கந்த வர்க்கங்களின் மலைகள்

Previous.....மணவாளியின் குரல்

கந்தவர்க்கங்களின் மலைகள்

இந்த புத்தகத்தின் கடைசி வசனத்தில், இப்போது மணவாட்டி தன் ஆத்தும மணவாளனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்: "என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும் (உன்னதப்பாட்டு 8:14).மணவாளனை தன்னிடம் தீவிரிக்க வேண்டுகிறாள். தன்னிடத்தில் வந்து அவளை கந்தவர்க்கங்களின் மலைகளுக்கு அவருடன் கூட அழைத்துச்செல்லும்படி விரும்புகிறாள். கந்தவர்க்கங்களின் மலைகளின் மலைகள் தான் அவரின் இருப்பிடம். அவரது முழு ஆள்தத்துவம் வெளிப்படும் ஒரு ஆன்மிக இடம்தான் கந்தவர்க்கங்களின் மலைகள். அவருடைய முழு பிரசன்னம் இங்கே வெளிப்படுகின்றது. பரிசுத்தமும், நீதியும், கிருபையும், இரக்கமும் தங்கும் இடம். சாத்தானின் சேனைகள் நுழைய முடியாத உன்னதமான இடம். இந்த உலகத்திலேயுள்ள எல்லா பர்வதங்களையும் விட உயர்ந்தது.

கந்தவர்க்கங்களின் மலைகளில் வசிக்கும் வெளிமானும், மரைகளின் குட்டியும் வேகமாக ஓடக்கூட்டியது. மற்ற பர்வதங்களில் வசிக்கும் வெளிமான்களை விடவும், மரைகளின் குட்டியை விடவும் வித்தியாசமான மிருகங்கள். இந்த மான்களும் குட்டிகளும் தீவிரித்து ஓடுவது போல மணவாளன் தன்னிடம் வேகமாக வர விரும்புகிறாள்.

நாமும் நமது ஆத்ம மணவாளனின் பிரசன்னத்தை உணரும்படி, அவரை இந்த கவிதையில் எழுதியிருப்பதுபோல, வருந்தி அழைக்கவேண்டும். அவர் எங்கும் வியாபித்து இருந்தாலும், அவரது பிரசன்னத்தை நாம் உணரும்படி அவரை நாடவேண்டும். நாம் மாமிச சரீரத்தில் ஜீவிக்கிறபடியால்,விசுவாசத்தில் அநேக நேரங்களில் குறைபட்டுவிடுகிறோம். நமது உணர்வுகளை தேவன் நன்கு அறிகிறார். ஆகவேதான் நாம் அவரின் பிரசன்னத்தை உணர்வது அவசியம்.

உன்னதப்பாட்டின் புத்தகத்தின் மேன்மையே உணர்வுகளை வெளிப்படுத்தி காண்பிப்பதுதான்!