#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே ஜே சுரேந்தர் தயாரித்து எழுதி இயக்க, ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை நடிப்பில் வந்திருக்கும் படம் மாயபிம்பம்.
நண்பர்கள் நால்வர் (ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார்) . அதில் ஒருவன் சபலப் பெண்களை சரியாக கண்டுபிடித்து மயக்கி படுக்கையில் பயன்படுத்துவதில் வல்லவன்.
பெண்களை பார்த்த கொஞ்ச நேரத்தில் இந்தப் பெண்ணை வீழ்த்த முடியும் ; வீழ்த்த முடியாது என்று கணிக்கும் திறமை வாய்ந்தவன் . அவன் கணிப்பு பொய்ப்பதே இல்லை.
அதைப் பார்த்து அவனது மற்ற மூன்று நண்பர்களுக்கும் வியப்பு, பிரம்மிப்பு மற்றும் பொறாமை .
”இப்படி பெண்களை பார்த்த மாத்திரத்தில் ஜட்ஜ் செய்வது தவறு” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான் ஒரு நண்பன் . இன்னொரு நண்பன் கணக்குப் பண்ணும் நண்பன் செய்வதில் தவறு என்ன என்கிறான். . நான்காவது நண்பன் இரண்டுக்கும் இடையில் . அவன்தான் நாயகன்.
நாயகனுக்கு உற்சாகமான அப்பா, பாச்சப் பிழம்பான அம்மா, புரிதல் உள்ள அண்ணன். நல்ல அண்ணி.
அண்ணன் மகளுக்கு சித்தப்பா மீது பிரியம் அதிகம்.
இந்நிலையில் நாயகன் ஒரு பெண்ணை சந்திக்கிறான் . அவனுக்கு அவள்மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது . அதை பார்க்கிற, கணக்குப் பண்ணும் நண்பன் , நாயகனிடம் “அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்கு” என்கிறான் . நாயகனுக்கும் அவளைப் பிடிக்கிறது.
இந்த நிலையில் அவளது அம்மாவின் கேரக்டர் சரி இல்லை என்ற விஷயம் நண்பர்களுக்கு தெரிய வருகிறது .
அவளும் அப்படி இருப்பாளோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது .
எனவே நாயகனை அவளோடு நெருங்கிப் பழகச் சொல்லி தனி அறைக்கு அழைத்துப் போகச் சொல்லி பிளான் போட்டுக் கொடுக்கிறான் கணக்காளன்
”அவள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தால் அப்புறம் கல்யாணத்துக்கு ஆக மாட்டாள் . இல்லை என்றால் அவள் தனது அம்மா போல இல்லை. நல்லவள் ” என்று அவன் சொல்ல , நாயகனும் அவளை தனியே அழைக்கிறான் . அவளும் தனி அறைக்கு அவனுடன் வருகிறாள் .
அதன் விளைவாக பல விபரீதங்கள் நடக்கின்றன. அவை என்னென்ன ? அதன் விளைவுகள் என்ன? அவள் நல்லவளா ? இல்லை கெட்டவளா? யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் ? என்பதே மாய பிம்பம்.
ஆரம்பத்தில் வரும் ஜெயில் காட்சி பிரமாதம் . வித்தியாசமான கமர்ஷியல் படம் பார்க்கப் போகிறோம் என்று தோன்றியது . பின்னர் அதில் இருந்து வேறு போக்கில் கதை திரும்பினாலும் கணக்குப் பண்ணும் நண்பனின் ஆரம்பக் காட்சிகள் ஆபாசமாக இல்லாமலும் கமர்ஷியல் சினிமாவுக்கு ஏற்ற மாதிரியுமே இருந்தது.
படத்தின் ஆணிவேர் மையம் எல்லாமே அந்த கதாநாயகி கேரக்டரும் அதில் நடித்து இருக்கும் ஜானகியும்தான். முக பாவனைகள், நடை உடை பாவனை என்று எல்லா வகையிலும் அற்புதமாக நடித்துள்ளார், கண்ணுக்குள்ளேயே நிற்கிறார் .
இந்தப் படம் எடுத்து ஏழு வருடம் ஆகி விட்டது என்கிறார்கள். ஒருவேளை இந்தப் படம் எடுத்து முடித்த உடனே ரிலீஸ் ஆகி இருந்தால் தமிழ் சினிமாவுக்கு ஓர் அற்புதமான குணாதிசயச் செறிவான முகம் கொண்ட கதாநாயகி கிடைத்து இருப்பார். இப்போது பத்திரிக்கையாளர் காட்சிக்கு கூட வரவில்லை எங்கே இருக்கிறீர்கள் ஜானகி? எப்படி இருக்கிறீர்கள் ?
திரைக்கதையில் கதாநாயகி பாத்திரம் மிக இயல்பாக வருவது சிறப்பு. ரொம்ப இடைவேளைக்குப் பிறகு ஓர் அழுத்தமான கதாநாயகி கேரக்டர். அருமை. ஆனால் போகப் போக , அந்த கேரக்டர் வார்க்கப்பட்ட விதம் யதார்த்தம் இல்லாமல் போய் விட்டது.
ஒரு நிலையில் கூறியது கூறல் போல ஒரே இடத்தில் ஒரே விஷயத்தில் திரைக்கதை தேங்கி நிற்கிறது . இடைவேளை பகுதி மீண்டும் விறுவிறுப்பு.
சில கதாபாத்திரங்கள் மீது நாம் வைத்திருக்கும் எண்ணத்தை அப்படியே மாற்றிப் போடும்படியாக எழுதப்பட்ட இரண்டாம் பகுதி சிறப்பு. அது முதல் பாதியில் வந்த காட்சிகளில் இருந்து உருவாகி வருவதும் பாராட்டுக்குரிய விஷயம் .
சில காட்சிகளின் ஆரம்பம் செயற்கையாக இருந்தாலும் அந்தக் காட்சிகளின் முடிவில் ஏற்படும் திருப்பங்களால் அந்தக் காட்சிகளும் சோபிக்க ஆரம்பிக்கிறது. நாயகனின் குடும்ப பாசக் காட்சிகள் எல்லாமே அதே ரகம்.
பாராட்ட இவ்வளவு இருந்தும் , சில முக்கிய திருப்பங்களுக்குப் பிறகு சில கதாபாத்திரங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறாக இயங்கும்போது, படம் வலுவிழக்க ஆரம்பிக்கிறது.
வித்தியாசமான ஒரு காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் நோக்கி போனது சரி. ஆனால் அந்த வித்தியாசமான காட்சி கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருப்பதால், மனதுக்கு நெருக்கமாகவில்லை.
நந்தாவின் இசை சில இடங்களில் பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறது . எட்வின் சகாயின் ஒளிப்பதிவு ஓகே.
கதாநாயகியின் டைரி படிக்கும் காட்சிகளை எடிட்டர் வினோத் சிவகுமார் இன்னும் சிறப்பாக தொகுத்து இருக்கலாம் . முதல் பாதி ஒரு மணி நேரம்; இரண்டாம் பகுதி ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய ஒற்றைச் சரடு திரைக்கதை இது. ஆனால் இருபத்தைந்து நிமிடங்கள் அதிகம் ஓடுகிறது.
ஒரு கதையில் ஒரு காட்சி அல்லது கதைப் போக்கு வித்தியாசமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும்.
ஆரம்பம் முதலே வித்தியாசமான முயற்சிகள் இருக்கின்றன . ஆனால் இரண்டாம் பகுதியில் படம் அடுத்தடுத்து விபரிதமாகவே போகிறது.கிளைமாக்ஸ் ஏரியா மொத்தமாக வீண்.
இரண்டாம் பகுதியில் ஒரு அற்புதமான கதை இருக்கிறது. ஆனால் அதை பண்ணவே கூடாது என்ற முடிவோடு படம் எடுத்து இருக்கிறார்கள் .
விளைவு ?
இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஆலமர விழுது மட்டுமே பாறைகளை இணைக்கும் பாலம் போல இருக்கும் குறுகலான, எந்த பிடிப்பும் இல்லாத இடத்தில், கண்ணைக் கட்டிக் கொண்டு நடந்து தடுமாறி பள்ளத்தில் விழுந்து மண்டை நொறுங்கி … உயிர் பிழைத்தாலும் பயன் இல்லாத ஜட உடம்பு போல ஆகி விட்டது படம். இது போதாது என்று இயக்குனர் வேறு ஜடமான படத்தை , மூச்சை அழுத்திப் பிடித்துக் கொலை செய்கிறார் .
மாயபிம்பம் தகுதியான கதை, தக்கையான திரைக்கதை.