#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
கதைநாயகன் ஆதவன் பைபோலார் டிஸார்டர் என்ற மனநல பாதிப்பின் உச்சத்திலிருக்கிறார். காரணமேயில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களிடம் கோபப்படுகிறார்; தாறுமாறாக அடிக்கிறார். அப்படியான இயல்புடையவர் மாளவிகா என்ற பெண்ணை விரும்புகிறார். அவள் மறுக்க, விடாப்பிடியாக துரத்தி விதவிதமாகப் பேசி தன் காதலை ஏற்க வைக்கிறார். அதன் பிறகுதான், அவளுக்கு அவனது இயல்பு தெரிகிறது. தெரிந்தபின்னும் அவனை விட்டு விலக முடியாத மனநிலைக்கு ஆளாகிறாள். திருமணம் செய்து கொள்கிறார்கள்.
கொஞ்ச நாள் கழித்து, ஆதவன் வீட்டில் பணிபுரிபவர் கொலை செய்யப்படுகிறார். ஆதவனும் மாளவிகாவும் காணாமல் போகிறார்கள். போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அதில் தெரியவரும் விஷயங்கள் யாராலும் யூகிக்க முடியாதவையாக, பல மடங்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடிந்ததா, காணாமல் போன காரணம் என்ன? அவர்களுக்கு என்னவானது? என்பதற்கெல்லாம் படத்தின் பின்பாதியில் பதில் கிடைக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நட்டி நட்ராஜ். சில காட்சிகளில் உட்கார்ந்த இடத்திலிருந்தே பெரிய அலட்டல் ஏதுமின்றி குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களை விசாரிப்பது, ஒன்றிரண்டு காட்சிகளில் ஜீப்பில் அங்குமிங்கும் போய் வருவது என எளிமையான பங்களிப்பை தந்திருப்பவர் விசாரணையிலிருக்கும் புத்திசாலித்தனம் கதையின் நகர்வுக்கு வேகம் கூட்டுகிறது.
ஆதவன் பாத்திரத்தை ஏற்றிருக்கிற நிஷாந்த் ரூசோ சைக்கோ போல் நடந்து கொள்வது, செய்யாத குற்றத்தை செய்ததாக நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாவது என கதையின் முக்கியமான தருணங்களை அதிரிபுதிரியான நடிப்பால் நிரப்பியிருக்கிறார்.
ஆதவனுக்கு ஜோடியாக வருகிற மாளவிகா லட்சணமாக இருக்கிறார்; சிரிக்கும்போது அழகாக இருக்கிறார். கதையின் எதிர்பார்ப்புக்கேற்ப நடித்திருக்கிறார். பாடல் ஒன்றில் உடைகள் குறைந்திருக்க, கவர்ச்சி அதிகரித்திருக்கிறது.
நாயகனின் நண்பனாக வருகிற மூர்த்தி ஒரு தவறும் செய்யாமல் நண்பனிடமும் போலீஸிடமும் அடிபட்டு உதைபட்டு ஐயோ பாவம் என இரக்கப்பட வைக்கிறார்.
நாயகியின் அப்பாவாக இயக்குநர் அரவிந்த் ராஜ் தன்மையான மனிதராக வந்து போகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார் மனநல மருத்துவராக குறிப்பிடத்தக்க வேடத்தை ஏற்றிருக்கிறார்.
மனிதர்களை மன நோயாளிகளாக்குகிற, மிருகங்களாக மாற்றுகிற ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிச் சீரழிகிற இளைஞனாக வருகிறவர் சந்திக்கிற அனுபவங்கள், ஏற்படுகிற முடிவு சமூகத்துக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்துகிறது.
சரண்குமார் இசையில் சிவனை போற்றும் பாடல் சிலிர்ப்பு தர, பொங்கலோ பொங்கல்’ பாடல் உற்சாகமூட்டுகிறது. பின்னணி இசை காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கிறது.
ஒளிப்பதிவு நேர்த்தி.
எம்பாமிங் செய்யப்பட்ட சடலத்துடன் கிளைமாக்ஸில் காட்டப்படும் வீடு, இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிற லீடு.
பெட்ரோல் கிணற்றில் தீ பிடித்த பரபரப்போடு திரில்லர் அனுபவம் தரும் இந்த சீசா சமூக விழிப்புணர்வைத் தூண்டவும் செய்வதால் இயக்குநர் குணா சுப்ரமணியனை பலமாகப் பாராட்டலாம்!
சீசா _ ஆன்லைன்ல சூதாடினா ஆப்பு கன்பர்ம் ராசா!