#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
‘மேல்நாட்டு மருமகள்’ பட காலத்தில் இருந்து அவ்வப்போது இதுபோன்று வெளிநாட்டில் இருந்து தமிழ நாடு வரும் நாயகி இங்கிருக்கும் நாயகன் மேல் காதல் கொண்டு அவரைக் கைப்பிடிக்க ஆசைப்படும் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அப்படி நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் அப்படி ஒரு கதையைத் தேர்வு செய்திருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயலட்சுமி.
காரைக்கால் பகுதியில் ஒரு மீனவ குப்பத்தில் நடைபெறுகிறது கதை.
வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள நாயகி லியா உள்ளிட்ட ஒரு குழு அங்கு வருகிறது.
அதற்கு உறுதுணை புரியவேண்டி ஊர்ப் பெரிய மனிதரான மதுசூதனன் ராவிடம் அந்தப் பகுதி பங்குத்தந்தை கேட்க, அந்தப் பொறுப்பை தன்னுடைய மருமகன் நாயகன் லிங்கேஷிடம் கொடுக்கிறார் மதுசூதனன் ராவ்.
தொடக்கத்தில் லிங்கேஷ் மீது தவறான எண்ணம் கொண்டு பழகும் லியா போகப்போக அவரது நல்ல உள்ளம் புரிந்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
தன் தாய் தந்தையை சுனாமிக்குப் பறிகொடுத்து சிறுவயதில் நிற்கதியாக நின்ற லிங்கேஷை அவரது மாமன் மதுசூதனன் ராவ் தான் எடுத்து சொந்தப் பிள்ளையாகவே வளர்த்து வரும் நிலையில் அவரது மகள் திவ்யா, லிங்கேஷ் மீது சிறுவயதிலிருந்தே கண்மூடித்தனமான காதல் கொண்டு அவரே உலகம் என்று வாழ்ந்து வர…
இந்த இரண்டு காதல்களில் லிங்கேஷ் எதைத் தேர்ந்தெடுத்தார்… அதன் விளைவுகள் என்ன என்று உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் படம்தான் இது.
தான் நடிக்கும் படங்களில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் லிங்கேஷ் இந்த படத்திலும் ஒரு மீனவ குப்பத்து இளைஞன் எப்படி இருப்பானோ அப்படியே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். தொடக்கத்தில் சண்டீராக அறிமுகமானாலும் போகப் பக மென்மையான உள்ளம் கொண்டு, காதல் மேலோங்கி அதற்காக மரண அவஸ்தை படும் பாத்திரத்தில் ஜீவனுடன் நடித்திருக்கிறார் லிங்கேஷ்.
அவரை காதலிக்கும் முறை பெண்ணாக வரும் மலையாள நடிகை திவ்யாவும் உணர்வு பொங்க நடித்திருக்கிறார். தன் மாமனை ஒரு காவல் தெய்வம் போல் காத்து வரும் அவர், லிங்கேஷுக்கு முத்தம் கொடுத்த காரணத்திற்காக ஆறு வயது குழந்தையை கூட கிள்ளி தண்டனை கொடுத்து விடுவது திவ்யாவின் காதலுக்குச் சான்று.
தமிழ்நாட்டு கலாச்சாரமும் குடும்ப உறவுகளும் ஒருவருக்கொருவர் தாங்கிப் பிடிக்கும் சூழலும் பிடித்து போய் லிங்கேஷை காதலிக்கும் லியாவின் இளமையும், அழகும் சொக்க வைக்கின்றன.
அந்த ஸ்ட்ராபெரி உதடுகளில் அவர் தமிழைக் கடித்து துப்பினாலும் அது சுவையாகவே வந்து விழுகிறது. இப்படி ஒரு தேவதை வந்து ஐ லவ் யூ சொல்லும்போது எந்த இளைஞனால் அதை மறுக்க முடியும்..?
மதுசூதனன் ராவின் அறிமுகமும் கூட பெரிய சண்டைக்கு வித்துடுவார் என்பது போல அமைகிறது ஆனால் அதற்கான எந்த சாத்தியமும் படத்துக்குள் இல்லை.
அதே பல் படத்தொடக்கத்தில் மதுசூதன் ராவையும் , காட்பாடி ராஜனையும் மாறி மாறி காட்டி இருவருக்குள்ளும் பெரிய மோதல் ஒன்று வெடிக்க போவதாக நம்மை நம்ப வைக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
லிங்கேஸ் இல்லையா திவ்யாவின் முக்கோண காதல் கதையை தாண்டி வேறு எதுவும் நடைபெறாதது தேவையில்லாத கதைப் பின்னல்.
தன் மனைவி குழந்தை பெற்றதற்குக் காரணம் இவர்தான் என்று மாறனைக் காட்டி கஞ்சா கருப்பு ஊருக்குள் அடிக்கும் லூட்டியை ரசிக்கலாம். அதன் முகாந்திரம் தெரிய வரும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது.
டோனி ஜான் ஒலிப்பதிவு கடற்புறத்தை ரசனையுடன் காட்டுகிறது. காட்சிகள் காட்டத் தவறிய உணர்வுகளுக்கு சாண்டி சாண்டல்லோவின் இசை உயிர் கொடுத்து இரக்கிறது.