#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறும்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக கொடுத்திருப்பது தான் ’வெளவல்ஸ்’ (Vowels). ஐந்து படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை காதலை மையக்கருவாக கொண்டு எழுதப்பட்ட கதை மட்டுமே, அதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. அதே சமயம், இந்த ஐந்து கதைகளும் உயிர் தொடர்புடையது என்பதால் ’வெளவல்ஸ்’(உயிரெழுத்துக்கள்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
1. கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் முட்டாள்தனமான காதலால் நடக்கும் கொலை!
2. ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதலால், தான் பாதிக்கப்படுவதோடு, தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்வது!
3. காதல் பிரிவால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும் முட்டாள் மனிதர்களின் மனங்களை உணர்வுப்பூர்வமான காதல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி!
4. அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல், எந்தவித யோசனையும், தயக்கமும் இன்றி அவர்களுடனும், அவர்களது காதல் உடனும் பயணிக்க வைப்பது!
5. உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய், என்பதை எண்ணங்களின் பிரதிபலிப்பான கனவுகள் மூலம் உணர்த்துவது?
ஆகிய ஐந்து கதைகள் மூலம் காதலின் வெவ்வேறு உணர்வுகளை பார்வையாளர்களின் மனதுக்கு இறக்கும் முயற்சி தான் இந்த ’வெளவல்ஸ்’ (Vowels).
யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் பார்வையாளர்களை ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. கல்லூரி மாணவராக பல படங்களில் நடித்த சின்னி ஜெயந்த், கல்லூரி பேராசிரியாக நடித்திருப்பதும், அவரது முதிர்ச்சியான வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதத்திற்கான தனி அப்ளாஷ் கொடுக்கலாம்.
தொடக்கம் மற்றும் முடிவு என்று குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை மிக சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஐந்தாவதாக இடம்பெறும் கதை மட்டும் சில இடங்களில், சிலருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, தரம் மிக்கதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். முதல் மற்றும் ஐந்தாவது கதைகளுக்கு பயன்படுத்திய வண்ணம் மற்றும் கோணங்கள் கவனம் ஈர்க்கும்படி உள்ளது. மற்ற கதைகளில் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் வசனங்களை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஐந்தாவது கதையில் இடம்பெறும் மேற்கத்திய இசை மற்றும் பாடல் மனதை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
ஹரீஷ் கோம்மே-வின் படத்தொகுப்பு அனைத்து கதைகளையும் சுவாரஸ்யமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து முழுப்படத்தையும் வேகமாக பயணிக்க வைத்திருக்கிறது.
திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதியிருந்தாலும், அனைவரும் காதலை கருப்பொருளாக கொண்டு எழுதியிருக்கும் கதை, மற்றும் அதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்த விதம், முழு படத்தையும் தொய்வின்றி நகர்த்தி சென்றாலும், எந்த கதையும் அழுத்தமாக கையாளப்படவில்லை. ஒரு கதை முடிந்த உடன் மற்றொரு கதை தொடங்கும் போது, முந்தை கதை நம் நினைவில் இருந்து சுத்தமாக நீங்கி விடுவது, இந்த படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
ஐந்து கதைகளிலும் கையாளப்பட்ட மெசஜ் எளிமையானது என்றாலும், அதை காதலோடு சேர்த்து சுவாரஸ்யமாக சொன்ன விதத்தின் மூலம் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் எடுத்துக் கொண்ட கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சொல்லி சற்று ரசிக்க வைத்தாலும், யூகி சேதுவின் கதையை தவிர மற்ற கதைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.