மாயாபுரியில் பயணிகள்

Previous.....வாயடியைச் சந்தித்தல்

மாயாபுரியில் பயணிகள்


கிறிஸ்தியான், உண்மையானவன் இருவரும் மாயாபுரியை அடைவதை நான் என் கனவில் கண்டேன்.

மாயாபுரியில் மாயக் கண்காட்சி என்ற கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. எங்கும் மக்கள் கூட்டம்.இந்தக் கண்காட்சி எப்போதுமே தொடர்ந்து நடை பெற்றுவரும் கண்காட்சியாகும். பெயெல்செபூல். அப்பொல்லியோன், லேகியோன் என்ற சாத்தானின் கூட்டத்தினரே இந்தக் கண்காட்சியை நடத்திவந்தார்கள்! மோட்சத்துக்குச் செல்லும் பயணிகளைக் கவர்ந்திழுக்கவே அந்தப் பாதையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது! இங்கு உலகப்பிரகாரமான புகழ், மாம்சத்துக்கடுத்த இன்பங்கள் இவற்றை விலைகொடுத்து வாங்க முடியும்! சூதாட்டம், நடனங்கள், போக்கிரிகளின் சபை இவை எப்போதுமே நடந்துகொண்டிருக்கும்!கிறிஸ்தியானும், உண்மையானவனும் கண்காட்சிக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் அவர்களை வெறித்துப் பார்த்தார்கள். அவர்களுடைய உடை வித்தியாசமானதாயிருந்தது. பயணிகள் இருவரும் கானானின் மொழியைப் பேசியதைக் கேட்ட மற்றவர்கள் அவர்களைக் கேலி செய்தார்கள்.

அங்குள்ள வணிகர்கள் இவர்களிடம் வீண்பெருமைகளை விற்க முயன்றார்கள். அவர்களோ காதுகளைப் பொத்திக்கொண்டு, இந்த வீண்பெருமைகள் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

அப்படியானால் எதைத்தான் வாங்குவீர்கள்? என்று ஒரு வணிகன் அவர்களைக் கேலி செய்தான். பயணிகளோ சற்றும் தயங்காமல், நாங்கள் உண்மையைத்தான் வாங்குவோம் என்று கூறினார்கள்.

இந்தப் பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். சிலர் அவர்களைப் பரியாசம் செய்தார்கள். ஆனால் மற்றவர்களோ அவர்களை அடிக்கத்துவங்கினார்கள்! எங்கும் ஓரே கூச்சலும், குழப்பமுமாகிவிட்டது!

கண்காட்சியின் தலைவன் இதைக் கேள்விப்பட்டான். அவர்களைக் கைது செய்து அழைத்து வருமாறு கட்டளையிட்டான்! அவர்களை விசாரிக்கும் குழுவினர் பல கேள்விகளைக் கேட்டனர்.

நாங்கள் மோட்சத்துச் செல்லும் பயணிகள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்றே இருவரும் திரும்பத் திரும்ப சொல்;லிக்கொண்டிருந்தார்கள்.

இந்தப் பதில் விசாரிப்புக் குழவினருக்கு எரிச்சல் மூட்டியது. புத்தி சுயாதீனம் இல்லாதவர்கள் என்று திட்டினார்கள், அடித்து உதைத்தார்கள். பிறகு அவர்களை ஓர் இரும்புக் கூண்டுக்குள் அடைத்து, எல்லோரும் அவர்களைப் பார்க்கும்படி கண்காட்சியின் நடுவே அந்தக் கூண்டை வைத்தார்கள்.

கண்காட்சியில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களைக் கேலிசெய்து காறித் துப்பினார்கள். ஆனால் பயணிகள் இருவருமே ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

இதற்கிடையே பயணிகளை என்ன செய்யலாம் என்ற பதில் மற்றவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது, விவாதம் வலுத்தது! பின்னர் அடிதடியில் சென்று முடிந்தது! அவர்களே ஓருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள்.

இந்தக் கலகத்துக்குக் காரணம் கிறிஸ்தியானும், உண்மையானவனுமே என்று குற்றம் சாட்டி அவர்களைத் தலைவனின் முன்னே அழைத்துச் சென்றார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"மோட்சத்துக்குச் செல்லும் பயணிகளைக் கவர்ந்திழுக்கவே அந்தப் பாதையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது! இங்கு உலகப்பிரகாரமான புகழ், மாம்சத்துக்கடுத்த இன்பங்கள் இவற்றை விலைகொடுத்து வாங்க முடியும்! சூதாட்டம், நடனங்கள், போக்கிரிகளின் சபை இவை எப்போதுமே நடந்துகொண்டிருக்கும்!" இது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது. ஆராதனை என்ற பெயரில் நமது சபைகளில் நடனங்கள் நடந்துகொண்டிருக்கிறது. வானத்தை உச்சி எட்டும் அளவில் குளிர் அறைகளுடன் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. விலை உயர்ந்த கார்கள், உல்லாச நகர், 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் அறைகள் எல்லாம், இன்று நமது ஊழியக்காரர்களிடமும், அவர்களது சபைகளின் கட்டிடங்களிலும் காணலாம். ஒரு புதிய விசுவாசிக்கு இவைகளெல்லாம் இடையூறு உண்டுபண்ணுகிறது. இவைகளை எல்லாம் எனக்குத் கர்த்தர் தரவேண்டும் என்ற எண்ணம் இந்த விசுவாசியை மாயாபுரி சந்தையை நோக்கி இழுக்கிறது. கிறிஸ்தியானும், உண்மையானவனும் "நாங்கள் உண்மையைத்தான் வாங்குவோம்", என்று கூறினார்கள். இன்று நமக்கு கள்ள உபதேசங்கள் போதிக்கப்பட்டு எப்படி ஊழியக்காரர்களின் பலவிதமான திட்டங்களில் பணத்தை விதைத்தால் அநேக மடங்காக பணம் அறுவை செய்யப்படும் என்றும், இந்த பணத்தை வைத்து நிலம், பங்களா வாங்கலாம் என்றும் போதிக்கப்படுகிறது.

மாயாபுரியின் வணிகர்கள் நமக்கு அவர்களின் ஊழியத்தால் சம்பாதித்த வீண்பெருமைகளை விற்கமுயல்வார்கள். கர்த்தர் அவர்களின் கைகளின் மூலமாக செய்த காரியங்களை வீண்பெருமைகளாக நமக்கு அறிவிப்பார்கள். அந்த வீண்பெருமைகளை (அவர்களின் பெயர்களை மிகைப்படுத்தி) சாட்சியாக அறிவிக்க நம்மை ஏவுவார்கள். அதாவது அவர்களது ஊழியங்களை நம் மூலம் மார்க்கெட்டிங் செய்ய விரும்புவார்கள். நாம் அவர்களை குறித்தோ அவர்களின் ஊழியப் பெருமைகளை குறித்தோ மேன்மை பாராட்டக்கூடாது. நாம் அப்படி மேன்மை பாராட்டினால் தற்பெருமைகளால் அவர்கள் விழுந்துவிட நேரிடும்.

நமது சாட்சியானது உண்மையுள்ளதாக (Truthful testimony) இருக்கவேண்டும். மனிதர்களைப் புகழ்ந்து முகஸ்துதி செய்யவே கூடாது. நமது சாட்சி கூட்டியோ குறைத்தோ இருக்கக்கூடாது.

"நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்". (காலத்தியர் 6:14). "......மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக...." ( I கொரிந்தியர் 1:30). "..... ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக " (I கொரிந்தியர் 3 :21).

பண ஆசையை கண்டித்து ஒரு புகழ் பெற்ற சுவிசேடகர் (celebrity evangelist) பண ஆசை எப்படி வருகிறது என்று வேதவசனங்களை சில சம்பவங்களோடு ஒப்பிட்டு பிரசிங்கித்தார். இவர் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து "தேவனுக்கு" ஒரு வீடு கட்டினார். இந்த பணம் கொடுத்தது தேவ மக்களே! இதுபோல அடுக்கு கட்டிடம் அல்லது கோபுரம் கட்டுவதை பார்க்கும் ஒரு ஏழை ஊழியருக்கு பணம் சேர்த்து தானும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வராதா! இந்த கோடிக்கணக்கான பணத்தில் கட்டிய "தேவனுடைய வீடு" ஒரு ஏழை ஊழியனுக்கு இடையூறாக இருக்கிறது. இதை காணும்போது அவரது உள்ளத்தில் எப்படியாவது பணம் சேகரிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதா? பணம் வைத்து எப்படியாவது தனது சபைக்கு ஒரு கட்டிடம் கடன் வாங்கியோ நற்கொடையாகவோ பெறவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதா? சிந்திக்க வேண்டும்.

இன்று தமிழ் நாட்டில் அநேக ஊழியர்களுக்கு பெரும் கூட்டம் அல்லது செமினார் நடத்துவதற்கு கட்டிடங்கள் கட்ட கோடி கோடியாய் பணம் தேவைப்படுகிறது. இந்த கட்டிடங்கள் எல்லாம் மாயாபுரியை சேர்ந்தது தான். இந்த ஊழியர்களது விற்பனை பொருட்கள் (செய்திகள், பத்திரிகைகள், சீடிக்கள்) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விற்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களோ அல்லது நமது கிறிஸ்தவ உலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களான ஜான் வெஸ்லி, வில்லியம் கேரி, போன்றவர்கள் பிரமாண்டமான கட்டிடங்களைக் கட்டி ஊழியம் செய்யவில்லை. நமது நாட்டிற்கு வந்து ஊழியம் செய்த மிஷனரிகள் பெரிய கோபுரங்கலுள்ள ஆலயங்களை நமக்கு கட்டிக்கொடுத்தார்கள். ஆனால் அதேபோல நாமும் இன்று கட்டவேண்டுமென்றால் அநேக கோடிகள் பணம் அவசியம். இதேபோல நமக்கு பணம் இருக்குமானால் ஆலயங்கள் இல்லாத இடங்களில் ஆலயங்கள் கட்டிக்கொடுப்போம். கிராமங்களிலும், பட்டணத்தில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஏழை கிறிஸ்தவர்களுக்கு ஆலயங்கள் கட்டிக்கொடுப்போம். சுவிசேட ஊழியங்களுக்கு அலுவலகம் அமைக்க அவசியமானால் சிறய கட்டிடங்கள் கட்டலாம் அல்லவா! தேவ மக்கள் நமக்கு கொடுத்த காணிக்கைகளை கவனமாக செலவழிக்கவேண்டும்.

நமது மத்தியில் கட்டிடங்கள் தங்கள் பெயர்களில் இருந்தாலும், பண விஷயத்தில் உண்மையாக இருந்து ஊழியம் செய்யும் சில உத்தம போதகர்களும் உண்மையான சுவிசேடர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். எல்லா கட்டிடம் வைத்து ஊழியம் செய்யும் ஊழியர்களையோ, எல்லா வசதிகளோடும் வாழும் ஊழியர்களையோ கள்ள ஊழியர்கள் என்று நான் குறிப்பிடவில்லை.

"The cross is going to judge everything in your life-- your eating, your drinking, your sleeping, your spending, your talking. Everything is cross examined!" Leonard Ravenhill

லியோனார்ட் ராவன்ஹில் என்ற எழுப்புதலின் ஊழியர் இவ்விதமாக எழுதினார். "சிலுவையானது உங்களது ஜீவியத்தில் நடக்கும் எல்லா காரியங்களையும் நியாயம் தீர்க்கும். உங்களின் உணவையும் குடிப்பையும், உங்களது நித்திரையும், உங்கள் பேச்சையும் சிலுவை நியாயம் தீர்க்கும்". ஒரு மனிதன் அல்ல. நாம் என்னத்தை உண்ணுகிறோம், என்னத்தை கட்டுகிறோம், என்னத்தை போதிக்கிறோம், எங்கே தங்குகிறோம், எதில் பிரயாணம் செய்கிறோம், எவ்விதம் பணத்தை செலவழிக்கிறோம், எவ்விதம் கொடுக்கிறோம் என்பவைகளை கிறிஸ்துவின் சிலுவை தான் நம்மை நியாயம் தீர்க்கும். 

இந்த மாயாபுரியில் தேவனின் நாமத்தில் அநேக ஊழியங்கள் நடைபெறுகிறது. இங்கே நடக்கிறது எல்லாம் ஒரு மேடையில் காட்டப்படும் ஷோக்களாகவே அமைந்திருக்கிறது. இங்கே ஒரு மேடை இருக்கிறது. அந்த மேடையை சுற்றி ஜனங்கள் உட்காருவார்கள். சில மேடைக்காரர்கள் அதை தீர்க்கதரிசன அரங்கு (Prophetic seminar) என்று அழைப்பார்கள். இந்த மேடைகளுக்கு நேராக தேவ ஜனங்கள் கவரப்பட்டு இழுக்கப்படுவர். இந்த மேடைகளிலிருந்து போதனை செய்யும் மனிதர்களின் வேத அறிவும் அவர்களின் ஞானமும் வெளிப்படும். அவைகளை கேட்டு நாம் அசந்துபோய்விடுவோம். ஏதேன் தோட்டதிலிலிருந்த கேருபாக அபிஷேகம் பண்ணப்பட்ட லூசிபரிடம் எல்லா வேத ஞானங்கள் இருந்தாலும் பெருமை ஆட்கொண்டு சாத்தனாக மாறிவிட்டதை ஒருபோதும் மறந்து போகவேண்டாம்.

இந்த தீர்க்கதரிசன அரங்கம் ஒரு வழி ஊடகம் (one way media) தான். நீங்கள் ஒரு வழியாக உங்கள் காதுகளில் செய்திகளை பெறுவீர்களோ தவிற உங்களிடமிருந்து ஒரு செய்தியோ, எச்சரிப்போ, மேடைகளிலிருப்பவர்களிடத்தில் போகாது. உங்களுக்குள் பரிசுத்தாவினவர் இருப்பார் என்றால் நீங்கள் இந்த உயர்ந்த மேடைகளிலிருந்து வரும் செய்திகளைப் பகுத்தறிந்து வேதத்திற்கு புறம்பாக இருந்தால் கேள்விகள் கேட்கலாம் அல்லவா! ஆனால் இது நடப்பதற்கு ஒரு வழியும் இல்லை. எல்லாம் ஒரு மேடையிலிருந்து தான் கீழே வரும். மேடையிலிருந்து பேசுபவர்க்கு தான் எல்லாமே தேவன் வெளிப்படுத்துவார் என்று ஒரு எண்ணம் நிலவுகிறது. ஒரு சிறிய ஒரு செமினாராகவோ, குழுவாகவோ இருந்தால் அந்த ஊழியரோடு முகம் முகம் தொடர்பு கொண்டு பேசலாம் அல்லவா!

உண்மையான ஒரு தீர்க்கதரிசன அரங்கு நடக்கவேண்டுமானால் அது ஒரு நேர் முகம் முகம் தொடர்பு கொள்ளும் ஒரு கல்விக் கூடமாக (Interactive session) இருக்கவேண்டும். அதில் எல்லோரும் பங்குகொள்ளவேண்டும்.

இப்படி நடக்கும் மேடை கூட்டங்கள் மாயாபுரியின் சந்தையில்தான் நடைபெறும்.

இந்த செமினாரில் செலவுக்கான ஒரு பீஸ் வசூலிக்கப்படும். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அருமையான ஊழியர் டெல்லி பட்டணத்தில் ஒரு அரங்கை நடத்த தேவன் வழி நடத்தப்படுவதாகவும், தியதிகளையும் குறிப்பிட்டு ஆரம்பித்தார். பின்பு போதிய ஆட்கள் வராததால், அதை ரத்து செய்தார். தேவன் வழி நடத்தப்படுவதாகவும், தியதிகளை முன்குறித்து விட்டபின்பு பெரிய கூட்டம் வரவில்லை என்று ரத்து செய்தாராம்! ஏன் ஒரு சிறிய குழுவிற்கு கூட்டம் நடத்தக்கூடாது?

எப்போது பெருமைக்கு இடம் கொடுத்து 'எனக்குத்தான் எல்லா ஞானமும், வெளிப்படுத்தலும்' இருக்கிறது' என்று நினைத்து மோசம் போனார்களோ, அன்றே லூசிபரின் ஆவி அவர்களை வஞ்சித்து விட்டது. எப்போது புகழ் வந்து இவர்களை அழகுபடுத்தியதோ, அன்றே அவர்கள் விழுந்துவிட்டார்கள். எப்போது ஒரு பெரிய கூட்டமாக வந்து மக்கள் அந்த ஊழியக்காரர்களை மகிமை படுத்தினார்களோ, அன்றே அவர்கள் விழுவதற்கு இடம் கொடுத்து விட்டனர்.

இவர்கள், தங்களின் தலைவரான இயேசு கிறிஸ்து எப்படி வனாந்தரத்தில் போய் தன்னை ஒளித்துக்கொண்டாரோ, அதேபோல் தங்களை வனாந்தரத்தில் ஒளித்துக் கொள்ள தவறிவிட்டார்கள். பணம் குவிய, உல்லாசமான வாகனங்களும் அடுக்கடுக்கான கட்டிடங்களையும் கட்ட, தங்களை சிலுவை பாதையிலிருந்து விலக்கி விட்டு, மாயாபுரியின் சந்தைக்குள் நுழைந்து, தங்களது மேடைகளை அங்கே வைத்து, மோட்சப் பயணிகளை தங்களுக்கு நேராக இழுத்து, மோட்சப் பாதையிலிருந்து வழி விலக செய்துவிடுகிறார்கள்.

இந்த மாயாபுரியின் சந்தையில் தேவ மக்களை கவர்ந்து இழுக்கும் நடனத்துடன் நடக்கும் ஆராதனை கூடாரங்களும் இருக்கிறது. ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய பெந்தேகோஸ்தே சபையில் பிசெல்லேரி பாட்டில்களை தித்திக்கும் தண்ணீராக மாற்றி, யேசுகிறிஸ்து கானான் ஊரின் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாகவும் பணப்பைகளில் பணம் வரும்படியாக மந்திர ஜாலங்களை உண்டுபண்ணும், அற்புதங்கள் நடத்தி, இயேசு இந்தவிதமான அற்புதங்கள் செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த போதகர் ஆண்டவரை நேசிப்பவர்தான். ஆனால் இந்த மாதிரியான ஒரு ஆவியை கிரியை செய்ய அனுமதித்துவிட்டார். இந்த சம்பவத்தை குறித்து தீர்க்கதரிசன குரல் எழும்பி அவருக்கு எச்சரிக்கை கொடுத்தது. நாம் கொஞ்சம் தவறினால் வலுசர்ப்பமாகிய சாத்தான் நம்மை ஏமாற்றிவிடுவான்.

கள்ள போதகர்களின் செயல்களை வெளிப்படுத்தி உண்மையை சொல்லும் தேவ ஊழியர்களுக்கு உபத்திரவம் உண்டாகும். உண்மையை சொல்பவர்கள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு "தேவ ஊழியர்களை நியாயம் தீர்க்கும் இவர்கள் (இந்த தீர்க்கதரிசன ஊழியர்கள்) சாத்தானின் பிள்ளைகள்" என்று அறிவிக்கப்படும். இவர்களை எந்த சபைகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அறிவிக்கப்படும்.

இப்போது, எசேக்கியேல் 13 அதிகாரம், வசனங்கள் 2-16, தியானிக்கவும்.

"இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்".

(4-6).

நமது மத்தியிலிலுள்ள இந்த கள்ள தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். இவர்கள் நமக்காக ஜெபிப்பது இல்லை. இவர்கள் தங்களுக்கு உதவி செய்யும்படி ஏற்படுத்திய ஊழியர்கள் (Subordinate employees) மூலம்தான் நமக்கு திறப்புகளில் நிற்பார்கள். இவர்கள் நமது வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. நமக்கு இவர்கள் மூலம் எந்த பாதுகாப்பும் இல்லை. நமது பணம் தான் அவர்களின் குறி. ஆனால், இவர்கள் கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் (வரும் காலத்தை குறித்து ஜோதிடம்) அறிவித்து, அந்தி கிறிஸ்துவை (another Christ) தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

இவர்களை அடையாளம் கண்டு பிடித்து கொண்டு, விலகி ஓடி மோட்சப் பயணத்திலுள்ள கிறிஸ்தியானைப்போல தப்பி ஓடவும். அவர்களின் கூட்டங்களில் அல்லது தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால் உட்காரமல் உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும். இவர்களின் கள்ள வெளிப்படுத்தல்கள் உங்கள் முதுகில் ஒரு சுமையை உண்டு பண்ணும். இந்த சுமையை போக்க கல்வாரி அண்டைதான் நீங்கள் ஓடவேண்டும். கைகளில் வேதத்தை எடுத்து தியானம் செய்து மோட்சப்பாதையை நோக்கி ஓடவும்.

"கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் உங்களை பெருகபெண்னுவார் நீங்கள் செழித்திருப்பீர்கள்" என்று கூறி பாவத்தைக் குறித்தோ அல்லது நியாயத்தீர்ப்பைக் குறித்தோ தேவ மக்களுக்குப் பிரசங்கம் பண்ணாமல், கள்ளதரிசனங்கள் காண்கிற இஸ்ரவேலின் (நமது சபைகளிலுள்ள கள்ள தீர்க்கதரிசிகள்) இல்லாமற்போவார்கள். ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்துக் கொடுக்கிறார்கள். தேவனுடைய ஆசிர்வதிப்பின் ஆசீர்வாத வசனங்களை மாத்திரம் கொடுத்து, பாவத்தை குறித்தோ எச்சரிக்காமல், வெறும் தழுவணைகளை (நமது விசேஷித்த சரீர ஆசிர்வாதங்களுக்கான கூட்டங்கள்) கொடுப்பவர்கள். இவர்கள் மோட்சப்பயணத்திலுள்ள சுவிசேகனை போல அல்ல. மாயாபுரியின் சந்தையை நோக்கி வழிநடத்துபவர்கள். இவர்கள் நமக்கு அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைகளுக்குப் பொருந்தும்படி தலையணைகளை உண்டுபண்ணி நம்மை மாயாபுரியின் எல்லைகளின் உள்ளே நம்மை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மாயாபுரியின் சந்தையில் அவர்களுது விற்பனை பொருட்களை நம்மை பணம் கொடுத்து வாங்க விரும்புகிறார்கள். மோட்சப்பயணத்திலுள்ள கிறிஸ்தியனைப் போல, நாம் இவர்களின் வலைகளில் விழாமல் தப்பி ஓடவேண்டும்.

"சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள், ஒருவன் மண்சுவரை வைக்கிறான், இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி "அது இடிந்துவிழுமென்று சொல், வெள்ளமாகப் பெருகுகிற மழைபெய்யும், மகா கல்மழையே, நீ சொரிவாய், கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும். இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?"

ஒரு சுவிசேடகன் தனது அற்புதம் தெய்வீக கூட்டத்தின் மூலமாக சில ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டை வழி நடத்துகிறான். ஆனால் இந்த ஆத்துமாக்களை மனம்திரும்புதலுக்கு ஏதுவாக வழி நடத்தாமல், கிறிஸ்துவே ஒரே வழி என்று அறிவிக்காமல், வெறும் சரீர நன்மைகளுக்கு மாத்திரம் வழி நடத்தினால், அந்த சுவிசேடகன் வெறும் மண் சுவரைத்தான் காட்டுகிறான். இந்த ஆத்துமாக்கள் மனம்திரும்பி பாவத்திலிருந்து இரட்சிக்கப்படாமல் தாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தப்பான மனநிலையில் ஒரு சபையில் சேரக்கூடும். இந்த சபையின் போதகரோ இந்த ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டார்கள் என கருதி அவர்களை "பரிசுத்தாவியின் அபிஷேகம்" என்ற ஆவிக்குரிய அனுபவத்திற்கு கடந்துவரும்படி செய்து அந்த ஆத்துமாக்களை ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் வழி நடத்தினால், அந்த சபை போதகர் சாரமில்லாத சாந்தை அந்த மண் சுவருக்கு பூசுகிறான் என்று அர்த்தமாகும். ஒரு மனிதனுக்கு உண்மையான இரட்சிப்பின் அனுபவம் இருக்குமானால், அவன் தனது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு புதிய வாழ்க்கையை எல்லாரும் காணும்படியாக வாழவேண்டும். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17).

ஆலயத்தில் வந்து ஆராதித்து, வெறும் பக்தி வாழ்க்கை நடத்தினால் போதாது. இன்று அநேகர் வெறும் சன்மார்க்க ஜீவன் வாழ்ந்துகொண்டு ஆலயத்தில் ஒழுங்காக ஆராதனையில் கலந்துகொண்டு தாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தப்பான மனப்பாவனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு விதமான ஊழியர்களும் கட்டுவது ஒரு இடிந்து விழும் கட்டிடம்தான். இவர்கள் கட்டுவது, மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய இயேசு கிறிஸ்துவிடம் சேர்ந்தவர்களாகி, அவர் மேலே கட்டப்படும் "ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகை" அல்ல (I பேதுரு 2 :4-5). இன்று இதைப்போல மண்சுவரின் கட்டப்பட்டு சாந்தம் பூசப்பட்ட கட்டிடங்களாக விளங்குகிறது.

இன்று நம் மத்தியில் சமாதானம் இல்லாதிருந்தும், சமாதானமென்று சொல்லி, தேவ ஜனத்தை மோசம்போக்குகிற, ஊழியர்கள் அனேகர் உண்டு. இவர்கள் மோட்சப் பயணத்தில் காணும் கிறிஸ்தியானை மாய சந்தையில் வழி நடத்தி மோட்சப் பாதையிலிருந்து திசை திருப்பும் கள்ள ஊழியர்கள்! இவர்களில் ஒருவன் மண்சுவரை வைக்கிறான். இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். ஒரு ஊழியன் ஒரு மண் சுவரை போல ஊழியம் செய்தால் அவனோடு சேர்ந்து அந்த மண் சுவரின்மேல் சாரமில்லாத சாந்தை வேறு ஊழியன் ஒரு பூசுகிறான். இந்த இரண்டுவிதமான ஊழியர்களும் தேவ ராஜ்யத்தை அவரின் சித்தத்தின்படி கட்டாமல் தங்களது சுய சித்தத்தால் கட்டுகிறார்கள்.

இந்த இரண்டுவிதமான ஊழியர்களும் மோட்சப் பயணத்திலுள்ள சுவிசேக்ஷகனைப்போன்ற ஊழியர்கள் அல்ல! இவர்கள் வெறும் மண்சுவரை கட்டி இவர்கள் சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்கள். "அது இடிந்துவிழுமென்று சொல், வெள்ளமாகப் பெருகுகிற மழைபெய்யும், மகா கல்மழையே, நீ சொரிவாய், கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்". இந்த இடிந்து விழும் மண் சுவரை நம்பி ஏமாற்றம் அடையவேண்டாம். இந்த மாய சந்தையிலிருந்து தப்பி ஓடி, இந்த மண் சுவரை இடித்து பொடியாக்கி கையிலுள்ள தேவ புத்தகத்தை தியானம் செய்து, இந்த அழிந்து போகும் பட்டணத்தை (City of Destruction) கடந்து போகவும்.

"நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும், அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை, இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை, அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்".

கர்த்தர் உரைத்தார் என்று உரைக்கும் தங்களை தீர்க்கதரிசிகள் என்று அறிவித்து தங்களை பிரபலபடுத்தும் யெசபேல் போன்ற கள்ள ஊழியர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். பொய்க்குறியைத் தீர்க்கதரிசினம் என்று கூறி தேவ நாமத்தை வீணில் வழங்கும் இவர்களை அடையாளம் கண்டு பிடித்து அப்பாவி விசுவாசிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும். இவர்கள் நமது சங்கத்தில் இருப்பவர்கள் அல்ல. நமது அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை. தேவ ராஜியத்தில் பிரவேசிப்பதுமில்லை. இவர்களிடமிருந்து தப்பி செல்ல வேண்டும். 

Next....உண்மையானவின் ரத்த சாட்சி