#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தமிழ் திரையுலகில் தனித்துவமான பின்னணி இசையாலும், வித்தியாசமான இசைக்கோர்வைகளாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஒவ்வொரு படத்திற்கும் கதையின் தன்மைக்கு ஏற்ப புதிய இசை அனுபவத்தை வழங்கி வரும் அவர், தற்போது அடுத்தடுத்து பல மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில், நாளை (நவம்பர் 20) சாம் சி எஸ் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில், தெலுங்கு திரையுலகின் எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி இயக்கி நடிக்கும் #RAPO23 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் இந்த இரண்டு முக்கியமான திரைப்படங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் உருவாகியிருப்பது சாம் சி எஸ் இசைப் பயணத்தில் கவனம் ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
குறிப்பாக, ராம் பொதினேனி தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கும் #RAPO23 திரைப்படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. ராம் பொதினேனி நடிப்பதுடன், எழுதி இயக்கும் இப்படம் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. ‘The Story of a Lone Wolf’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள படத்தின் புதிய போஸ்டர், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா பொதினேனி தயாரிக்கும் இப்படத்தில் சம்யுக்தா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை திருநாவுக்கரசு கவனிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ராம் பொதினேனியின் இயக்குநர் அறிமுகப் படத்தில் சாம் சி எஸ் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சாம் சி எஸ் இசையமைப்பில் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படமும் அடுத்ததாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘டிமான்டி காலனி 2’ படத்தின் பின்னணி இசை மூலம் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி எஸ், மூன்றாம் பாகத்திலும் தொடர்வது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படம் பொங்கல் 2027 வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
‘கராத்தே பாபு’, உள்ளிட்ட பல படங்களில் சாம் சி எஸ் தனது இசைப் பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மூலம் தனது 100-வது பட மைல்கல்லையும் அவர் கடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் அவரைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன. மேலும், புஷ்கர் – காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் உள்ளிட்ட எதிர்பார்ப்புக்குரிய படங்களுடனும் அவரது பெயர் இணைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் எனப் பல்வேறு தளங்களிலும் தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார் சாம் சி எஸ். ‘கைதி’, ‘வணங்கான்’ உள்ளிட்ட படங்களில் பின்னணி இசை மூலம் கதையின் உணர்வுகளையும் தீவிரத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர், காதல் மெலடிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
ஒரு இசையமைப்பாளராக 100 படங்களைக் கடந்தது மட்டுமின்றி, ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதிலும் சாம் சி எஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, பின்னணி இசையில் அவர் உருவாக்கும் தனித்துவமான சவுண்ட் டிசைனும், கதைக்கேற்ற இசை மொழியும் அவருக்கான தனி அடையாளமாக மாறியுள்ளன. சமீபத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த கன்னடத் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.