நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி

Previous......மகிழ்ச்சி மலையில் பயணிகள்

நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி

மேய்ப்பர்கள் பயணிகள் இருவரையும் (நம்பிக்கையையும், கிறிஸ்தியானையும்) மலையின் அடியிலிருந்து ஒரு கதவண்டை அழைத்துச் சென்றார்கள். கதவைத் திறந்த உள்ளே பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். உள்ளே மிக ஆழமான பள்ளம் காணப்பட்டது. கருமை நிறப் புகை வெளிக்கிளம்பியது! நெருப்பு எரிகிற இரைச்சலும் கேட்டது! வேதனையில் புலம்புகிறவர்களின் கூக்குரல் எழுந்தது! இது எந்த இடம்? என்று கேட்டான் கிறிஸ்தியான். இது நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி, பாசாங்கு செய்பவர்களின் வாசல் என்று இதற்குப் பெயர் என்று விளக்கினார்கள் மேய்ப்பர்கள்.

தங்களின் ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவர்களாக இல்லாமலும், பணஆசையால் யேசுவை காட்டிக்கொடுத்த யூதாசைப்போல இல்லாமலும், தங்கள் நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி சுவிசேஷத்தை தூஷணம் செய்த இமெனென் அலெக்சாண்டர் (Hymenaeus and Alexander) போன்றவர்களாக இல்லாமலும், பண ஆசையால் பரிசுத்தாவியானவரிடம் பொய் சொன்ன அனனியா சப்பீராள் போன்றவர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும்மென்று மேய்ப்பர்கள் பயணிகளுக்கு எச்சரித்தனர்.

பிறகு பயணிகளை தெளிவு என்ற மலைமுகட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு தொலைநோக்கியை அவர்கள் கையில் கொடுத்து, இதோ இதன்மூலம் பார்த்தால் மோட்சத்தின் வாசல் தெரியும் என்று கூறினார்கள். ஆனால் பதட்டத்தின் காரணமாகப் பயணிகளின் கை ஆடியது! அதனால் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை!

பயணிகள் மேய்ப்பர்களிடமிருந்து விடைபெறும் வேளை வந்தது. மேய்ப்பர்களில் ஒருவன் அவர்கள் இனிச் செல்லவேண்டிய பாதையின் வரைபடம் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்தான். மற்றறொருவன் முகத்துதி என்பவனைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஆலோசனை கூறினான், மூன்றாமவன் மயக்க நிலத்தில் படுத்து உறங்கிவிடாதீர்கள் என்று எச்சரித்தான். நாலாமவன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! என்று கூறி வழியனுப்பி வைத்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இந்த மூன்றுவிதமான மேய்ப்பர்கள் பயணிகளை 'தெளிவு' (Discernment) என்ற மலைமுகட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். இவர்கள் நமது ஆவிக்குரிய கண்களை திறப்பார்கள். இவர்கள் இனிச் செல்லவேண்டிய பாதையின் வரைபடம் ஒன்றை பயணிகளுக்கு கொடுப்பார்கள். இவர்கள் உங்களிடம் எந்தவிதமான தசம பாகத்தையோ, காணிக்கையோ எதிர்பார்க்கமாட்டார்கள்.

இவர்கள் "முகத்துதி" என்பவனைக் குறித்து எச்சரிப்பார்கள். நம்மை முகத்துதி செய்து, மோட்ச பாதையிலிருந்து விலகி போகச்செய்யும், கள்ள ஊழியர்களை குறித்து எச்சரிப்பு செய்வார்கள். மகிழ்ச்சி மலையை அடைந்தாலும் பாவ படுகுழிக்குள் விழந்து மோட்சப்பட்டணத்தை இழக்க நேரிடும். பண்ணியன் கொடுக்கும் நான்கு பெயர்களின் உதாரணங்களை அறியவேண்டும். நாம் பாசாங்கு செய்பவர்களாக மாறி, பாவ படுகுழிக்குள் விழ வாய்ப்பு இருக்கிறது.

ஆவிக்குரிய அனுபவங்களில் மகிழ்ச்சி மலையை அடைந்தாலும், நரகத்திற்குப்போக வழி இருக்கிறது. யூதாசைபோல பண ஆசை இருக்கக்கூடாது. ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போல, உலக சிற்றின்பங்களுக்கு அடிமையாகி இரட்சிப்பை நாம் இழந்துவிடக்கூடாது. விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி, சுவிசேஷத்தை தூஷணம் செய்த இமெனென், அலெக்சாண்டர் போல நாம் மாறிவிட்டால் மோட்சப்பட்டணத்தை இழந்துவிடுவோம். பண ஆசையால் பரிசுத்தாவியானவரிடம் பொய் சொன்ன அனனியா, சப்பீராள் போல நாமும் துணிகரமாக பரிசுத்தாவியானவரிடம் பொய் சொல்லி இத்தனை வருடங்கள் ஆண்டவருக்கென்று ஜீவித்து, கடைசிக் கட்டத்தில் நமது பந்தயப்பொருளை இழக்க நேரிடும். "பாம்பு ஏணி" விளையாட்டில் 99ம் கட்டத்திலிருந்து நூறாம் கட்டத்தை அடையும் முன்னால் சர்ப்பமான சாத்தான் கடித்து உங்களை கீழே கொண்டுவர முயற்சிப்பான். ஆகவே நீங்கள் கவனத்தோடு ஓட்டத்தை ஓட்டி முடிக்கவும்.

Next....கிறிஸ்டியானும் நம்பிக்கையும் அறியாமை என்ற பயணியுடன்