#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் படம் ஹரி ஹரா வீர மல்லு. கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாகர் ராவ் தயாரிக்க ஏ எம் ரத்தினம் வெளியிட்டுள்ளார். ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நிதி அகர்வால், பாபி தியோல், நாசர், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், சுனில், ஐயப்ப சர்மா, ஆதித்யா மேனன், பூஜிதா ஆகியோர் நடித்துள்ளனர். புராணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
படத்தின் கதை
17ஆம் நூற்றாண்டு இந்தியாவில் நடைபெறும் ஒரு கற்பனையை கலந்த பிரமாண்டமான படமாக உருவாகியுள்ளது ஹரி ஹரா வீர மல்லு. முகலாய அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்க்கும், அதே சமயம் தேசப்பற்றைப் பற்றியும் படம் பேசுகிறது. சிறுவயதில் அரசர்களின் ஒடுக்குமுறையால் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு வீர மல்லுவாக உயர்ந்து அதிகாரத்தையும் அநீதியையும் எதிர்த்து, தர்மத்தைக் காப்பாற்றுகிறார் கதாநாயகன். ‘கோஹினூர்’ வைரமும் இந்த கதையின் ஒரு பகுதியாக இணைகிறது.
நடிகர்களின் நடிப்பு
ஹரி ஹரா வீர மல்லு முழு படத்தையும் பவன் கல்யாண் தனது தோள்களில் தாங்கி நிற்கிறார். ஆக்சன் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார் பவன் கல்யாண். இருப்பினும், திரைக்கதை மற்றும் கதையில் உள்ள பிரச்சனையால் அவரது நடிப்பு சில இடங்களில் தொய்வாக உள்ளது. நிதி அகர்வால் மற்றும் பாபி டியோலின் கதாபாத்திரங்கள் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. இது கதைக்கும் ஒரு விதத்தில் உதவுகிறது. படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் இயக்குனர் சொன்னதை சரிவர செய்து உள்ளனர். படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவே செல்கிறது.
தொழில்நுட்ப அம்சங்கள்
படத்தின் இசை மற்றும் பின்னணி இசை ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி மூலம் சிறப்பாக அமைந்துள்ளது. பாடல்கள் சில இடங்களில் படத்தின் எமோஷனை உயர்த்தியுள்ளன. ஆனால், VFX மற்றும் கிராபிக்சில் காட்சிகள் படத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. பல இடங்களில் நம்மை கதையை விட்டு இவை வெளியே கொண்டு செல்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே சுமாராக இருந்தது. இது படத்தின் முழுமையான வரலாற்று உணர்வை பாதித்தது.
அதே போல இரண்டாம் பாதியில் பல காட்சிகள் அவசர அவசரமாக முடிக்கப்படுவது போல தோன்றுகிறது. தமிழில் சில காட்சிகளில் டப்பிங் மற்றும் லிப் சிங்க் பிரச்சனையும் உள்ளது. மொத்தத்தில் ஹரி ஹரா வீர மல்லு முதல் பாதையில் கொடுத்த சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் இரண்டாம் பாதியில் கொடுக்க தவறி உள்ளது. வரலாற்று பின்னணி கொண்ட கதையை அதிகம் விரும்பி எதிர்பார்ப்புடன் செல்பவர்கள் ஏமாற்றம் அடையலாம். ஹரி ஹரா வீரமல்லு ஒரு சராசரி வரலாற்று ஆக்ஷன் படமாக அமைந்தாலும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கு இது ஒரு தீபாவளி கொண்டாட்டம்தான்.