சந்தேகக் கோட்டையில் விழுந்தனர்

Previous...முடிவை விரும்புவன்" என்ற பயணியுடன்

சந்தேகக் கோட்டையில் விழுந்தனர்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் நடந்து செல்லும் வழியில் ஒரு அழகான ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள். அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் தெளிந்த நீரைப் பருகினார்கள். கரையிலிருந்து மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளியில் படுத்து உங்கினார்கள்.விழித்து எழுந்தவுடன் கற்கள் நிறைந்த பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால்கள் வலியெடுத்தது! கற்பாதையில் நடப்பது கடினமாக இருந்தது! அப்போது அவர்கள் செல்லவேண்டிய பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை என்ற பசும்புற்களால் நிறைந்த பாதையைக் கண்டார்கள். வெகுதூரம் வரை அந்த பாதை கற்ப்பாறைக்கு இணையாகவே செல்வதுபோலத் தென்பட்டது!புல்வெளிப் பாதையில் கால் வைத்து நடந்தார்கள். மெத்தைமீது நடப்பதுபோன்று கால்களுக்கு இதமாக இருந்தது! தாங்கள் செல்லவேண்டிய கற்பாதையைப் பற்றி நினைக்கவேயில்லை!

அந்தப் பாதையில் நடந்து செல்லும்போது அசட்டு நம்பிக்கை என்ற பெயருடைய ஒருவனைச் சந்தித்தார்கள்.

இந்தப்பாதை மோட்சத்துக்குத்தான் செல்கிறது. பயப்படாமல் என்பின்னே வாருங்கள் என்றான் அவன். பயணிகள் இருவரும் கவலை நீங்கப்பெற்றவர்களாக அவனைப் பின்தொடர்ந்தார்கள்!

இரவு வந்தது. இருளில் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை!

அப்போது கால்தவறி கிடுகிடு பாதளத்திற்குள் விழுந்துவிட்டான் அசட்டு நம்பிக்கை! அவனுடைய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்றுவிட்டார்கள் பின்னால் வந்த இருவரும்! அவனைக் குரல்கொடுத்துக் கூப்பிட்டு பார்த்தார்கள். ஆனால் பதிலே வரவில்லை! தீடிரென்று இடி, மின்னலோடு பெரிய மழை பெய்தது! புல்வெளிப் பாதையெங்கும் வெள்ளம் நிரம்பி விட்டது! தங்கள் தவறை உணர்ந்த கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப முயன்றார்கள். ஆனால் வழி தெரியவில்லை!

கற்றுக்கொள்ளும் பாடம்

கற்கள் நிறைந்த பாதை வழியேதான் நாம் நடந்து செல்ல வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் அதே சமயம், அருகில் புல்வெளிப் பாதை என்ற பசும்புற்களால் நிறைந்த பாதைகளும் நமக்கு ஆண்டவர் தருகிறார். இன்று உபத்திரவம் இருக்குமானால் நாளை இருக்காது. மெத்தை (space) மீது நடப்பதுபோன்று கால்களுக்கு இதமாக இருக்கும். ஆனால் "அசட்டு நம்பிக்கை" (Vain Confidence) என்ற ஊழியக்காரர்களை நம்பி மோசம் போகவேண்டாம்.

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் இருள் வரத்தான் செய்யும். இந்த இருளில் நமது ஆவிக்குரிய கண்கள் குருடாகிவிடும். ஆனால் அசட்டு நம்பிக்கை என்ற ஊழியர்களை நாடிச் செல்லக்கூடாது. அவன் விழும் பள்ளத்தில் நாமும் விழுந்துவிடுவோம். இந்த நிலத்தை உண்டுபண்ணியது இந்த நிலத்திற்க்கு சொந்தமான சாத்தனான இப்பிரபஞ்சத்தின் அதிபதி தான்.

இவர்கள் நம்மை அவர்களது சபை உபதேசங்களைப் பின்பற்றி வேத வசனத்தின் வெளிச்சத்திலிருந்து திசை திருப்பி குட்டையில் விழ செய்வார்கள். அசட்டு நம்பிக்கை தன் மேல் விசுவாசம் வைக்கும்படி உங்களுக்குப் போதிப்பான். "உங்களுக்கு போராட்டங்கள் இருக்கக்கூடாது. நான் ஜெபித்தால் உங்களது போராட்டங்கள் மாறிவிடும், என்னிடம் வாருங்கள், உங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமானால் என் கூட்டத்திற்கு வரவும்," என தியதிகளைக் குறிப்பிட்டு அறிவிக்கும் ஊழியர்கள் உண்டு.

"இந்தப்பாதை மோட்சத்துக்குத்தான் செல்கிறது. பயப்படாமல் என் பின்னே வாருங்கள்", என்றுதான் உங்களுக்குச் சொல்வார்கள். அவர்களின் பாதையில் அவர்களின் கூடாரங்கள் இருக்கிறது. அங்கே தங்கி இளைப்பாறும்படிச் சொல்வார்கள். உங்கள் கைகளில் வேதம் இருக்கமானால் உங்கள் இருதயத்தில் பரிசுத்தாவியானவர் இருப்பார் என்றால் அந்த கூடாரத்திற்குப் போக அவசியமில்லை.

"இரவு வந்தது. இருளில் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை!" உங்களது வாழ்க்கையில் வரும் இருளை இந்த கூடாரத்தில் போக்க முடியாது. நீங்கள் ஆண்டவரை நோக்கி ஜெபித்து உங்கள் சுருளை படித்தால் தான் இந்த இருள் நீங்கும்.

இன்று நாம் வஞ்சிக்கும் படியாக அநேக கூடாரங்கள் இருக்கிறது. நாம் இந்த கூடாரங்களுக்குள் பிரவேசித்தால், தேவன் மேலுள்ள நம்பிக்கை போக, சுயநம்பிக்கை என்னும் கப்பல் இவர்களின் மேல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும். நாம் எந்த துன்பம் வந்தாலும் இவர்களை நாடித்தான் ஓடிப்போவோம். நாம் இவர்களின் மேலுள்ள வரங்களின் மேலே நம்பிக்கை வைப்போம். ஆண்டவரின் மேலுள்ள விசுவாசத்தை இழந்துவிடுவோம். இந்த நிலையில் நாம் இருப்போமானால், மனம் திரும்பி பொறுமையோடு, நாம் மோட்சப்பயணத்தை நோக்கி, முன்னேறி செல்லவேண்டும். விசுவாச கிரீடத்தை காத்துக்கொள்ளவும்! "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்"(II தீமோத்தேயு 4 :7).

இப்போது மத்தேயு 6ம் அதிகாரத்தில் 32-34 வசனங்களை தியானிக்கவும்.

"இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்".

"இவைகளெல்லாம்" உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். ஆகவே முதலாவது நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். இந்த ஆசிர்வாதங்களுக்காக எங்கேயும் ஓடிப் போய் ஒரு கூட்டத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்களது நாளையத்தினத்தை குறித்து தேவன் தாமே கவலைப்படுகிறார்.

உங்களுக்கு சரீரப்பிரகமான எல்லா ஆசீர்வாதங்களையும் தேவன் உங்களுக்குத் தருகிறார். தர ஆவலாக இருக்கிறார். உங்களது ஜெபத்தைக் கேட்பதற்கு அவர் காதுகள் எப்போதும் திறந்திருக்கிறது.

இது சம்பந்தமாக, எசேக்கியேல் என்ன உரைக்கிறார் என்பதை அறிவோமாக!

"அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள், இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்க நேராகப் பிடிக்கிறார்கள்.

ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன், என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை, அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்".

(எசேக்கியேல் 8:17:18).

அருவருப்புகளான பாவங்களைச் செய்து, மனம் திரும்பாமல், சபை ஊழியர்களையோ, சுவிஷேகர்களையோ நாடிப் போனால், நாம் தேவனை கோபமூட்டுகிறோம்.

இன்று நாம் உபவாசம் எடுத்து, கண்ணீர் வடித்து ஜெபம் பண்ணியும், மற்ற ஊழியர்களின் மூலம் ஜெபம் பண்ணியும், ஆண்டவர் இரங்குவதில்லை, செவிகொடுப்பதில்லை. நாம் தெய்வீக சுகம் பெறமுடியவில்லை. நமது பிள்ளைகளுக்கு வேலைகள் கிடைக்கவில்லை. கல்யாண காரியங்கள் நடப்பதில்லை. காரணம் என்ன? நாம் நமது தேவனுடைய நாட்டில், அதாவது இயேசுவின் சபையான சரீரத்தில், கொடுமையினால் நிரப்புகிறோம். நமது ஏழை சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வது கிடையாது. சபைகளில் ஏழை விதவைகளிடமிருந்தும், ஏழை விசுவாசிகளிடமிருந்து நமது சபை போதகர்கள் தசம பாகங்களைப் பறிப்பது போன்றவைகள் தேவன் அருவருக்கும் காரியங்கள்! பணக்கார விசுவாசிகளைத் தேடி அவர்களின் வீடுபோய் ஜெபிப்பது தேவனுக்கு அருவருப்பான காரியங்கள்! நாம் நன்மை செய்வதை அறிந்தும் அதை தவிர்ப்பது புதிய ஏற்பாட்டின் அருவருக்கும் காரியங்கள்! இன்றைக்கு ஆட்டங்கள், கேளிக்கைகள் போன்ற அருவருப்பான காரியங்கள் அநேக சபைகளில் நடந்துவருகிறது. நமது சபைகளிலும், வீடுகளிலும் ஆதிகால சபைகளில் நடந்த அற்புதங்கள் நடக்காமல் இருப்பதிற்கு நாம் தான் காரியம்!

நாம் ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்த விதமான கூடாரங்களை வைத்திருப்பவர்களின் மேல் நம்பிக்கை வைத்து ஒரு சந்தேக கோட்டைக்குள் தள்ளப்படுகிறோம். "அருவருப்புகள் நிறைந்த அற்பமான காரியங்கள்" நடக்கும் கூடாரங்களில் தேவனுடைய நாமம் மகிமைப்படாது.

நம்மால் ஜெபிக்கக்கூடாத சந்தர்ப்பத்தில் நமக்காக ஜெபிக்கும்படி நமக்கு தெரிந்த தேவ பிள்ளைகளை ஜெபிக்க வேண்டிக்கொள்ளலாம். ஆனால், உங்களைப்பற்றி அறியாத ஒரு சுவிசேடகனுக்கோ, ஊழியக்காரனுக்கோ கடிதம் அல்லது மின்னஞ்சல் (email) எழுதி ஜெபிக்கச் சொன்னால், அந்த சுவிசேடகன் அல்லது ஊழியர் எப்படி பாரத்தோடு ஜெபிக்கக்கூடும்? ஜெபிக்க கடிதம் அல்லது மின்னஞ்சல் அனுப்பிய தேவ மக்களுக்கு அந்த ஊழியரின் அலுவலகத்திலிருந்து பதில் அனுப்பி அந்த ஊழியரின் பணத்தேவைகளை அறிவித்து, காணிக்கை, நன்கொடை வாங்குவது தேவனுக்கு "அருவருப்பான காரியம்". ஜெபம் என்பது ஒரு வர்த்தக தொழிலல்ல! கீழ்கண்ட வசனங்களை தியானிக்கவும்.

"ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்" (கலாத்தியர் 6:2).

" உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது"

(யாக்கோபு 5:14-16). இதுதான் ஜெபிக்கும் முறமைகள்!

சபையின் மூப்பர்கள் உங்களுக்காக எண்ணெய்பூசி ஜெபிக்கவேண்டும். பின்பு ஒருவருக்கொருவர் தங்கள் குற்றங்களை அறிக்கையிட்டு ஜெபம்பண்ணவேண்டும். தேவ மக்கள் அறிய வேண்டியது என்னவென்றால், உங்களைப் பற்றி தனிப்பட்டமுறையில் அறியாத ஊழியனிடமிருந்து ஜெப எண்ணெய் வாங்கவேண்டிய அவசியமில்லை. ஜெபத்திற்காக எந்த ஊழியரின் அலுவலுகத்தில் போய் ஜெபிக்கவேண்டிய அவசியமும் இல்லை.

நீங்கள் எந்த சபையில் அங்கத்தினராக இருந்தாலும், தேவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவரின் வேதத்தை தியானித்து, அவரின் வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுத்து, அவருக்கு கீழ்ப்படிந்து, அந்த சபையில் இருக்கலாம். இன்று எந்த சபையோ பூரணமானது அல்ல! நீங்கள் எந்த சபையில் இருக்கறீர்களோ அங்கே குறைகள் இருந்தாலும், அங்கேயுள்ள போதகருக்காகவும் மக்களுக்காகவும் ஜெபித்துக்கொண்டும், உங்களால் அவர்களுக்கு உதவிகள் செய்துக்கொண்டும் இருக்கலாம். முடிந்தவரை எல்லா சத்தியங்களையும் அறிந்துக்கொண்டு உங்களால் முடிந்தமட்டும், விவேகத்துடன், கள்ள உபதேசங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொண்டும், ஜெபித்துக்கொண்டும், அந்த சபையிலே இருக்கலாம்.

Next....நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனின் கையில்