#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக “தத் த்வம் அஸி” என்ற பெயரில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு, தற்போது மணிகண்டா எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை, அதைச் சுற்றிலும் தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்துள்ளன. விண்வெளியை நினைவூட்டும் பின்னணியும், ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும் போஸ்டருக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், இறைநம்பிக்கையையும் பக்தியையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தை உணர்த்துகிறது.
மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான பெரிய பாதையில் பயணித்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. பக்தி மற்றும் நம்பிக்கையுடன் ஆக்ஷன் காட்சிகளும் உணர்ச்சிகரமான தருணங்களும் இணைந்த திரைப்படமாக ‘மணிகண்டா’ உருவாகியுள்ளது. ஆன்மீகப் பின்னணியில் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. ‘காந்தாரா’, ‘ஹனுமான் அஞ்ச்’, ‘கருப்பு’ போன்ற பக்தி மற்றும் தெய்வீக அம்சங்கள் கலந்த படங்களின் வரிசையில், ‘மணிகண்டா’ திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர், ‘மணிகண்டா’ படத்தை இயக்கியுள்ளார். ஆன்மீகப் பின்னணியில் உருவாகும் கதையைப் பிரம்மாண்டமான திரை அனுபவமாக வழங்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, இசையமைப்பாளராக பிரேம் ஜி அமரன் பணியாற்றியுள்ளார். யுவன் செல்வா ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் வடிவமைத்துள்ளனர். ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ஜே.கே. சரவணா மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்துப் பணிகளில் இணைந்துள்ளனர். ஆன்மீகச் சூழலையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் திரையில் வெளிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றியுள்ளனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐயப்ப பக்தர்களுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதாவது 2026ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, ‘மணிகண்டா’ திரைப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.