#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
டிடி நெக்ஸ்ட் லெவல் கதை: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கேம் ஷோவை கையில் எடுத்துக் கொண்டு அதில் பேய்களை பறக்கவிட்டு காமெடியில் கதறவிட்டு இருந்தார் சந்தானம். இந்நிலையில், இந்த படத்தில் இயக்குநர் பிரேம் ஆனந்த் தமிழ் சினிமா விமர்சகர்களை வைத்து செய்யலாம் என நினைத்து ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) எனும் பேய் விமர்சகர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தூக்கிக் கொண்டு போய் படத்திற்குள் கதாபாத்திரமாக தள்ளி கொலை செய்கிறார்.
கிருஷ்ணா என்கிற பெயரை யூடியூபில் விமர்சனம் சொல்வதற்காக கிஸ்ஸா என மாற்றிக் கொண்டு படங்களை கழுவி ஊற்றி வரும் சந்தானத்தையும் அவரது குடும்பத்தையும் படம் பார்க்க அழைத்து வந்து ஒரு படத்துக்குள் தள்ளி கொல்ல முயற்சிக்கிறார். அங்கே இருந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் கிஸ்ஸா காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதை.
தமிழ் சினிமாவுக்கும் விமர்சகர்களுக்கும் இடையே எப்போதுமே வாய்க்கா தகராறு தான். ஆனால், இந்த படத்தில் படத்தின் ஹீரோவையே ஒரு விமர்சகராக மாற்றி அவர் எப்படி தனது குடும்பத்தினரை காப்பாற்றினாரா? இல்லையா? என்கிற கதையில் பேய் காமெடியை கலந்து அடித்து கொடுத்திருக்கிறார் பிரேம் ஆனந்த்.
ஆரம்பத்தில் சந்தானத்தின் புது கெட்டப் சற்றே துருத்திக் கொண்டு இருந்தாலும் கிஸ்ஸா கதாபாத்திரமாக மாற அவர் மெனக்கெட்டு இருப்பதால் போக போக பழகி விடுகிறது. சந்தானத்தின் அப்பா ஆட்டோ டிரைவராக வரும் நிழல்கள் ரவி படத்துக்குள் கப்பலின் கேப்டனாக வருகிறார். ஹோம்லி அம்மாவாக இருக்கும் கஸ்தூரி கவர்ச்சி திருடியாக படத்துக்குள் மாறுவதும், அடக்க ஒடுக்கமாக வரும் தங்கை யாஷிகா ஆனந்த் எதிர்பார்த்தபடியே அத்தனை கவர்ச்சியாக படத்துக்குள் கெளதம் மேனனுக்கு ஜோடியாக மாறுவது மற்றும் ஹீரோவின் காதலி விஷயத்தில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் என எழுத்தாகவும் ஸ்க்ரீனில் காட்சிகளாகவும் அமர்க்களம்
ஆரம்பத்தில் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி அந்த பாழடைந்த தியேட்டருக்கு வந்து ஹிட்ச்காக் இருதயராஜால் கொல்லப்படுவதும் அடுத்து அவரை போலவே சந்தானம் வந்து சிக்கிக் கொள்ள அங்கிருந்து தப்பிக்க ஒரு விமர்சகர் எப்படி சினிமாவை அணுகிறார் என்பதை படத்தின் ரீ ரெக்கார்டிங், டிரான்சிஷன் ஷாட், ஃபிளாஷ்பேக்கிறு சென்று மாற்றம் செய்வது என பல சுவாரஸ்யமான விஷயங்களால் பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். பிளஸ்: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற நட்சத்திர பட்டாளம் ரசிகர்களை நிச்சயம் கடைசி வரை படத்தை பார்க்க வைக்க அத்தனை முயற்சிகளையும் செய்திருக்கின்றனர். படத்திற்கு பெரிய பலம் என்றால் இசையமைப்பாளர் ஆஃப்ரோவின் பின்னணி இசை தான். உலகளவில் பேய் படங்கள் என்றாலே இப்படித்தான் இந்த சீனுக்கு இசையமைக்கின்றனர் என இசை மூலமாகவும் ட்ரோல் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது. சந்தானம் எப்போதுமே சீரியஸாக இருந்தாலும் அவருடன் கூடவே வரும் மொட்டை ராஜேந்திரன் தான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
அதிலும் அந்த அரை டவுசருக்குள் இருந்து எலி வரும் காட்சியெல்லாம் அல்டிமேட். வீண்பேச்சு பாபு என்கிற கதாபாத்திரத்தையும் கொடுத்து வலைப்பேச்சு டீமை கிண்டல் செய்திருக்கிறார் இயக்குநர். சப் டைட்டிலுக்காக திடீரென கீழே குனிந்து பார்ப்பது, எண்ட் கிரெடிட்ஸ் போடுவதற்குள் படத்தை முடிக்க வில்லை என்றால் அடுத்ததாக டிடி நெவர் எண்ட் வரும் என்பதெல்லாம் வேறலெவல். கெளதம் மேனன் - யாஷிகா ஆனந்த் போர்ஷனுக்கு தியேட்டரில் பெரிய அப்ளாஸ் அள்ளுகிறது. அதே போல மஞ்சுமெல் பாய்ஸ் சீனும் சரியான மேக்கிங். ஆர்ட் வொர்க் மற்றும் கேமரா ஒர்க் பெரிய தூணாகவே தெரிகின்றன.
மைனஸ்: செல்வராகவன் போர்ஷனுக்கு ஆரம்பத்தில் பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில், அவருக்கான முன் கதை பற்றிய எந்தவொரு விஷயமும் வைக்கப்படவில்லை. "கோவிந்தா" பாடலை படத்தில் இருந்து மொத்தமாக நீக்கிய நிலையில், சந்தானம் ஒரு விமர்சகர் என்பதை எடுத்துக்காட்டும் அளவுக்கு எந்தவொரு சீனும் ஆரம்பத்தில் இல்லாதது குறையாகவே தெரிகிறது. படத்தின் முதல் பாதியில் கதைக்குள் போக வேண்டும் என்கிற மெனக்கெடலில் காமெடி காட்சிகள் குறைவாகவே இடம்பெற்றன. 2ம் பாதியில் தான் ரோலர் கோஸ்டர் ரைடு போல காமெடி காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளன. நிழல்கள் ரவியை வைத்து செய்யப்பட்ட 'ஆய்' காமெடிகளை தவிர்த்து இருக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் சந்தானத்துக்கும் ஆர்யாவுக்கும் வெற்றிப் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்மருக்கு ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.