வனாந்தரத்திலிருந்து வருகிறவர்

Previous....மணவாட்டியை விழிக்கப்பண்ணாமல்

வனாந்தரத்திலிருந்து வருகிறவர்

"வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?," என்று மணவாட்டி தன் தோழிகளிடம் மணவாளனைப் பற்றி கேட்கிறாள் (உன்னதப்பாட்டு 3:6). ஆச்சரியப்படத்தக்க, தன் மணவாளனை நன்கறிந்த மணவாட்டி, அவர் வனாந்தரத்திலிருந்து வரும்போது அடையாளம் கண்டுக்கொள்ளமுடியாமல் தன் தோழிகளிடம் இவர் யார்? என வினவுகிறாள். இயேசுவும் வனாந்தரத்தில் 40 நாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். தனது மிஞ்சிய நாட்களிலும், வனாந்தரத்தின் துன்பங்களை தன் வாழ்க்கையில் அனுபவித்தார். கஷ்டத்தோடு உழைத்து, பட்னியாலும், தாகத்தாலும் வாழ்நாட்களைப் போக்கினார். மாளிகையில் வசிக்காமல், தெருக்களிலும், மரத்தடியிலும் தன் சீடர்களோடு வசித்துவந்தார். தனக்கென்று தலை சாய்க்க இடமில்லை. தனித்திருந்து ஜெபிக்க வனாந்தரத்தை நாடினர். புகழ் பரவ, மக்கள் அவரைப் பின் தொடர, அவர் வனாந்தரத்திலே பிதாவோடு தனித்திருந்தார். சிலுவையில் அறையப்பட்டதும் கபால ஸ்தலம் என்ற வனாந்தரமே! இன்று இயேசுவிற்கு ஊழியக்காரர்கள் என்று விளம்பரப்படுத்துகிறவர்கள் அவரைப்போல வனாந்தரத்தில் தங்களை ஒளித்துக்கொள்ளவில்லை. தங்களுக்கென்று ஒரு மேடை அமைத்து பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள். வனாந்தரத்தில் வசிப்போமானால் நமது புகழுக்கு மரிக்கவேண்டியதாயிருக்கும். மக்களின் புகழுக்கு விலக்கிக் காத்துக்கொள்வோம். நமது பெயர்களை விளம்பரப்படுத்தவேண்டாம்.

வனாந்தரமானது ஒரு தனிமையின் இடம். அங்கே நீங்கள் அனுபவிப்பது பாடுகளும், போராட்டங்களும், நிந்தைகளும் தான். அங்கே சாத்தானின் போராட்டங்களிலிருந்து விடுதலை உங்களுக்கு கொடுப்பது தேவகுமாரன்தான். எந்த மனித உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.

இயேசுவும் இந்த வனாந்தரத்தில் பிறந்தது முதல் சிலுவை மரணம் வரை இங்கேதான் இருந்தார்.

உன்னதப்பாட்டின் மணவாட்டி தனது அபூர்வமான மணவாளன் வனாந்தரத்திலிருந்து வருவதை காண்கிறாள். எவ்விதம் வருகிறார்? வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வருகிறார். மணவாட்டியின் மனதில் சந்தேகம் உண்டாகும்படி, வனாந்தரத்திலிருந்து வருகிற அவரின் சாயல் மாறிவிட்டது! உயிர்த்தெழுந்த இயேசுவின் சாயல் மாறி சீடர்களுக்கு வித்தியாசமாக காட்சி அளித்தார்.

மணவாளன் தூபஸ்தம்பங்களைப்போல் காட்சியளிக்கிறார். பகலில் மேகஸ்தம்பத்திலும், இரவில் வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் பிதாவின் மகிமையை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்தினவர் இந்த மணவாளன்தான். (யாத்திராகமம் 13:21). இந்த வாசனை புகை, வெள்ளைப்போளம், சாம்பிராணி, வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடிகள் ஆகியவைகள் அக்கினியில் எரிந்து, தூபமாக வருகிறது. வெள்ளைப்போளம், சாம்பிராணி போன்ற திராவியங்களை குழந்தை இயேசுவிற்கு பரிசாக கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் கொடுத்தனர். இந்த விலையுயர்ந்த வாசனை பொருட்கள் ராஜாவை அபிசேஷகம் பண்ண உபயோகப்படுத்தப்படுகிறது. மணவாளன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவர். இந்த ராஜ அபிசேஷகம் மணவாளியை தனக்கு ராணியாக்க உதவுகிறது. இது ஒரு பரிசுத்தத்தின் அபிஷேகம். இந்த அபிஷேகம் மணவாட்டிக்கு கிடைக்கவேண்டுமானால் அவள் அவரோடு வனாந்தரத்தில் தங்கியிருக்கவேண்டும். கைகளை வைத்து ஒரு நிமிடத்தில் கிடைக்கும் அபிஷேகம் அல்ல. பரிசுத்தாவியானவர் நமது வாழ்க்கையோடு இணைந்து கிறிஸ்துவை நமது பரிசுத்த சரீரங்களின் மூலமாக வெளிப்படுத்துவதுதான் இந்த அபிஷேகம்!

இந்த தூபஸ்தம்பங்கள் பாவத்தில் ஜீவிக்கும் எந்த ஆத்துமாவையும் சந்தித்து கிறிஸ்துவின் பரிசுத்த வாசனையை கொண்டுவருகிறது. இந்த தூபஸ்தம்பங்கள் பிதாவின் பலிபீடமாகிய கல்வாரியிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டது. இந்த நித்திய தூபஸ்தம்பங்கள் தேவ மக்களை எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நோய்வாய்ப்பட்டு தவிக்கும் தனது மக்களைத் தேடி வருகிறது. எந்தவிதமான நோயாக இருந்தாலும் சரி! இதோ, மருத்துவமனையில் மரணத்தை நோக்கியிருக்கும் உனது அன்பார்ந்த மக்களை ஒரு நொடியில் தொட்டு குணமாக்குகிறது. சாத்தனாலும், மரண தூதனாலும் இந்த தூபஸ்தம்பங்களை கடந்து உன்னிடம் வரமுடியவே முடியாது!

சூலமேந்தியாளுக்கு, தன் ராஜாவாகிய மணவாளன் வனாந்தரத்திலிருந்து வருவது ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அவள், தனது ராஜா அரச மாளிகையில் தான் இருப்பார் என்றும் தானும் அந்த மாளிகையில் நிரந்தரமாக அவரோடு வசிக்கலாம் என்றும் நினைத்திருக்கக்கூடும். இன்றும் அநேக தேவ மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன் ஒரு கஷ்ட துன்பம் இல்லாத அரண்மனை வாழ்க்கைக்குள் பிரவேசித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். மணவாளனின் காலடிச்சுவடுகள் பதிந்திருப்பது அரண்மனை தரையின் மேல் அல்ல! ஏனென்றால் அந்த தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது. நீ அவருடைய காலடிச்சுவடுகளை வனாந்தரத்தில் தான் காணமுடியும்.

இஸ்ரவேல் நாட்டின் "புனித" யாத்திரையில் அவரது காலடிச்சுவடுகளை தேடி ஓடிப்போக வேண்டாம். உங்களது ஆத்மீக வனாந்தரத்தில் தான் இவைகளை காணமுடியும். கிறிஸ்துவின் நாமம் அறியப்படாத இடங்களில் சுவிசேடம் அறிவித்து பல இன்னல்களை அனுபவித்து வரும், பெயர் அறிமுகம் இல்லாத, அவரது உண்மையான மணவாட்டிகள் (cross-cultural Missionaries) கண்டுபிடிக்கும் அவரது காலடிச்சுவடுகளை நீங்களும் கண்டுபிடிக்கலாம். மாமிச பிரகனமான இஸ்ரவேல் நாட்டிற்குப் போகாமல் இந்த மிஷன் பகுதிகளுக்குப் போனால், அவரது காலடிச்சுவடுகளை, கண்டிப்பாகக் கண்டுக்கொள்ளலாம். ஏனென்றால், கிறிஸ்து உண்மையாகவே இந்த இடங்களில் வெளிப்பட்டு, கலிலேய நாட்டில் செய்த அதே அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து வருகிறார்.

மணவாட்டியே, நீ ஒவ்வொரு தடவையும் வனாந்திர அனுபவத்திலிருந்து வெளிவரும்போது கிறிஸ்துவின் மகிமையால் ஆடை அணியப்படுகிறாய்.

Next.....சாலொமோனுடைய மஞ்சம்