அணிந்துரை

தனது புத்தகத்துக்கு அணிந்துரை எழுதுமாறு எனது 35 கால குடும்ப நண்பரான சகோ.ஜோப் அன்பழகனிடமிருந்து வேண்டுகோள் வந்தபோது அது எனக்கு உண்மையாகவே ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.நாம் அனைவருமே மோட்சப் பயணிகள்தான். இந்தப் பிரச்சனைகள் நிறைந்த வனாந்திர உலகில் நாம் செய்யும் பயணம் கடினமானதும், ஆபத்துகள் நிறைந்ததுமாக இருக்கிறது. மோட்சப்பயணம் எனும் இந்தப் பொக்கிஷ புத்தகம் எனக்கு சிறுவதியல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. என் அம்மா இந்தப் புத்தகத்திலிருந்து கதைகள் சொல்லி என்னைத் தூங்க வைப்பது வழக்கம். இளைஞனான பின்பு இந்த நூலை நவீன ஆங்கிலத்தில் படிக்கவும், படக்கதைகள் வடிவில் படிக்கவும், திரைப்படமாகப் பார்க்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது இதே நூலை சகோ.ஜோப் அன்பழகன் அவர்களின் முயற்சியால் தமிழிலும் வாசிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் நூற்றாண்டில் சபையை உபசரித்த காயுவைப் போல அவர் எங்களைப் போன்ற தமிழகத்திலிருந்து வட இந்தியாவுக்கு வரும் இறைப்பணியாளர்களை ஆதரித்து உபசரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்.மோட்சப்பயணம் நூலின் ஆசிரியரான ஜான் பன்யன்( 1628-1688) ஒரு பாப்திஸ்து போதகராவார். அக்காலத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய கிறிஸ்தவ நிறுவனமாகக் கருதப்பட்ட சர்ச் ஆஃப் இங்கிலாந்து திருச்சபை அவரை ஒரு பிரசங்கியாராக அங்கீகரிக்கவில்லை. கிறிஸ்துவைப் பிரசங்கித்ததற்காக அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவரது குழந்தைப் பருவம் சோகமயமானது. அன்பு மனைவியை தனது முப்பது வயதில் இழந்தார், அவரது மகளோ ஒரு பார்வையிழந்த பெண். இந்த சூழலிலும் ஆண்டவருக்காக நாற்பது புத்தகங்கள் எழுதியவர்தான் ஜான் பன்யன். இந்த மோட்சப் பயணம் நூல் பனிரெண்டு ஆண்டுகாலம் நீடித்த அவரது முதல் சிறைவாசத்தின் போது எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர் இந்நூலின் இரண்டாவது பகுதி 1678 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்து அதிகமாக விற்பனையான புத்தகமும், 200-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயற்பு செய்யப்பட்ட புத்தகமும் இதுதான்!

உருவகங்களால் பின்னப்பட்ட அழகான கதைதான் இந்த மோட்சப் பயணம். இக்கதையில் வரும் பாத்திரங்கள், இடங்கள் மற்றும் பொருட்களுக்கு இடப்பட்ட பெயர்கள் நிகழ்கால சூழலை உணர்த்தும் அர்த்தமுடையவையாக இருக்கின்றன. ஜான் பன்யன் பரலோக சத்தியத்தை பூமியின் மொழியில் பகிர்ந்திருக்கிறார். நூலின் அனைத்து கருத்துக்களும் முழுக்க முழுக்க வேதாகமத்திலிருந்து மாத்திரமே எடுக்கப்பட்டு கையாளப்பட்டிருக்கிறது. கதையின் மையக்கரு அழியும் நகரமொன்றில் இருந்து அழியாத நகருக்கு யாத்த்திரையாக சென்று சேர்வது ஆகும். ஒரு கதை வெற்றியடைய வேண்டுமெனில் மூன்று முக்கியமான அங்கங்கள் சிறப்பாக அமைய வேண்டும். அவை: கதையமைப்பு, பாத்திரப்படைப்பு மற்றும் Plot போன்றவை ஆகும். பெரும்பாலான எழுத்தாளர்கள் இம்மூன்றில் ஏதேனும் இரண்டிலோ அல்லது ஒன்றிலோதான் தேர்ச்சி பெற்றிருப்பர். ஜான் பன்யனோ இம்மூன்றையும் சிறப்பாக அமைத்ததே இக்கதை இன்றுவரை பேசப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

பதினேழாம் நூற்றாண்டின் ஆங்கில மொழிநடை வாசிக்க சற்று கடினமானதாக இருந்தாலும் இது அனைத்து கிறிஸ்தவர்களாலும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய ஒரு அரிய நூலாகும். இது பல்வேறு காலகட்டங்களில் பல எழுத்தாளர்களாலும் அக்கால வாசகருக்கு புரியும் விதத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மொழிபெயற்பு மற்றும் மொழி நடையை எளிமைப்படுத்துவது போன்றவற்றையும் தாண்டி இந்நூல் பகிரும் உண்மைகள் சமகால சமூக சூழலுக்கு ஏற்ற விதத்தில் விளக்கப்படவும் வேண்டும். இங்குதான் சகோ.ஜோப் அன்பழகன், இந்நூலின் வெளிச்சத்தில் இக்கால தமிழகம் மற்றும் தமிழ் சபைகளின் நிலையை தமிழ் விசுவாசிகளுக்கு புரியும் விதத்தில் அழகாக எடுத்திக் காட்டியிருக்கிறார்.

அவரது அழகான, ஆழமான தெளிந்த விளக்கங்கள் வழியாக தமிழ் சபைகள் மீண்டும் வேதாகமத்துக்கு திரும்ப வேண்டும் என்ற தனக்குள் கனன்று எரியும் வாஞ்சையை வெளிப்படுத்தியுள்ளார். மோட்சப் பயணம் என்பது வேதாகம அடிப்படையில் ஒரு கிறிஸ்தவனுக்கு தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வு, கிறிஸ்தவ குடும்ப வாழ்வு, கிறிஸ்தவ சமூக வாழ்வு மற்றும் கிறிஸ்தவ திருச்சபை வாழ்வு ஆகியவற்றைக் குறித்த தெளிவைக் கொடுக்கும் நூலாகும்.

இது தனிப்பட்ட வாழ்வில் காத்திருக்கும் சவால்கள், சோதனைகள், இடர்பாடுகள் மற்றும் அழிவு நிறைந்த பாதைகளைக் குறித்த எச்சரிப்பை வழங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் அடிப்படை வேதாகம உண்மைகளை இக்கால சூழலுக்கு ஏற்றவாறு கற்றுத்தந்து ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியையும் தனிப்பட்ட விதத்தில் எச்சரிக்கிறார்.

மோட்சப் பயணம் வேதாகமத்தை திரிப்பவர்களையும், வேறொரு சுவிசேஷத்தை அறிவிப்பவர்களையும், சத்தியத்துக்கு முரண்பாடான விளக்கமளிப்பவர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. மந்தையை மேய்க்காமல், மந்தையை சுரண்டிக் கொழுக்கும் சுயநலமிக்க போலி மேய்ப்பர்களை ஆசிரியர் கடுமையாக எச்சரிக்கிறார். இவர்கள் மந்தையையும் அதனால் கிடைக்கும் ஆதாயத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக வேற்றுமையான உபதேசங்களைப் போதித்து விசுவாசிகளை தங்கள் நோக்கத்திலிருந்த வழுவச் செய்து, அவர்களது பயணத்தை திசைமாற்றி விடுகிறார்கள். இந்நூலின் ஆசிரியர் தனது தெளிவான விளக்கங்கள் மூலம் ஆலோசனைகளையும், எச்சரிப்புகளையும், திருத்தங்களையும், ஆறுதலையும் வாசிக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும், புது விசுவாசிகளுக்கும் முதிர்ந்த விசுவாசிகளுக்கும், போதகர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்குகிறார்.

உள்ளூர் திருச்சபையின் நோக்கம், ஆற்றவேண்டிய கடமைகள், தனிநபருக்கான ஊழியம், வளரும் விசுவாசிகளுக்கு ஊழியத்தின் பல்வேறுபட்ட தளங்களில் காத்திருக்கும் கடமைகள் ஆகியவற்றை நோக்கி இந்நூல் நமது கவனத்தை திருப்புகிறது. தனது ஆடுகளை வளரவும், முதிரவும் தேவநோக்கத்தை அடையவும் விடாமல் தன் தொழுவத்தினுள்ளேயே கட்டிவைத்து அடிமைப்படுத்தும் மேய்ப்பர்களை இந்நூலின் ஆசிரியர் கடுமையாக சாடுகிறார்.

ஜான் பன்யனின் சிந்தனை மற்றும் கோட்பாடுகள் எனும் பாதுகாப்பான குடையின் கீழ் இருந்து சகோ.ஜோப் அன்பழகன் வேத அடிப்படையை விட்டு விலகாத விளக்கங்களை இந்நூலுக்கு அளித்திருக்கிறார்.

by Rev Dr J.N. Manokaran

Chennai

Mobile 9444027221

Back to Home Page