கிறிஸ்தியான் இளைப்பாறும் ஸ்தலம்

Previous....கடினமலையை அடைதல்

இளைப்பாறும் ஸ்தலம்

பாதி வழியில் பயணிகளுக்காக ஆண்டவர் அமைத்த இளைப்பாறும் ஸ்தலம் இருந்தது. கிறிஸ்தியான் களைப்போடு அங்கு சென்று அமர்ந்தான். சுருளை எடுத்துப் படிக்கத் துவங்கினான். அவன் கண்களைத் தூக்கம் தழுவியது. சுருள் கையிலிருந்த நழுவியதுகூடத் தெரியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டான்! அப்போது ஒருவர் வந்து, சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதன் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் (நீதி.6:6) என்று கூறி அவனை எழுப்பி விட்டார்!

திடுக்கிட்டு விழித்த கிறிஸ்தியான், மலையுச்சியை அடையும்வரை விரைந்து பயணம் செய்தான்! அங்கே இருவர் அவனை நோக்கி எதிர்த் திசையில் வருவதைக் கண்டு வியப்படைந்தான். கோழை, அவநம்பிக்கை என்ற அந்த இருவரையும் பார்த்து,

ஏன் ஜயா? என்ன ஆயிற்று? என்று கேட்டான்.

போகும் வழியில் சிங்கத்தைப் பார்த்தோம். இன்னும் போகப்போக அபாயம்தான் என்று எண்ணித் திரும்பிவிட்டோம் நடுங்கும் குரலில் கூறினார்கள் அந்த இருவரும்.

நீங்கள் எனக்கும் பயமூட்டிவிட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது? திருப்பிப் போவதென்றால் நிச்சயமாக மரணதண்டனைதான் கிடைக்கும். நேரே சென்றாலும் மரணத்துக்கேதுவான அபாயங்கள் என்று ஒரு கணம் தயங்கிய கிறிஸ்தியான்,

இல்லை...................இல்லை................. நான் நேராகத்தான் செல்வேன். பாதையின் முடிவில் எனக்கு நித்திய வாழ்வு கிடைக்குமே! என்று கூறியபடி உற்சாகத்தோடு முன்னே செல்லத் துவங்கினான். கோழையும் அவநம்பிக்கையும் மலையிலிருந்து கீழிறங்கி ஓடிவிட்டார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

பாதி வழியில் பயணிகளுக்காக ஆண்டவர் அமைத்த இளைப்பாறும் ஸ்தலம் இருக்கிறது. உங்கள் ஆத்தும நேசர் உங்களுக்கென்று இளைப்பாறுதல் தருகிறார். உங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் போய் அவர் உங்களுக்கு கொடுத்த இந்த உலக ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்குத்தான்! ஆனால் இங்கே நீங்கள் உறங்காமல் விழித்து கொண்டிருக்கவேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட சுருளை மறக்கக் கூடாது. உங்களை துன்புறுத்துவதற்கு அப்பொல்லியன் காத்து கொண்டிருப்பான். ஜெபமும் வேத வாசிப்பும் கண்டிப்பாக இருக்கவேண்டும். முடிந்தால் நீங்கள் தங்கியிருக்கும் பட்டணத்தில் ஏதாவது ஒரு சபைக்குப் போகலாம் அல்லவா!

ஆண்டவருக்கென்று அல்லும்பகலும் அயராமல் ஊழியம் செய்யும் உண்மையான ஊழியர்களும் தங்களின் சரிரங்களுக்கு நல்ல ஓய்வும் இளைப்பாறுதலும் கொடுக்கவேண்டும். கிறிஸ்துவும் படகில் அயர்ந்து தூங்கி ஓய்வு எடுத்தார். விடுமுறையில் (Vacation) குடும்பத்தோடு போகலாம்.

இன்று அநேக ஊழியர்கள் ஊழியத்திற்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருப்பார்கள். சரீர சுகத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு இரத்த அழுத்தம் (Blood Pressure), நீரழிவு (Diabetis) போன்ற வியாதிகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். இந்த மண்ணான சரீரத்திற்கு ஓய்வுகொடுக்க அவசியமில்லை, பரலோகத்தில் தான் ஓய்வு கிடைக்கும் என்ற தப்பான உபதேசத்தை நம்பி தங்களின் ஆயுசு நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். பல மணி நேரங்களில் பிரசங்கம் செய்து தான் ஊழியத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

கோழை, அவநம்பிக்கை என்ற இருவர் கிறிஸ்தியானின் மனத்தில் சிங்கங்களை பற்றி பயங்களை உருவாக்குகிறார்கள். "நீ ஆண்டவருக்கென்று ஊழியம் தனியாக செய்ய முடியாது. உனக்கு ஒரு சபையின் ஜெபத்தின் பாதுகாப்பு இருக்கவேண்டும். சபை போதகரின் வழி நடத்தப்பட்டுத்தான் ஊழியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சாத்தான் உன்னைத் தாக்குவான்", என்று பயத்தை உண்டாக்கும் கோழை அவநம்பிக்கை போன்ற சபை போதகர்கள் உண்டு. இவர்களுக்கு, நீங்கள் சபையிலிருந்து ஆத்துமாக்களைப் பறித்துத் கொண்டு வேறு ஒரு இடத்தில் ஊழியம் ஆரம்பித்து விடுவார்கள் என்ற ஒரு பயம். இந்த போதகர்களுக்கு, ஊழியம் என்றால் சபை நடத்துவது, தசம பாகம் வாங்குவது என்பதுதான். உங்களை ஊழியத்தில் பயிற்றுவிப்பது குறித்து இந்த போதகர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது.

Next.... சுருளைக் காணோம்