#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
மக்களில் பலருக்கும் 'நாட்டை இதுவரை ஆண்டவர்களும் சரியில்லை, இப்போது ஆள்கிறவர்களும் சரியில்லை' என்ற மனநிலை எப்போதுமே இருக்கும். அதற்கு தீர்வாக அவர்கள் நினைப்பது ஆட்சி மாற்றத்தை மட்டுமே.
நம்பிக்கையான தலைவர்கள் தென்படாதபோது அவர்களைவிட இவர்கள் பரவாயில்லை; இவர்களைவிட அவர்கள் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டுக்கு வருவார்கள்.
இதே நிலை நீடித்தால் மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த காலத்திலும் தீர்வு கிடைக்கவே கிடைக்காது என்பதே உண்மை.
சரி என்னதான் செய்வது?
இந்த கேள்விக்கு இயக்குநர் பாலு வைத்தியநாதனிடம் பதில் இருக்கிறது. அது 'ஆட்சி மாற்றத்தை விரும்புகிற மனநிலையிலிருந்து மக்களை திசை திருப்பி அரசியல் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்பது.
அந்த மனநிலையை எப்படி கொண்டு வருவது? அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தால் எப்படிப்பட்ட விளைவுகள் உருவாகும்? இந்த கேள்விகளுக்கான பதில்களை திரைக்கதையாக்கி சமூக மாற்றத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறது இந்த 'அறம் செய்'
கதைக்களம் தமிழ்நாடு. சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றை தனியார் மயமாக்கும் முடிவுக்கு வருகிறது ஆளும் அரசு. அதை எதிர்த்து மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்து போராடும் முடிவுக்கு வருகிறார்கள். அரசிடம் அனுமதி கேட்கிறார்கள். மறுத்தால் போராட்டம் பெரியளவில் வெடிக்கும் என்பதை உணர்ந்து அனுமதி கொடுக்கப்படுகிறது.
இது ஒரு பக்கமிருக்க, 'நமக்குத் தேவை ஆட்சி மாற்றமல்ல; அரசியல் மாற்றமே' என்பதை வலியுறுத்தி சிலரது ஒத்துழைப்புடன் 'அறம் செய்' என்ற இயக்கமாக செயல்படுகிறார் செந்தாரகை என்ற பெண்.
அவரது கொள்கை மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் என பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகுகிறது.
அவரை இப்படியே விட்டு வைத்தால் ஆட்சிக்கு ஆபத்து என்பதை உணரும் ஆளுங்கட்சியின் தலைமை அவரை கொன்றழிக்கமுடிவெடுக்கிறது. தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது செந்தாமரைக்கும் தெரிகிறது. அதையெல்லாம் தாண்டி தன் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தோடு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்படுகிறார்.
இப்படி நகரும் கதையில் மாணவர்களின் போராட்டம், செந்தாரகை தலைமையிலான போராட்டம் என இரண்டு தரப்பும் சந்திக்கும் சவால்களும் கஷ்ட நஷ்டங்களும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருவதாக கடந்தோட, போராட்டங்களின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பது கிளைமாக்ஸ்...
அறம் செய் அமைப்பின் தலைவர் செந்தாரகையாக அஞ்சனா கீர்த்தி. துணிச்சல் சூறாவளியாய் உருவாக்கப்பட்ட தன் கதாபாத்திரத்துக்கு நெஞ்சை நிமிர்த்திய நடையாலும், பார்வையின் உக்கிரத்தாலும் கம்பீரம் தந்து,
நம் நாட்டின் அம்பேத்கரிலிருந்து உலகளவில் புரட்சிகளை உருவாக்கிய தலைவர்களின் கருத்துக்களையும், பாரதியாரின் பாடல் வரிகளையும் உணர்ச்சிப் பெருக்கோடு எடுத்துச் சொல்வதாகட்டும் சிங்கப் பெண்ணாக களமாடியிருக்கிறார்.
படத்தின் இயக்குநர் பாலு வைத்தியநாதன் கதைநாயகன் பாத்திரத்தை ஏற்று, மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தி கவனம் ஈர்க்கிறார். அவருடன் இணைந்து களம் காணும் மருத்துவ மாணவராக 'லொள்ளுசபா' ஜீவாவின் நடிப்பும் கச்சிதம்.
கதைநாயகனுக்கும் அவனது கொள்கைகளுக்கும் உறுதுணையாக நிற்கிற மேஹாலி மீனாட்சி துடிப்பான நடிப்பாலும், பாடல் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கும் கவர்ச்சியாலும் தனித்து தெரிகிறார்.
முதலமைச்சராக வருகிற சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத்துணிகிற மோசமான அரசியல்வாதியாக தன்னால் முடிந்தளவு மிரட்டியிருக்கிறார்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகிற எதிர்க்கட்சித் தலைவியாக திருச்சி சாதனா, ஆர்வக்கோளாறு அரசியல்வாதியாக பயில்வான் ரங்கநாதன் இருவரும் கலகலப்புக்கு உதவுகிறார்கள்.
வாடா வாடா வந்தியத் தேவா', 'பின்னி பெடலெடுத்து பிரிச்சுமேயப் போறேன்', 'கருவமர பூவெடுத்து கால்கொலுசு நான் தந்திடவா?' என்ற மூன்று பாடல்களில் உற்சாகத்தை நிறைத்திருக்கிற ஸ்ரீகாந்த் தேவா, பின்னணி இசையில் இது போதும் என முடிவெடுத்து ஒரு வட்டத்துக்குள் சுழன்றிருக்கிறார். பாடல் காட்சிகளில் நிறைந்திருக்கும் வண்ணமயம் கண்களுக்கு குளிர்ச்சி.
ஒளிப்பதிவால் காட்சிகளை தரம் உயர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பாலு வைத்தியநாதன்.
அரசுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுவார்கள், எந்தளவுக்கு அடி படுவார்கள், மிதி படுவார்கள், எந்தளவுக்கு ரத்தம் சிந்துவார்கள், உயிரிழப்பார்கள் என்பதெல்லாம் பல படங்களில் பார்த்துதான். அதையே குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க அதிகமாய் தெரிகிறது நாடகத்தனம்.
மருத்துவப் படிப்புக்கு முயற்சி செய்து அது நிறைவேறாமல் போக, ஆம்புலன்ஸ் டிரைவராகி மாணவ சமுதாயத்தின் முன் முன்னுதாரணமாக நிற்கிற மாணவி கதாபாத்திரம் ஒன்று படத்தில் உண்டு. அந்த பாத்திரத்துக்கு அனிதா என பெயரிட்டிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.
பல வசனங்கள் காரசாரமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கதையின் நாயகி பேசுகிற வசனங்களையெல்லாம் புத்தகமாக தொகுத்தால் ஒரு நபரால் தனியாக தூக்கமுடியாத கனத்திலிருக்கும். அந்தளவுக்கு அவர் படம் நெடுக உணர்ச்சியுரை ஆற்றிக்கொண்டிருக்க, மற்றவர்களும் திறந்தவாய் மூடாமல் பேசிக் கொண்டிருப்பதும், மூன்று மணி நேரம் கடந்தும் நிறைவுக்கு வரமறுக்கும் படத்தின் நீளமும் அடியன்ஸுக்கு சலிப்பு தராமலிருக்காது.
குறிப்பிட்டுச் சொல்ல குறைகள் இருந்தாலும், நீட் தேர்வு என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள் தொடங்கி அரசாங்கம் மக்களுக்கெதிராக எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை விரிவாக அலசியதில் இருக்கும் சமூக அக்கறை, பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்ததில் இருக்கிற தெளிவு உள்ளிட்ட அம்சங்களுக்காக 'அறம் செய்' படக் குழுவை பாராட்டலாம்.