வித்தைகாரன் - திரை விமர்சனம் - 4/5

சதீஷ் இந்த படத்தில் மேஜிக் மேன் ஆகவும் விமான நிலையத்தில் குப்பை அள்ளுபவராகவும் நடித்திருக்கிறார். அயன் படத்தில் வருவது போல விமான நிலையத்தில் தங்கத்தையும் வைரத்தையும் கடத்தும் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு, அவர்களுடன் இவருக்கு பிரச்சனை எப்படி வெடிக்கிறது. அதை இவர் எப்படி டீல் செய்து நாயகனாக ஜெயிக்கிறார் என்பது தான் இந்த வித்தைக்காரன் படத்தின் கதை.


சினிமாவில் அவர் காமெடி பண்ணாலே பெரிதாக ரசிகர்கள் சிரிக்க முடியாத அளவுக்குத்தான் காமெடி காட்சிகளில் நடித்து வந்தார். சன்னி லியோன், தர்ஷா குப்தாவுடன் அவர் நடித்த ஓ மை கோஸ்ட் படம் ஓடவே இல்லை. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் ஹீரோவாக சதீஷுக்கு ஒரு நல்ல பேய் படமாகவே அமைந்தது. அந்த படத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். ஆனால், மீண்டும் வித்தைக்காரன் படத்தில் நல்ல காமெடி காட்சிகள் ரொம்பவே மிஸ்ஸிங் ஆகி ரசிகர்களை சோதிக்கின்றன.


நடிகர் சதீஷ் நடிப்பில் கொஞ்சம் கொஞ்சம் முன்னேற முயற்சிப்பது படத்துக்கு பிளஸ். ஆனந்த்ராஜ் டாலர் அழகு எனும் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காமெடியனாக வந்து தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். அதன் பின்னர் ஜான் விஜய் கொடுத்த கதாபாத்திரத்திற்கு எப்போதும் போல ஓவர் ஆக்டிங்கை அள்ளித் தெளித்து சென்றிருக்கிறார். ஹீரோயினாக சிம்ரன் குப்தா வந்து போகிறார். வெங்கட் பரத் இசையில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் சுமார் ரகம் தான்.