#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
முக்கோணக்காதல் கதைகள் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனுடன் நிம்மதி தேடி வந்த இடத்தில் நாயகியின் முன்னாள் காதலனும் அங்கே வந்து சேர்ந்தால் என்ன ஆகும்..?
இப்படியும் சில படங்கள் வந்திருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்தல் இருந்திருக்கிறது. ஆனால், அந்த இரு ஆண்களும் சுய நலத்துடன் செயல்பட ஆரம்பித்தால், இருவரின் இடையில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சொல்லியிருப்பது இந்தப் படத்தை வித்தியாசப் படுத்தியிருக்கிறது.
அதிலும் கிளைமாக்சில் என்ன நடந்தது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டுப் படத்துக்குள் போவதற்கு கண்டிப்பாக ஒரு தைரியம் வேண்டும்.
அந்தத் தைரியம் இயக்குனர் விஜய் ரங்கநாதனுக்கு இருக்கிறது. மட்டுமல்லாமல் அதை நம்.வழக்கமான திரைக்கதை அமைப்பில் சொல்லாமல் நான் லீனியராக சொல்லிக் கொண்டு போதிலும் வித்தியாசப் பட்டிருக்கிறார் அவர்.
நாயகி நிவேதிதா சதீஷை சுற்றித்தான் கதை நகர்கிறது. இருதலைக்கொள்ளி எறும்புக்கு உதாரணமாக சிக்கிக் கொண்டு கணவனுக்கு முன்னாலேயே காதலனையும் வைத்துக்கொண்டு படும் பாட்டை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
Harm OCD என்ற மருத்துவ நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அதில் சரியாகப் பொருந்தி இருக்கிறார் நிவேதிதா.
அவரது கணவராக வரும் சிபி சந்திரனின் நடிப்பையும் சொல்லியாக வேண்டும். சொல்லப்போனால் வேலை இல்லாத விரக்தி, திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆனாலும் மனைவி மீது கை படாத அவலம், கடைசியில் நண்பனும், மனைவியும் சேர்ந்து செய்த துரோகம் என்று எதிர்கொள்ளும் எல்லா நிலைகளிலும் சிக்கித் தவிக்கும் தவிப்பை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
தோற்றத்தில் ஹீரோ மெட்டீரியலாக இருக்கும் அத்துல் படத்தின் வில்லன் என்பது இனிய முரண். ஆனாலும் அந்தப் பாத்திரத்தில் அளவுகோல் மிகாமல் நடித்திருக்கிறார்.
வீட்டுப் பணியாளராக வரும் பெரியவர் நாசரின் உயிர்கள் மீதான கவலையும், பட்டுப் பூச்சிக்கு கூட பெயரிட்டு அழைக்கும பாங்கும் வித்தியாசம்
அவரால் உணரப்படும் அந்த ‘மரண வாசனை ‘ புல்லரிக்க வைக்கிறது.
அதேபோல்தான் கைரேகை பாட்டி கீதா கைலாசத்தின் பாத்திரமும். ஆனால், அந்தப்பாத்திரத்தின் முடிவில் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது.
கடைசியில் அத்துலின் முடிவும் கூட சினிமா க்ளிஷே…
ஒரு மலை வாசஸ்தலத்தை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒளிப்பதிவு.
இசையும் திரைக்கதையின் வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறது.
ஒரு சைக்கலாஜிகல் திரில்லரை எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாண்டு வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.
ஆனால், இந்தப் பாணியில்.அமைந்த படைப்புகள் வெகுஜன அரங்கில் எப்படி வரவேற்புப் பெறும் என்பதும் கூட சஸ்பென்ஸ்தான்.