#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தமிழாசிரியர் ஒருவருக்கும் ( எம் எஸ் பாஸ்கர்) அவரது காதல் மனைவிக்கும் ( மீரா கிருஷ்ணன்) மகனாகவும்,
கணவன் வெளிநாட்டில் வேலை செய்ய , தனது மகளோடு அப்பா அம்மாவுடன் இருக்கும் அக்காவுக்குத் தம்பியாகவும்
– இருக்கும் ஒரு ஐடி வேலை இளைஞனுக்கு (ஸ்ரீகாந்த்)
தனக்கு வரும் மனைவி தன்னை விட அதிக சம்பளம் வாங்கும் வேலையில் இருக்க வேண்டும் என்று ஆசை. (இந்த ஒற்றை வாக்கியத்தை வைத்தே ரணகள கலவரமாக தெறிக்க வைக்கும் ஒரு கதை பண்ணலாம். ஆனால் இவர்கள் போனது வேறு ரூட்)
இந்த ஆசையால் அவனுக்குப் பெண் அமையாமல் இருக்க, அமெரிக்காவில் பிறந்து தமிழ்க் கலாச்சாரம் கற்று குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் ஒரு பெண்ணை (சிந்தியா லூர்டே) ,சில பொய்களை அவனிடம் சொல்லி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் அவனது குடும்பத்தார்
முதலிரவிலேயே அவனுக்கும் மனைவிக்கும் ஒத்துக் கொள்ளாமல் போக , ஒவ்வொரு உண்மைகளும் அவனுக்குத் தெரிய வர , சண்டை வர, அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் மனைவி பக்கம் நிற்க , அவனுக்கு எல்லோர் மேலும் கோபம்.
பெரிதாக ஆசைப்பட்டு சில விஷயங்கள் செய்ய விரும்பும் அவன், பல இடங்களில் கடன் வாங்கி அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அந்தப் பணத்தை சிட்ஃபண்டில் போட அந்தப் பணம் ஏமாற்றப்பட, அதோடு அவனுக்கு வேலையும் போக, கடன்காரர்கள் விரட்ட , நடந்தது என்ன என்பதே தினசரி.
தினத்தந்தி தினமலர் தினமணி என்று எல்லாம் பெயர் வைக்காமல் ஏன் தினசரி என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது அவர்களுக்கு தெரிந்த காரணம் இருக்கலாம் . இருந்து விட்டுப் போகட்டும்.
படத்தின் கதை, ‘ அளவுக்கு மேல் ஆசைப்படாதே .. பணத்தை விட உறவுகளும் நிம்மதியும் முக்கியம்’ என்கிற எவர் கிரீன் விஷயம்தான். சரியாகச் சொன்னால் என்றைக்கும் பலன் தரும். ஆனால் இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாம்
படத்தின் பலம் வசனங்கள், குறிப்பாக முதல் பாதியில்.
அடுத்த பலம் அம்மா , அப்பா,அக்கா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள்.
அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஒற்றை ஆளாக வீட்டில் நடக்கும் காட்சிகளைத் தூக்கிச் சுமக்கிறார் . அப்படி ஒரு ரம்மியமான நடிப்பு. வீணை வாசிக்கத் துவங்கும் முன்பு தலையில் உள்ள எண்ணையை சற்றே தொட்டுக் கொண்டு பிறகு வாசிக்க ஆரம்பிக்கிறாரே.. ஆகா லவ்லி மீரா. அறிவர் அறிவர் அறிவர்.
அவருக்கு சமமாக நின்று சதிராடுகிறார் அக்காவாக நடித்து இருக்கும் வினோதினி . அழும் தம்பியை எல்லோரும் அழுது சமாதானப்படுத்த இவர் மட்டும் செல்லமாக அடித்து சமாதானப்படுத்துவாரே.. அபாரம் வினோதினி. இந்த இருவரின் காம்போ அருமை என்றால், இவர்களுக்கு இடையில் காற்றையும் நீரையும் போல ஓடி, தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார் எம் எஸ் பாஸ்கர் .
நாயகி சிந்தியா லூர்டேவின் நிறமும் பேச்சும் கதாநாயகிக்கு கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது . கொஞ்சம் நடிக்கவும் செய்யணும் சிந்த். . மாமனாரும் மாமியாரும் தங்கள் பழைய காதலைச் சொல்லும் காட்சியில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல உட்கார்ந்து இருந்த பாவம் எல்லாம் உங்களைச் சும்மா விடாது .
அந்தக் காட்சியே மனைவி கதாபாத்திரத்துக்காகத்தான் .. அப்படி இருக்க இந்த காட்சியில் சிந்தியாவை ஃபிரேம் ஓரத்தில் பொசிஷன் செய்ததோடு சும்மா வேடிக்கை பார்க்க விட்டிருக்கும் இயக்குனருக்கு, பொறி கலங்கத் தலையில் ஒரு குட்டு .
ஸ்ரீகாந்த் வழக்கம் போல்.
பின்னணி இசையில் கவனம் கவர்கிறார் இளையராஜா .
மிகச் சிறப்பாகச் செல்லும் முதல் பாதி , இரண்டாம் பாதியில், வழுக்குகிறது . பாய்வு இல்லாமல் திரைக்கதை ஆங்காங்கே தேங்கி நிற்கிறது .
வசனம் தவிர தொழில் நுட்பங்கள் எல்லாமே பலவீனமாக இருக்கின்றன . சாந்தினி தமிழரசன் கேரக்டர் எதுக்கு என்றே கேட்கலாம் என்றால் அந்த சண்டைக் காட்சி எதுக்கு என்று அழுத்தமாகவே கேட்கலாம் .
பர்சனல் லோன் வாங்கி சிட்பண்டில் போடும் அப் பிராணிகள் இப்போது (ம்) இருக்கிறதா என்ன ?
தனிமையில் பேசும் நாயகனை நோக்கி அம்மா, அப்பா, அக்கா, மனைவி , அனைவரும் வரும் காட்சியிலேயே படம் முடிந்து விட்டது . அதன் பிறகு அடித்திருப்பது எல்லாம் தேவை இல்லாத ஆணி.
இதே மாதிரி உணர்வு கொண்ட, இதை விட நனறாக இருந்த குடும்பஸ்தன் இப்போதுதான் ஓடி முடிந்ததும் இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் ஓட்டத்துக்கு தடை ஆகலாம் .
மொத்தத்தில் தினசரி… சரி சரி .