#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
டைட்டில் போட்டதிலிருந்து என்ட் கார்டு விழும் வரை தடதடவென வேகமெடுக்கும் காட்சிகளுடன், மதுரை மண்மணம் நிரம்பிய கதையை 'வடம்' பிடித்து இழுத்திருக்கிறார் இயக்குநர் கேந்திரன் थी.
விமல் ஒரு குற்ற வழக்கிலிருந்து ஜாமினில் வெளியில் வருகிறார். அங்கு வைத்தே அவரைக் கொல்ல சிலர் சுற்றி வளைக்கிறார்கள். அதில் தப்பித்து வந்தால், பரிதாப தோற்றத்திலிருக்கும் ஒரு முதியவர் விமலை கொல்வதற்கு ஆள் தேடுகிறார்; யார் யாரையோ போய் பார்க்கிறார். அதில் ஒருவர் ஒத்துக் கொள்கிறார். அவர் விமலை கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறார். இன்னும் ஒருவர் விமலை கொல்ல கூட இருந்தே குழி பறிக்கும் விதமாக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் என்னதான் தவறு செய்தார்? ஏன் ஆளாளுக்கு அவரை கொல்லத் துடிக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள பிளாஷ்பேக் போகிறோம். அத்தோடு முடியவில்லை. மீண்டும் பிளாஷ்பேக் போகிறோம். அத்தோடும் முடியவில்லை. அடுத்தும் ஒரு பிளாஷ்பேக்... அத்தனையிலும் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
முறுக்கு மீசையுடன் கிராமத்து அதிரடி நாயகன் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் விமல். அவருடைய அப்பா ஊரில் பெரிய மனிதர். அவருக்கு யார் நல்லது செய்தாலும் பிடிக்காது; தண்டித்து விடுவார். அப்படி தண்டிக்கப்பட்ட ஒரு இளைஞனின் அப்பா விமலை கொல்ல திட்டமிடுகிறார். மஞ்சு விரட்டில் அவர் வளர்க்கும் காளை தொடர்ந்து ஜெயிக்க ஒருவர் பகையாளியாகிறார். அந்த பகையில் அவரை சிறை வரை கொண்டு போகிறது.
அத்தனை விஷயங்கள் அவரை சுற்றிச் சுழல காளை மீது காட்டும் நேசம், காளைக்கு பயிற்சி கொடுப்பவராக காட்டும் கம்பீரமான உடல்மொழி, எதிரிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்வதில் அட்டகாசமான ஹீரோயிஸம் என சுறுசுறுப்பான நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் விமலை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு பின் தொடர்கிற சங்கீதா கல்யாணை பார்க்கும்போது, அவருக்கு கொடுத்திருப்பது ஹீரோவை துரத்தித் துரத்திக் காதலிக்கும் வழக்கமான வேலைதான் போலிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். ஆனால், அப்படியில்லை அதைவிட வேறு கடமைகள் இருக்கிறது என்று வேறொரு விதமான பரிமாணம் காட்டியிருக்கிறார். ரொமான்ஸுக்கும் வாய்ப்பிருக்கிறது. சின்னச்சின்ன கியூட்டான முகபாவங்கள் இயல்பிலேயே இருக்கும் அவரது அழகை தூக்கலாக்குகிறது.
தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவராக, விமலின் அப்பாவாக ஆடுகளம் நரேன்,
மஞ்சு விரட்டு போட்டியில் தன் காளையை எந்த காளையும் ஜெயித்துவிடக் கூடாது என்பதை லட்சியமாக கொண்டிருப்பவராக, அப்படி எதிர்த்து களம் கண்ட காளையை அடக்கியொடுக்க திட்டமிடுபவராக நட்டி நட்ராஜ்,
விமலுக்கு இருக்கும் சிலபல எதிரிகளில் ஒருவராக மதுசுதன் ராவ், இன்னுமொரு பகைவராக பிச்சைக்காரன் மூர்த்தி,
விமலின் நண்பனாக பாலசரவணன்,
காமெடிக்காக இணைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால், உம்ஹூம் நான் வந்தது பெரிய சம்பவம் பண்றதுக்காக என்று கத்தியும் ரத்தமுமாக மிரட்டும் முனீஸ்காந்த் என திரும்பிய பக்கமெல்லாம் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள்... அத்தனைப் பேரும் கேரக்டர்களாகவே மாறியிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
காளைகள் ஆரம்பத்தில் கொஞ்ச நேரமும் கடைசியில் கொஞ்ச நேரமும் களத்தில் சீறிப் பாய, ஹீரோ ஏழெட்டுக் காட்சிகளில் சீறிப் பாய்கிறார். ஹீரோயின் இன்டர்வலுக்கு முன் சீறுகிறார். மிச்சமிருக்கிறவர்களும் சீற்றம் காட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. கிண்டலும் கேலியுமாக திரிகிற குட்டிபுலி சரவண சக்திகூட ஒரு காட்சியில் செருப்பைப் பறக்கவிடுகிறார். அதற்கேற்றபடி பின்னணி இசையில் கேப் விடாமல் அதிரடி அட்டகாசம் செய்திருக்கிறார் டி இமான்.
ஞானகரவேல் வரிகளில் உருவான 'பாண்டிமுனி வர்றான்' பாடலில் உற்சாகம் தெறிக்கிறது. 'ஆசைக் களவாணியே என்ன சொக்க வெச்ச' பாடலின் சின்மயி குரலில் சொக்கிப் போகாமல் தப்பிக்க முடியாது. இன்னும் சில பாடல்களும் அசத்தலான இசையில் அணிவகுக்கின்றன.
மதுரை சுற்று வட்டாரம், பரவசமும் பரபரப்பும் கலந்து கட்டும் மஞ்சு விரட்டு போட்டி, பஞ்சாயத்து, அடிதடி என கழுகுப் பார்வையில் பார்ப்பது புத்துணர்ச்சி தருகிறது.
கிராமம், கோயில் திருவிழா, ஆளாளுக்கு நான்தான் வீரன் என காட்டும் கெத்து, பகை பழிவாங்கல் என அறிவைத் தொலைத்தவர்கள் அறிவாளைத் துக்கித் திரிவதால் நேரும் உயிரிழப்புகள் என பார்த்துப் பழகிய காட்சிகளின் தொகுப்பாக இருந்தாலும்,
எகிறிப் பாய்ந்து குடலை உருவும் ஜல்லிக்கட்டு போட்டிகளையே பார்த்துப் பழகியவர்களுக்கு, காளைகள் வடத்தில் கட்டப்பட்ட நிலையில் வீரம் கொப்பளிக்கும் 'வட மஞ்சு விரட்டு' என்கிற பாரம்பரிய விளையாட்டை காண்பித்திருப்பது படத்தின் தனித்துவம்.