நினைவெல்லாம் நீயடா - திரை விமர்சனம் - 3.5/5

தமிழ் சினிமாவில் மற்றுமொரு காதல் படம்; இளையராஜாவின் இசைப் பங்களிப்பில் 1417-வது படைப்பு!


பள்ளிக் காலத்தில் அவனும் அவளும் காதல் வயப்படுகிறார்கள். அவள் திடீரென வெளிநாடு போய்விட அவனால் அவளை எந்த விதத்திலும் தொடர்புகொள்ள இயலாமல் போய்விடுகிறது. காலச்சூழல் அவனை வேறொரு பெண்ணுக்கு கணவனாக்குகிறது.


15 வருடங்கள் கழித்து அவன் அந்த பள்ளிப் பருவ காதலியை சந்திக்கிறான். அந்த சந்திப்பில் விறுவிறுப்பான சில சம்பவங்கள் நடக்க, கடந்துபோன 15 ஆண்டுகளில் நடந்த பரபரப்பான நிகழ்வுகள் முன்கதையாக விரிகின்றன. இயக்கம் ஆதிராஜன்


நாயகனாக பிரஜன். காதலி இன்று வருவாள் நாளை வருவாள் என மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அவள் வீட்டை சுற்றிச் சுற்றி வருவது, கட்டாயத்தால் முறைப் பெண்ணை மணந்து அவளுடன் வாழப் பிடிக்காமல் சண்டை சச்சரவோடு நாட்களைக் கடத்துவது, குடிக்கு அடிமையாகி பிரச்சனைகளை சந்திப்பது, காதலியை பல வருடம் கழித்து பார்த்ததும் பரவசமாவது என இயல்பான நடிப்புப் பங்களிப்பால் சுற்றிச் சுழன்றிருக்கிறார்.


முறை மாமனான பிரஜனை காதலித்து, கல்யாணம் செய்துகொண்டு, மணவாழ்க்கையில் எந்த சந்தோஷமும் கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்படுகிற பரிதாபமான பாத்திரத்தில் மனிஷா யாதவ். அவரது பளபளப்பான தேகத்தையும் தளதளப்பான இளமையையும் பாடலொன்றில் பரிமாறியிருப்பது கண்களுக்கு குளிர்ச்சி.


பள்ளிப் பருவ காதல் அத்தியாயங்களில் கவரும்படியான சங்கதிகள் குறைவென்றாலும், இளவயது பிரஜனுக்கு காதலியாக வருகிற யுவாவின் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பும், வசீகரமிக்க புன்னகையும் மனதைக் கவர்கிறது.


இளவயது பிரஜனாக வருகிற ரோஹித் பள்ளிப் பருவத்தில் காதல் வயப்படுகிறவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் கச்சிதமாக காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்.


அறிவியல் ஆசிரியராக மனோபாலா. தன்னுடன் பணிபுரியும் டீச்சருடன் ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க் அவுட் ஆகுமா என்பதை தெரிந்துகொள்ள செய்யும் முயற்சிகள் கொஞ்சமே கொஞ்சம் கலகலப்பூட்டுகிறது.


ஸ்ரீ பிரியங்கா, சினாமிகா என இன்னும் இரு கதாநாயகிகளும் படத்தில் உண்டு. அவர்களுக்கான காட்சிகளில் பெரிதாய் உயிரோட்டம் இல்லையென்றாலும் முடிந்தவரை நடிப்பால் ஈர்க்க முயற்சித்திருக்கிறார்கள்.


பிரஜனுக்கு நண்பனாக ரெடின் கிங்ஸ்லி, ஜாங்கிரி மதுமிதா, வழக்கு எண் முத்துராமன், அயலி அபி நட்சத்திரா, யாசர் என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு நிறைவு.


பாடல்களுக்கு இதமான இசை முலாம் பூசியிருக்கும் இசைஞானி இளையராஜா, பின்னணி இசையில் வழக்கத்தைவிட அதிர்வை கூட்டியிருக்கிறார்.


ஒளிப்பதிவு நேர்த்தி.


கதையில் காலத்துக்கேற்ற புதுமையும், திரைக்கதையில் ரசிக்க வைக்கிற சுவாரஸ்யங்களும் இருந்திருந்தால் நினைவெல்லாம் நீயடா ரசிகர்களின் நினைவெல்லாம் நிரம்பியிருக்கலாம்!