுகிறார். மணவாட்டியே, எழுந்து நில்! மணவாளனின் சாட்சியை ஏற்றுக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை இன்றே ஆரம்பித்துக்கொள்! காலம் தாமதிக்காதே! நீ சரீரத்தில் குறைவு உள்ளவனாகவோ, அழகில் குறைவு உள்ளவளாகவோ இருக்கலாம். தேவனுடைய பார்வையில் பழுது இல்லாதவன்/இல்லாதவள்!

" நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்", ஏசாயா 43:4.

Next..... என்னோடே வா