மணவாளியின் நாபி, வயிறு

Previous....ராஜகுமாரத்தியின் பாதங்கள்

மணவாளியின் நாபி, வயிறு

உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது", என்று தொடர்ந்து சூலமித்தியாளின் தோழிகள் மணவாளியின் கவர்ந்திழுக்கும் ஆளுமையை புகழ்கிறார்கள் (உன்னதப்பாட்டு 7:2).

வயிற்றின் நடுவிலுள்ள தொப்புள் பார்ப்பதற்கு முக்கியமானதாக தோன்றாது. ஏனென்றால் இதற்கு எந்தவிதமான வேலையோ கிடையாது. ஆனால் தேவனின் பார்வையில் விலையேறப்பட்டது. தொப்புள் கொடியின் மூலமாக தாயின் சரீரத்திலிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை வளர்ந்து பெரிதாகி வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த கொடி அவிழ்ந்துவிடுகிறது. தொப்புள் கொடி ஒரு உயிர்ப்பாதையாகும். கருவில் வளரும் குழந்தைக்கு அருகிலேயே அது உள்ளது. அது தான் குழந்தையை உயிருடன் வைத்திருக்கிறது.

இதைப்போல ஒரு ஆத்துமா மறுபடியும் பிறக்கும்போது பரிசுத்தாவியானவர் அந்த ஆத்துமாவிற்கு தேவ வார்த்தையின் மூலம் உயிர் கொடுத்து, பின்பு பரிசுத்தாவியானவர் அந்த ஆத்துமாவில் பிரவேசித்து வாசம் பண்ண தொடங்குகிறார். அந்த ஆத்துமா மறுபிறப்பு அடையும் போது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மூலம் அதற்கு ஒரு நேரான உயிர்ப்பாதை உருவாகி ஆவியில் பிறக்கின்றது. பிறந்தவுடன் இந்த நேரான உயிர்ப்பாதை துண்டிக்கப்பட்டு, பரிசுத்தாவியானவரே அந்த ஆத்துமாவில் வாசம் பண்ண தொடங்குகிறார். அதன்பின்பு அந்த நேரான உயிர்ப்பாதை (Umblical cord) துண்டிக்கப்படுகிறது. முன்னே நடந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களோ, தரிசனங்களோ மறுபடியும் நேரிடாது. கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில், இந்த ஆவிக்குரிய பெண்ணின் தொப்புள், அதாவது தேவனின் ஆவி ஒரு பாவிக்கு இரட்சிப்பு அளித்ததற்கு அடையாளமாக விளங்குகிறது.

மணவாளியே உன்மூலம் ஆவிக்குரிய மறுபிறப்பு அடைந்த தேவ பிள்ளைகள் உன் ஆவிக்குரிய நாபியை கண்டு உன்னுடைய ஊழியத்தின் மூலம் அவர்கள் ஆவிக்குரிய மறுபிறப்பு அடைந்ததை நினைவுகூர்கிறார்கள். "உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது என அவர்கள் புகழ்கிறார்கள்.

தெய்வீக எழுத்தர் "திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்" என்ற வார்த்தைகளை இங்கே உபயோகப்படுத்துகிறார். இது ஒரு வட்டக்கலசம். இந்த கைப்பிடி இல்லாத வட்டக்கலசத்தின் மூலம் யாருமே பிடித்து இழுத்துக் பானத்தை குடிக்காமல் எல்லாருமே சேர்ந்து ஒன்றாகவே குடிக்கலாம். இந்த திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் பரிசுத்த நற்கருணையின் மேன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமாகிய திராட்சரசத்தை மணவாட்டியான நாம் எல்லா தேவ பிள்ளைகளுடன், சபை பாகுபாடு, இனப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு காணாமல் பகிர்வோமாக!

"உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது" என்றும் புகழ்கிறார்கள். உன் வயிறு ஆகாரம் ஜீரணிக்கும் ஒரு செயல்முறையை குறிக்கிறது. மணவாட்டி தனது ஆவிக்குரிய பற்கள் மூலம் தேவ வார்த்தைகளை உட்கொண்டு உன் ஆவிக்குரிய வாழ்க்கையை பலப்படுத்தவேண்டும். நீயேதான் உட்கொள்ளவேண்டும். கரண்டியை வைத்து யாரும் உன்னை ஊட்டவேண்டாம். நீயே உட்கொண்டு மற்ற தேவப்பிள்ளைகளுக்கு கிழே கூறப்பட்டபடி தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும். வெறுமனே மனப்பாடம் செய்தல் அல்ல! இவைகளை உன் வாழ்க்கையில் கடைப்பிடித்த பின்பு மற்றவர்களுக்குப் போதிக்கவேண்டும். அப்போதுதான் உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கும்.

".....அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து: மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது" (எசேக்கியேல் 3 :1-3).

கிறிஸ்துவின் மணவாட்டியான நீ, வனாந்தரத்திலே அலைந்து திரியும் போது, அவரின் வார்த்தைகளை உட்கொண்டு, கீழ்ப்படிந்து உன் ஆத்துமாவை பலப்படுத்தவேண்டும். நமது உணவில் கோதுமை முக்கியமானது. இது ஆவிக்குரிய உணவான தேவ வார்த்தைகளாகும். இந்த கோதுமை பெரும் குவியலை சுற்றி வெண்மையான, சுத்தமான, அழகான லீலி புஷ்பங்கள் இருக்கின்றனவாம். வேத வசனங்களை கலப்படம் அல்லது திரித்தல் இல்லாமல் போதிக்கவேண்டும்.

Next.....மணவாளியின் ஸ்தனங்கள்