மணவாளியின் கழுத்து, கண்கள், மூக்கு

Previous......மணவாளியின் ஸ்தனங்கள்

மணவாளியின் கழுத்து, கண்கள், மூக்கு

"உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது", என்று சூலமித்தியாளின் தோழிகள் மணவாளியின் கழுத்தைப் இப்போது புகழ்கிறார்கள் (உன்னதப்பாட்டு 7:4). மணவாட்டியே, உன் கழுத்தும், உன் மூக்கும் மணவாளனின் பார்வையில் பூர்ணமுள்ளதாக காண்கின்றது. உன் கழுத்து எப்போதும் குனியாமல் நிமிர்ந்து உன் கழுத்தை உயர்த்தி உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவரை நோக்கிப் பார்க்கவும் (ஏசாயா 6:1). எப்போதும் உன் கழுத்து நிமிர்ந்து இருக்கவேண்டும். துன்ப கஷ்ட நேரங்களில் கழுத்தை உயர்த்தி பாலோகத்தை நோக்கி உயர்த்தவும். உன்னதப்பாட்டு 4:4 ம் பகுதியில், மணவாளியின் கழுத்து, "பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது", என்று மணவாளன் அவளது கழுத்தை வர்ணிக்கிறார். இந்த வசனத்தில் அவளது கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போல பலமாகவும், உறுதியாகவும் இருப்பதாக வர்ணிக்கிறார்.

மணவாளியின் கண்கள் எப்போதும் கண்ணீர் நிறைந்து எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போல இருக்கவேண்டும். லேவியர்களின் பட்டினம் என்று அழைக்கப்படும் எஸ்போன் பழைய நகரத்தை ரூபன் காட்டினான். "எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது" (எண் 21:28). நீ ஒரு லேவியனைப் போல தேவ சமூகத்தின் முன்பு நின்று கண்ணீர் விட்டு மற்ற தேவ ஜனங்களுக்காக வேண்டிக்கொள்ளும்போது கர்த்தரிடமிருந்து அக்கினி புறப்பட்டு சாத்தானின் அல்லது அந்திக்கிறிஸ்துவின் சகல வல்லமையையும் அழித்துப்போடுகிறது.

மூக்கின் வழி நாம் முகர்ந்து பார்க்கிறோம்; சுவாசிக்கிறோம். கிறிஸ்துவின் மணவாளியான நீ முன்பு இந்த உலகத்தின் பாவ இன்பத்தை முகர்ந்தாய். இப்போதோ மணவாளனின் பரிசுத்த நற்மணத்தை முகர்ந்து, எங்கும் உன் பரிசுத்த வாழ்க்கையின் மூலம் பரப்பவேண்டும்.

நீ, என்று பாவமன்னிப்பு பெற்று பரிசுத்தாவியாவாரை உன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டாயோ, அன்றே உனது பழுதடைந்த கண்கள், உதடு, மூக்கு, காது போன்ற உறுப்புக்கள் கிறிஸ்துவிற்குள் பூரணமடைந்துவிட்டது. இவைகளை உன் மாமிச பலத்தால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உன்னில் வாழும் ஆவியானவரின் உதவியோடும், அர்ப்பணிப்புடன், கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து புலன்களை அடக்கி கட்டுப்படுத்த முடியும்.

இரத்தாம்பரமயமாயிருக்கிற உன் தலைமயிர் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைக் குறிக்கிறது. மணவாளியின் அடைக்கலம் சிலுவையின் கீழே தான். அவளது சிரசு, தனது மகிமையான தலைமயிரருடன், முள்மூடி அணிந்து இரத்தம் வடித்த மணவாளனின் சிரசையும், இரத்தம் தோய்ந்த தலைமயிரையும், பிரதிபலிக்கிறது.

தோழிகள் பாராட்டும் மணவாளியின் அழகில் மயங்கி மணவாளன் நடைகாவணங்களில் மயங்கிநிற்கிறார். இதுதான் யாரும் புரிந்துகொள்ளமுடியாத மணவாளனின் மர்மமான நேசம்.

Next...... மனமகிழ்ச்சியை உண்டாக்கும் மணவாளி