மேகமும், இருளும் மூடும் பாதை

Home

முந்திய பகுதி....மரண இருளின்பள்ளத்தாக்கில்

மேகமும், இருளும் மூடும் பாதை

பயணிகள் முன்தொடர்ந்து செல்லும்போது, ஒரு பெரிய பள்ளம் அவர்கள் போகும் பாதையை மறைத்தது; அதை கடந்து போக முயன்றபோது ஒரு பெரிய மேகமும், இருளும் அவர்களை சூழ, அவர்களால் எதையும் காணமுடியவில்லை. "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு முடிவை பாருங்கள்" என்று வழிகாட்டி கூறினார். அப்போது சத்துருக்களின் பயமுறுத்தல்களை கேட்டனர்; பாதாளத்தின் நெருப்பையும் புகையையும் உணர்ந்தனர். அப்போது கிறிஸ்டியானா, மேர்சியைப் பார்த்து தன் கணவன் தனியாக இந்த பள்ளத்தாக்குகளில் எவ்வாறு துன்பம் அனுபவித்திருப்பார்; தீய ஆவிகள் அவரை துண்டுதுண்டாக கிழித்திருக்கக்கூடும் என்று கூறி துக்கமடைந்தாள். இந்த மரண இருளின் பள்ளத்தாக்கைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், நேரில் காணும்போதுதான் உண்மை அறியவருகிறது என்று மேலும் கூறினாள். பதிலாக வழிகாட்டி," இந்த அனுபவம் கப்பலேறி, கடல் யாத்திரை பண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறதுபோலாகும். கடலின் ஆழங்களில் இறங்குகிறவர்கள், மலைகளின் அடிவாரத்தில் இறங்கி பூமியின் கடையாந்தரத்தை காண்கிறார்கள்; வெளிச்சம் இல்லாமல் இருளில் நடப்பவர்கள் ஆண்டவரை நம்பவேண்டும்", (சங்கீதம் 107:23) என்று வழிகாட்டி கூறினார். "நான் இந்த பள்ளத்தாக்கில் அநேகந்தரம் போயிருக்கிறேன். ஆனாலும், நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். நான் பெருமையாக இதை சொல்லவில்லை. எனக்கு நானே இரட்சகன் அல்ல. நமக்கு இரட்சிப்பு கண்டிப்பாக வரும். நாம் இப்போது நமது பாதையில் வெளிச்சத்திற்காக ஆண்டவரிடம் வேண்டுவோம்; அவர் சாத்தானை கடிந்துகொண்டு இருளை வெளிச்சமாக்குவார்", என வழிகாட்டி கூறினார். உடனே எல்லாரும் அழுது ஜெபித்தனர். மேர்சி, "இந்த இடத்தில், நாம் பொருள்கூறுபவரின் வீட்டிலும் (Interpreter's House), நுழைவு வாசலின் இடத்திலும் (Wicket Gate), கிடைத்த இன்பங்களை அனுபவிக்க முடியவில்லை", என்று கிறிஸ்டியானாவை நோக்கி உரைத்தாள். அப்போது சாமுவேல், "அப்படி ஒன்றும் இல்லை. இந்த இடம் மோசமாக இருந்தாலும் இந்த வழி மூலம் தான் நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் ஒளி மயமான தேசத்திற்குப்போவோம்", என்று பதிலளித்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

நாம் எப்போதும் சந்தோஷமான சூழ்நிலைகளில், நமது வாழ்க்கைகளில் அற்புதமும் அடையாளமும் நடைபெறுவதை மாத்திரம் விரும்புகிறோம். உபத்தரவத்தின் குகை வழியாக போய், நமக்கு ஆண்டவர் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு பொறுமை இல்லை. நமது போதகர்மார்கள், சுவிசேஷகர்கள் ஜெபித்தவுடனே ஆசீர்வாதங்களை பெற விரும்புகின்றோம். முதலாவது சிலுவையும் பாடுகளையும் அனுபவித்தால்தான், பின்பு உயிர்த்தெழுதலில் பங்குபெறுவோம்!

அநேக நாட்கள் ஆண்டவருக்காக காத்திருந்து, அவர் நமக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.

"என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்" (சங்கீதம் 30:11).

"சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்" (ஏசாயா 61:3).

சீயோனிலே துயரம் உண்டு. துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலதம்! ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடை!

நமது பாதையிலுள்ள இருள் மாற நாம் விடாப்பிடியாக பிரார்த்தனை பண்ணவேண்டும். இருள் மாற ஜெபிப்பது நமது கடமை. உபத்திரவ குகையில்தான் நமக்கு தெய்வீக ஆசிர்வாதம்! காணிக்கை கொடுத்து ஆசிர்வாதத்தை பெறமுடியாது.

தொடர்ந்து படிக்க......மரண இருளின் பள்ளத்தாக்கில் எனது சாட்சி