அலங்கார மாளிகை

Previous.....சுருளைக் காணோம்

அலங்கார மாளிகை

விசுவாசத்தோடு முன்னேறிச் சென்ற கிறிஸ்தியான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனையைக் கண்டான். இரவு அங்கே தங்கச் செல்லலாம் என்ற நம்பிக்கையோடு மாளிகையை அடைந்தான்.

அருகே செல்லச்செல்ல பாதை மிகவும் குறுகலாகியது! வாசலின் அருகே இரண்டு சிங்கங்கள் படுத்திருப்பதைக்கண்டு தயங்கினான்!கோழையும் அவநம்பிக்கையும் இந்தச் சிங்கங்களைக் கண்டுதான் பயந்து ஓடினார்கள்போலும்! என்று நினைத்தான் கிறிஸ்தியான்.கிறிஸ்தியான் தயங்கி நிற்பதைக் கண்டு விழித்திருப்போன் என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன், ஏன் கோழைபோல அங்கேயே நின்றுவிட்டாய்? சிங்கங்களைப்பற்றிப் பயப்படாதே! அவை சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன! உன்னுடைய விசுவாசத்தைச் சோதிக்கவே அவை இங்கே இருக்கின்றன. நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது என்று அவனை நோக்கிக் கூறினான்.நடுக்கத்துடனே கிறிஸ்தியான் மெதுவாக முன்னேறிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். சிங்கங்கள் கெர்ஜித்தன! ஆனால் கிறிஸ்தியானை ஒன்றுமே செய்யவில்லை!காவல்காரனிடம் சென்று கிறிஸ்தியான் ஜயா, நான் இன்றிரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டான்.

பயணிகள் பாதுகாப்பாகத் தங்குவதற்காகத்தான் இந்த மலையின் எஐமானர் இந்த மாளிகையைக் கட்டியுள்ளார். நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டான் காவல்காரன்.

அழிநகரத்திலிருந்து வருகிறேன். நித்திய நகரமான மோட்சத்தை நோக்கிச் செல்கிறேன் என்றான் கிறிஸ்தியான்.

உன் பெயர் என்ன? ஏன் இவ்வளவு இருட்டிய பிறகு வருகிறாய்? என்று கேட்டான் காவல்க்காரன்.

முன்பு என் பெயர் கிருபையற்றோன், ஜயா. இப்போதோ என் பெயர் கிறிஸ்தியான் என்று கூறி அவன் தான் இளைப்பாறும் தலத்தில் சுருளைத் தொலைத்து விட்டதுபற்றியும், அதைத் தேடி வருவதற்காக இவ்வளவு தாமதமாகிவிட்டது என்பதையும் எடுத்துரைத்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

விசுவாசத்தோடு முன்னேறிச் சென்ற கிறிஸ்தியான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனையைக் கண்டான். மலையுச்சியை அடைந்தபின்புதான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனை தென்படுகிறது. விழித்திருப்போன் என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன் அங்கே காணப்படுகிறான். இது ஒரு தேவ சபையை குறிக்கிறது; அதை நடத்தும் பாஸ்டரை, இங்கே ஒரு "விழித்திருப்போன்" என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன் என்று ஜான் பணியன் குறிப்பிடுகிறார்.

இன்று நாம் மலை உச்சியை அடைந்து தேவனின் சத்தத்தைக் கேட்டபின்புதான், நமக்கு சபைகளில் என்ன செய்யவேண்டும் என்றோ அல்லது எந்தவிதமான ஊழியங்கள் செய்யவேண்டுமென்றோ ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். தேவன் தான் நமக்கு எந்தவிதமான ஊழியத்தை செய்யவேண்டும் என்று தனது வார்த்தையின் மூலமாகவோ, அல்லது நேராகவோ, தனிப்பட்ட முறையிலோ வெளிப்படுத்துகிறார். நாம் மலையுச்சியில் அவரோடு இருக்கும்போதுதான் அவரது குரலை கேட்கிறோம்.

"ஏன் கோழைபோல அங்கேயே நின்றுவிட்டாய்? சிங்கங்களைப்பற்றிப் பயப்படாதே! அவைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன"! என்று அந்த காவல்காரன் கிறிஸ்தியானுக்குக் கூறுகிறார். இன்று சாத்தானை பற்றி பயம் காட்டி மக்களை தங்களிடம் இழுக்கும் அநேக பாஸ்டர்மார்கள் இருக்கிறார்கள்.

"நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது," என்று கிறிஸ்தியானை நோக்கிக் காவல்காரன் கூறினான்.

நமக்கு தனது வார்த்தையின் மூலமாக ஒரு பாதையை தேவன் வைத்திருக்கிறார். இந்த பாதையின் வழியாகத்தான் நாம் நடந்து வந்து அலங்கார மாளிகையின் உள்ளில் பிரவேசிக்கவேண்டும். ஒரு சபையில் சேருவதற்கு முன்னால் நாம் சிலுவை அண்டையில் வந்து பாவமன்னிப்பின் நிச்சயம் கிடைத்திருக்க வேண்டும்.

"நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது," என்று போதிக்கும் போதகர்கள் எங்கே? "நான் ஜெபித்தால் உனக்கு ஒரு தீங்கும் வராது. சபைக்கு ஒழுங்காக வந்தால் சாத்தான் உன்னை ஒன்றும் செய்யமாட்டான்", என்று போதிக்கும் போதகர்கள் நம் மத்தியில் உண்டு. இவர்கள் உண்மையாகவே காவல்காரர்கள் அல்ல.

இரட்சிப்பின் பாதை வழிதான் ஒரு ஆத்துமா சபைக்குள் பிரவேசிக்கவேண்டும். சபைக்குள் வந்தும் சுவிசேஷம் கேட்டு இரட்சிக்கப்படலாம். இரட்சிப்புதான் ஒரே வழி. சபை போதகர் இந்த இரட்சிப்பின் வழிதான் ஆத்துமாக்களை வழிநடத்தவேண்டும். வெறும் அற்புதத்தையோ சரீர சுகத்தையோ காண்பித்து வழிநடத்தியானாலும், பின்பு இரட்சிப்பின் பாதைக்குள் கொண்டுவர தாமதிக்கக்கூடாது.

ஒரு சபையில் ஒரு தீர்க்கதரிசன ஊழியம் பரிசுத்தாவியானவர் உங்களுக்குக் கொடுக்க மனதோடு இருக்கலாம். உங்களுக்கென்று ஒரு பாதையை கண்டிப்பாக வைத்து இருப்பார். மலையுட்சியில் அவரது அழைப்பைப் பெற்று இருப்பீர்களானால் உங்களுக்கு எந்த பாதை தெளிவாகத் தெரியும். சிங்கங்கள் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கின்றன.

காவல்காரனிடம் சென்று கிறிஸ்தியான், "ஜயா, நான் இன்றிரவு இங்கே தங்கலாமா?" என்று கேட்டான்.

ஒரு தேவ சபை ஒரு இரவு தங்கும் ஒரு அழகிய மாளிகை தான். இங்கே நாம் நிரந்தரமாக இருக்கும் ஒரு இடம் அல்ல. ஒரு இரவு என்றால் நமது வாழ்நாட்களில் ஒரு குறுகிய காலம் என்பதுதான். நமது வாழ்க்கையின் இருண்ட நாட்களுக்கு மத்தியில் இந்த மாளிகை ஒரு புகலிடமாக தோன்றுகிறது.

இன்று அநேக தேவ ஜனங்கள் தங்களின் சபைகளை நிரந்தரமாக வாசம் செய்யும் இடமென்று கருதி, தங்களின் சரீர ஆசிர்வாதங்களைப் பெறும் இடமாகக் கருதி தங்களுக்கு ஆண்டவர் கொடுக்க விரும்பும் விசேஷித்த ஊழியங்களின் அழைப்புக்களை இழந்துநிற்கிறார்கள். பாஸ்டர்தான் தங்களுக்கு தேவசத்தத்தைக் கேட்கச் செய்வார் என்று எண்ணி தங்களின் அருமையான அழைப்புக்களை கைவிட்டு நிற்கிறார்கள். அவர்கள் கேட்க விரும்புவது ஆறுதலான செய்திகள்தான்!

எத்தனையோ விதவிதமான, வினோதமான, ஊழியங்கள் இருக்கின்றன! அழிந்து போகும் மக்கள் நடுவில் அவர்களுக்கு சமூக சேவைகள் மூலம் பணி புரிந்து, இயேசுவின் அன்பை வெளிக்காட்டும் ஊழியங்கள் இருக்கிறது. வேதாகம் இன்னும் அநேக மொழிகளில் மொழியாக்கம் செய்யமால் ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமக்கு தேவ ஊழியம் சபைக்கு வெளியில்தான்.

Next.... அழகிய அரண்மனையின் கதவு திறப்பு