என் புறாவே

Previous......மாரிகாலம்

என் புறாவே

தனது மணவாட்டியின் முகத்தை கண்டு அவளது குரலை கேட்கவிரும்பும் மணவாளன் அவளை நோக்கி,"கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது" என்றார் (உன்னதப்பாட்டு 2:14). "என் புறாவே", என்று மணவாளன் உன்னை அழைக்கிறார். நீ, தீமை விளைவிக்காத, கள்ளம் கபடமில்லாத ஒரு புறாவைப்போல அவரது அன்பினால் கவரப்பட்டு அன்பினால் கட்டப்பட்ட அவரது கூட்டில் அடைபட்டு இருக்கிறாய்! நீ அவருடையவள்!எந்த மனிதனுக்கும் சொந்தமானவள் அல்ல. எந்த சபைக்கும் சொந்தமானவள் அல்ல! நீ வசிக்கும் இடம் எல்லோரும் காணும்படியான ஒரு மாளிகை அல்ல. ஒரு மறைவிடம் தான்! எல்லாரும் காணும்படியான ஒரு மேடை அல்ல! கன்மலையின் வெடிப்புகளும், சிகரங்களின் மறைவிடங்ளும் தான்! மெய்யாகவே உனது இருப்பிடம் யாருமே எடடக்கூடாத இடமே! இந்த குறுகலான இடத்தில் நீ சந்திப்பது தொடர்ச்சியாக வரும் உபத்திரவங்களும் துன்பங்களும் தான்! இந்த மறைவிடங்களில் புகழுக்கும் கீர்த்திக்கும் இடமில்லை.

மறைவிடங்களில் வசிக்கும் நீ கிறிஸ்துவின் புறா! உனக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்த கன்மலையின் வெடிப்புகளும், சிகரங்களின் மறைவிடங்களும் தான். நீ ஆடியோடி, பல இடங்களுக்குப் பறந்து செய்து ஊழியம் செய்தாலும் நீ இந்த மறைவிடங்களுக்குத்தான் திருப்பி வரவேண்டும். நித்திய கன்மலையான கிறிஸ்துவின் மறைவிடங்கள் தான் உனக்கு எல்லா பாதுகாப்பும் கொடுக்கிறது. சாத்தானின் தாக்குதலிருந்தும், கொடிய நோய்களிலிருந்தும் உனக்கு அடைக்கலம் கிடைப்பது இந்த மறைவிடங்களில் தான். இந்த கன்மலை உனக்காக உடைக்கப்பட்டு ஒரு பாதுகாப்பான அரணை அமைத்திருக்கிறது. இந்த கன்மலையின் மேல் நிற்காதே! நீ சேவை செய்யும் மக்கள் இந்த நித்திய கன்மலையை மாத்திரம் காணவேண்டும்.

அவர் சரீரத்தின் பிளக்கப்பட்ட காயங்கள் தான் உனக்கு புகலிடம் தருகிறது. நீ இந்த புகலிடத்தில் இருக்கும்போது தான், அவரது செட்டைகளின் அடைக்கலமும் பாதுகாப்பும் உனது ஆத்துமாவிற்கும் சரீரத்திற்கும் கிடைக்கிறது.

சிகரங்களின் மறைவிடங்கள் எங்கே இருக்கிறது? வீடுகளின் படிக்கட்டு அடிகளில் உள்ள மறைவிடங்களில் புறாக்கள் தங்குகின்றன. வீடுகளுக்குப் போகும் மனிதர்கள் இந்த புறாக்களின் மேல் கவனம் செலுத்துவதில்லை. "உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்". (ரோமர் 12:3). தேவனால் வல்லமையாக உபயோகப்படுத்தப்பட்ட அப்போஸ்தலன் பவுல், "நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்..." (2 கொரி 12: 6). ஒரு சிகரங்களின் மறைவிடத்தில் வசிக்கும் புறாவைப் போல உன்னை மறைத்துக்கொள்ளவேண்டும். உன்னைக் குறித்து மிஞ்சி எண்ணாமல், தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே நீ ஊழியம் செய்யவேண்டும். சுவிசேடகன் பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்கு சுவிசேஷம் அறிவித்துபின், "மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்" (அப்போ 3:39).

நீ, நம்பிக்கை இழந்து, மன விரக்தியுடன், குற்ற மனச்சாட்சியுடன், உனது முகத்தை உன் மணவாளனிடமிருந்து மறைத்துக்கொண்டிருந்தால், அவர் உன் காதுகளில் இரகசியம் பேசுகிறார், "என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது". நீ "கறுப்பாயிருக்கிறேன்" என்று சொல்லாதே! உன் சத்தம் அவருக்கு இன்பமாயிருக்கிறது! உன் முகரூபம் அவருக்கு அழகுமாயிருக்கிறது! இதுதான் உன்னைக்குறித்து அவரின் சாட்சி!

Next...... திராட்சத்தோட்டங்களில் நரிகள்