யார் இந்த கிரேட் ஹார்ட்

முந்திய பகுதி.....மரண இருளின் பள்ளத்தாக்கில் எனது சாட்சி

யார் இந்த கிரேட் ஹார்ட் (பெரிய இருதயம்)?

இந்த அரக்கனோடு கிரேட் ஹார்ட் போன்ற ஊழியர்கள் (Evangelists) ஜெபத்தினால் மேற்கொள்ளவேண்டும்.

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து......." (நீதிமொழிகள் 3 :5).

ஜான் பண்ணியன், கிரேட் ஹார்ட் என்ற ஒரு கதா பாத்திரத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். கிரேட் ஹார்ட், அரக்கனோடு யுத்தம் செய்து வெற்றி பெறுவது போராட்டங்களில் நாம் வெற்றி பெறுவதை குறிக்கிறது. நமக்கு ஒரு பலமுள்ள, நிலையான, இருதயம், அதாவது எதையும் தாங்கக்கூடிய, கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கும் இருதயம் வேண்டும். "என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்"(சங்கீதம் 73:26). கர்த்தர் தனது ஊழியத்திற்கு அழைக்கும் பணியாளர்களுக்கு, இதேபோல ஒரு இருதயம் பெற்று இருக்கவேண்டும். கிரேட் ஹார்ட், அரக்கனை அவனது விலாஎழும்பில் (Rib) குத்திக்கொன்றுபோட்டார். ஜான் பண்ணியன் பின்வரும் வேதவசனத்திலிருந்து இந்த பதத்தை எடுத்திருக்கிறார். ஆங்கிலத்தில் "Fifth Rib" என்று எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலோ "வயிறு" என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. "அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே (Fifth Rib) குத்திக்கொன்றுபோட்டான்" (2 சாமுவேல் 3:27).

இந்த சம்பவம், ஒரு தைரியத்துடன் சாத்தானோடு போராடி, அவனை செயலிழக்கச் செய்யும் ஒரு வீரப்போரை வெளிப்படுத்திக்கிறது.

கடைசியில், கிரேட் ஹார்ட் ஜெபத்தின் மூலமாக அரக்கனைக் கொன்றார். இந்த அரக்கன் ஏற்கனவே, தோற்றுப்போனவன் என்ற சத்தியத்தை மறக்கவேண்டாம்.

கிரேட் ஹார்ட், தனது கடைசியில் உபயோகித்த ஜெபம் என்ற ஆயுதத்தை முதலாவது உபயோகித்திருக்கவேண்டும். ஜெபம் முதலாவது, இரண்டாவது தேவ வசனமாகிய பட்டயம்!

"ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" (எபேசியர் 6 :12).

அஞ்சாநெஞ்சனாக, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொண்டு இந்த பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நாம் போராட்டம் நடத்தவேண்டும்.

எங்கேயெல்லாம் அல்லது எப்போதெல்லாம், நாம் அபொல்லோயோனின் பிடியிலிருந்து அப்பாவி மக்களை விடுவிக்கிறோமோ, அங்கே ஒரு தூணை (சாட்சி) நிறுத்தவேண்டும். சாட்சியை எல்லாரும் படிக்கும்படி எழுதிவைக்கவேண்டும். அவனது உயிரில்லாத தலை இந்த சாட்சியின் மூலமாக அங்கே தொங்கப்படவேண்டும். ஏற்கனவே, அவன் தலையை கிறிஸ்து நமது கால்களின் அடியில் நசுக்கிவிட்டார். நாம் எந்த மகிமையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. கிரேட் ஹார்ட் ஆண்டவருக்கத்தான் எல்லா மகிமையும் கொடுக்கிறார்.

பிசாசை துரத்துவது

இன்று நமது ஊழியர்கள் பொல்லாத ஆவிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மக்கள் கீழே விழுந்துக் கிடப்பதையும், அவர்கள் சத்தம் போட்டுக்கொள்வதையும், பெருமையாக வீடியோ காட்சிகளில் காண்பித்து தங்களின் ஊழியங்களை விளம்பரப்படுத்துகின்றனர். ஆண்டவருடைய நாமம் மகிமைப்படவேண்டுமானால், அங்கே விழுந்துபோன, தலை நசுக்கப்பட்ட அப்பொல்லோயோனின் தலையைத்தான் காண்பிக்கவேண்டும். அது எப்படி என்று கேட்பீர்கள்? போட்டோவை காண்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த புகைப்படங்கள் சாத்தானின் கொடூரத்தையும், அவனது வல்லமையும் காண்பித்து, விடுவிக்க பட்ட மக்களை இழிவுபடுத்துவதாகவும் காண்பிக்கிறது. கீழே குறிப்பிடட வசனங்களை, அந்த போட்டோக்களுக்கான இடத்தில் பிரசுரிக்கலாம் அல்லவா? வீடியோவை தயவுசெய்து காண்பிக்கவேண்டாம். காண்பித்தால் மகிமை உங்களுக்குத்தான் வந்து சேரும். விடுவிக்கப்படட மக்களின் சாட்சிகளை (புகைப்படங்கள் இல்லாமல்) இந்த வசனங்களுடன் பிரசுரிக்கலாம் அல்லவா? இந்த புகைப்படங்கள் சாத்தானின் கொடூரத்தையும், வல்லமையும், விடுவிக்க பட்ட மக்களை இழிவுபடுத்துவதாகவும் காண்பிக்கிறது.

"நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்" (கொலோசெயர் 2 :14-15).

"சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்" (ரோமர்16:20).

இன்று அநேக ஊழியர்கள் பிசாசுவை குறித்தே போதித்து தன்னிடம் ஜெபிக்க வருபவர்களின் மேல் கைகளை வைத்து பிசாசுதான் அவர்களின் நோய்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று கூறி பிசாசின் மேல் தங்களுக்கு வல்லமை தரும்படி ஜெபிக்கிறார்கள். ஒரு சிறுமி இந்த ஜெபத்தைக் கேட்டு, “இயேசு ஏற்கனவே பிசாசின் தலையை நசுக்கிவிட்டார் என்று நான் அநேகந்தரம் கேட்டு இருக்கிறேனே. தலையை நசுக்கினால் பிசாசு எப்படி நம்மை தாக்கமுடியும்” என்று கேட்டாளாம். இதற்கு ஒரு பதிலுமே அந்த போதகரால் கொடுக்கமுடியவில்லையாம்.

சாத்தானின் தலை என்பது அவனது மாமிசமும் ரத்தமும் உள்ள தலை அல்ல. அவனின் தத்துவங்கள் (doctrines) ஆகும். அவனின் சூழ்ச்சிகளும் தந்திரங்களும் ஆகும். நாம் அவனை பற்றிய சத்தியங்களை தேவ வசனங்களின் மூலமாக அறிந்தால் சத்தியம் நம்மை விடுதலையாக்கிவிடும். ஏற்கனவே கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினால் அவன் வல்லமையை இழந்துவிட்டான். நாம் அவனை நாம் நமது ஆவிக்குரிய கால்களின் கீழ் கொண்டுவரும்போது அவனின் ஆவிக்குரிய தலை நசுக்கப்பட்டுவிடும். நாம் ஆவிக்குரிய பூரணராக மாறிக் கொண்டுவரும்போது நம்மிலுள்ள கிறிஸ்து அவனின் தந்திரங்களை மேற்கொண்டு அவனின் தலையை நசுக்குகிறார். அவன் இன்று வேறு ஒரு கிறிஸ்துவாக விளங்குகிறான் (Antichrist ). நாம் அவனின் தலையை அதாவது அந்திகிறிஸ்துவின் ரூபத்தைக் கண்டு, அடையாளம் கண்டு கொள்ளாமல் அவனது வல்லமை இல்லாத சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். எதற்கு எடுத்தாலும் அவன் தான் காரணம் என்று போதித்து அவனுக்கு உயிர் கொடுக்கிறோம். அந்திகிறிஸ்துவின் ஆவியை ஏற்றுக்கொள்ளுகிறோம். அந்திகிறிஸ்துவின் அடையாளங்களை பரிசுத்தாவியானவருக்குக் கொடுத்து (attribute) விடுகிறோம்.

தொடர்ந்து படிக்க..... நேர்மை என்ற பழைய பயணி