#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
டுவின் ஸ்டுடியோஸ் லதா பாலு மற்றும் துரை கனி வினோத் தயாரிப்பில் சிபிராஜ் , கஜராஜ், திலீபன், ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் என்பவர் இயக்கி இருக்கும் படம்.
ஆம்னி பஸ் ஒன்றில் ஒரு பெண்ணை சித்திரவதை செய்வதாக போலீசாருக்கு போன் வருகிறது . சுறுசுறுப்பான – சபரி மலைக்கு மாலை போட்டு இருக்கிற இன்ஸ்பெக்டர் (சிபிராஜ்) நடவடிக்கை எடுக்க கிளம்புகிறார் .
போனில் சொன்ன பேருந்து நம்பரை வைத்து பஸ்ஸைப் பிடித்தால் அங்கே இறந்து கிடப்பது ஓர் இளைஞன் .
இது தவிர ஒரு இளம்பெண்ணைக் காணவில்லை என்று ஒரு புகார் வந்திருக்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சூழலும் நிலவுகிறது.
சித்திரவதை செய்யப்பட்ட பெண் எங்கே ? செத்துப் போன நபர் யார் காரணம் என்ன கதை என்ன என்பதே படம்.
பத்து மணி நேரத்தில் நடக்கும் படம் என்பதால் அந்தப் பெயர் .
ஆம்னி பஸ்களில் ஒரே பதிவு எண்ணில் பல பஸ்களை ஓட்டி அதன் பின்னால் பல தவறுகள் ஊழல்கள் குற்றங்கள் நடந்ததும் அது பின்னர் அரசால் கட்டுப்படுத்தப்பட்டதும், உண்மையில் நடந்த விஷயம் . (ஆனால் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கு)
சுறுசுறுப்பான இன்ஸ்பெக்டரான உற்சாகமாக நடித்திருக்கிறார் சிபிராஜ் . சிறப்பு
அது என்னவோ தெரியவில்லை , மலையாளப் படங்களில் எல்லாம் தமிழக ஐயப்ப பக்தர்களை பொறுக்கிகள் , கஞ்சா விற்பவர்கள், பெண்களை வைத்துப் பிழைப்பவர்கள் என்று, அவர்கள் செய்வதை நம்மேல் சொல்லி படங்களை எடுத்தாலும் கூட , நம்ம ஊர் ஹீரோக்கள் எல்லாம் தொடர்ந்து சபரிமலைக்கே மாலை போடுகிறார்கள் .
இனிமேலாச்சும் பழனிக்கோ திருச்செந்தூருக்கோ மாலை போட்டு விடுங்கப்பா.
கே எஸ் சுந்தர மூர்த்தியின் அட்டகாசமான பின்னணி இசையும் ஜெய் கார்த்திக்கின் சூழலை உணர்த்தும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
அருண் சங்கர்துரையின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது .
இருக்கற மாவை வைத்து இட்லி சுட்டுக் கொடுத்து இருக்கிறார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.
ஒரு சூழலில், இருபது முப்பது பேரை நிற்க வைத்து, குற்றவாளி இவரா? இல்லை அவரா? இல்லை அந்த நபரா ? இல்லை இந்த ஆளா ? என்று தாவிக் கொண்டு இருப்பதாலேயே அது சுவாரஸ்யமாகி விடாது.
சந்தேகம் விழுவதுஎப்போது, எப்படி ? சந்தேகம் நீங்குவது எதனால் என்பதில் இண்டரஸ்ட் இருந்தால்தான் அந்த நடைமுறை தாங்கும் . இங்கே அது இல்லை .
துப்பு துலக்கும் விசயத்தில் தடயங்களை வைத்து ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் காட்டினார்கள் . இந்த வகையில் கடைசியில் ஏதோ பின்னிப் பெடல் எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.
விசாரணைக் காட்சிகளை பரபரப்பு என்ற பெயரில் இப்படி தாவித் தாவி ஓட விடாமல் நிதானமாக அழுத்தமாகக் கொடுத்து இருந்தால் கூட, திரைக்கதை இப்படி மேம்போக்காகப் போகாமல் இருந்திருக்கும் .
ஆம்னி பஸ் குற்றங்கள் என்பது உண்மையில் அட்டகாசமான விஷயம்
ஆனால் அதை வைத்து வீடு கட்டி விளையாட வேண்டாமா? கிடைத்த செங்கல்களையும் பல்பொடி ஆக்கி பாக்கெட் போட்டு விட்டு சும்மா குச்சி கட்டி இருக்கிறார்கள்
கிளைமாக்சில் அட என்று ஆச்சர்யப்படும் ஒரு விஷயம் சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் நீங்களாகப் பார்த்து ஆச்சர்யப்பட்டால்தான் உண்டு ;. அப்படி ஒரு நுனிப்புல் .
மொத்தத்தில் டென் ஹவர்ஸ்…. ஜஸ்ட் டென் மினிட்ஸ் .