#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
‘லவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க’ என்பதன் சுருக்கமாக LSS எனும் தலைப்பைச் சூட்டியுள்ளனர். படத்தின் கதைக்கும், யூ-ட்யூப்பிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. படத்தின் முதற்பாதி கல்லூரிக் காதலாகவும், இரண்டாம் பாதி காசியில் ஒரு தேடலாகவும் நீள்கிறது.
பூஜா கோத்தாரி, படிப்பைத் தவிர வேறொரு சிந்தனையில்லாத சிவாவைக் காதலிக்கிறார். சிவாவை அழைத்துக் கொண்டு, தன் அம்மாவைப் பார்க்க பூஜா காசிக்குச் செல்கிறார். காசியில் நேரிடும் எதிர்பாரா நிகழ்வில் இருந்து பூஜாவும் சிவாவும் எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் கதை.
பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷன்க்குச் செல்ல லிஃப்ட் கேட்டவருக்கு உதவிப் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு கலகலக்க வைத்துள்ளார் சாம்ஸ். சிவாவின் பெருமை மிகு தந்தையாக படவா கோபி தோன்றியுள்ளார். அவரது மனைவியாகவும், நெடுந்தொடர் பிரியராகவும் விநோதினி வைத்தியநாதன் நடித்துள்ளார். அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரையும், படத்தின் கனத்தை அதிகரிக்க இன்னமும் கூடப் பயன்படுத்தியிருக்கலாம். இவ்விணையின் இளைய மகனாக நடித்துள்ள சிறுவன் கவருகின்றார்.
கல்லூரி நூலகத்தில் ஒரு பாலம் போல் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள், காசியின் படித்துறைகள், கங்கை நதி ஓடங்கள் போன்ற காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் N.S. சதீஷ் குமார். கடத்தல்காரரை நாயகன் விரட்டி ஓடும் காட்சிகளின் நீளத்தை மறுபரிசீலனையின்றிக் குறைத்திருக்கலாம் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் NB. கொஞ்சம் மேலோட்டமான எழுத்து என்பதால், படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் பயணிக்கிறது. கதையையும் வசனத்தையும் எழுதியுள்ள அஷோக் அமிர்தராஜ் கிடைத்த வாய்ப்பை முற்றிலுமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உதாரணத்திற்கு, ‘உங்கம்மா என்ன சொன்னாங்க?’ என்ற கேள்விக்கு, ‘வேலைக்குச் சேரச் சொல்லி மெயில் வந்திருக்காம்’ எனச் சொல்கிறார் நாயகன். அம்மாவோ எப்பொழுதும் நெடுந்தொடர் பார்ப்பவராகச் சித்தரிக்கப்படுபவர்; மின்னஞ்சலையோ கையிலுள்ள செல்பேசியிலேயே நாயகன் பார்த்துக் கொள்ளலாம். இப்படியாக மேம்போக்காகவே உள்ளன வசனங்கள். க்ளைமேக்ஸில், காதலியைப் பார்க்க முடியவில்லை என வருத்தத்தோடு சென்னை வரவேண்டிய நாயகன், எந்தக கவலையும் இன்றி, ‘ஏன் வீடு பூட்டியிருக்கு?’ என யோசித்தவண்ணம் சாவதானமாக நடந்து கொள்ளுவதாகக் காட்டப்படுகிறது.
கல்லூரி அத்தியாயத்தில் சமாளித்துள்ள நாயகன் ஆதவ் கிருஷ்ணா, வலியையும் பரிதவிப்பையும் பிரதிபலிக்க வேண்டிய காட்சிகளில் சிரமப்பட்டுள்ளார். பூஜா கோத்தாரியாக சிம்ரன் அத்வானி நடித்துள்ளார். நல்லவன் என்பதால் உருகி உருகிக் காதலிக்கிறார். நாயகன் எவ்வளவு நல்லவன் தெரியுமா என படத்தில் பலமுறை சொல்லப்படுகிறது. நாயகியின் தந்தையான வில்லனே, ‘நான் மனசு மாறினாலும் மாறிடுவேன்’ எனச் சொல்லி விட்டு மிரட்டப் பார்க்கிறார். அதனால் வில்லத்தனம் செல்லுபடியாகாமல் வலுவற்ற காட்சிகளாக அது கடந்துவிடுகிறது. மகளைக் கொல்லப் பார்த்தவர்கள் மீது வில்லன்க்கு எந்தக் கோபமும் எழவில்லை. வில்லனே பரவாயில்லை என்ற ரேஞ்சில், பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்களிடம் நாயகன் உதவி கேட்டு அழுது கெஞ்சுவதாகச் சித்தரித்துள்ளார் இயக்குநர் மகாலட்சுமி முருகன்.