சுருளைக் காணோம்

Previous......இளைப்பாறும் ஸ்தலம்

சுருளைக் காணோம்

நடந்து சென்ற கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் பையினுள் கையைவிட்டான்! திடுக்கிட்டு நின்றான்! சுருளைக் காணாது கலவரமடைந்தான்! தான் உறங்கும்போதுதான் அதைக் கீழே விட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். முழங்காற்படியிட்டு ஆண்டவரிடம் தனது கவனக் குறைவுக்காக மன்னிப்புக் கேட்டான்.கண்ணீர்விட்டபடியே சுருளைத் தேடி ஓடினான் கிறிஸ்தியான். ஆண்டவர் அந்த இளைப்பாறும் தலத்தைக் கட்டியிருந்தது சற்று அமர்ந்திருக்கத்தானே! ஆனால் கடமையை மறந்து உறங்கிவிட்டது என்னுடை தவறுதானே என்று எண்ணி வருந்தினான்.இளைப்பாறும் தலத்தை அடைந்தவுடன் சுற்றிலும் தேடினான். சுருளைக் கண்டவுடன் அதை எடுத்துப் பத்திரமாக பையினுள் வைத்துக்கொண்டான். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

வேகவேகமாக மீண்டும் மலைமீது ஏறினான் கிறிஸ்தியான். அனால் அவன் மலையுச்சியை அடைவதற்குள் இருட்டிவிட்டது! கோழையும், அவநம்பிக்கையும் சிங்கங்களைப் பற்றிக் கூறியிருந்தது அவன் நினைவில் எழுந்தது.

இந்த இருட்டு வேளையில் அந்தச் சிங்கங்கள் என் மீது பாய்ந்து என்னைக் கொன்றுபோடுமே! என்று பயந்தான் கிறிஸ்தியான். உடன்தானே தனது தவறை உணர்ந்தான் அவன். தனது அவநம்பிக்கைக்காக ஆண்டவரை நோக்கி மன்னிப்புக் கேட்டான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்று எண்ணினான். நமக்கு சுருளில்தான் ஆறுதலான வார்த்தைகள் இருக்கிறது. பெந்தேகோஸ்துவின் சபைகளில் நான் கவனித்து வந்தது என்னவென்றால், மக்கள் தீர்க்க தரிசன ஆறுதல் வசனங்கள் கேட்பதற்கு மாத்திரம் ஆவலாக சபை கூட்டங்களுக்கு வருகிறார்கள். தங்களுக்கு அழிக்கப்பட்ட சுருளை மறந்தவர்கள். தேவன் அவர்களுக்கு தனியாக கொடுக்கப்பட்ட சுருளுக்கு எந்தவிதமான மதிப்பும் கொடுக்காமல் மனிதர்களின் வாய்களின் வரும் தேவ வசனங்களை தேடி வருவது! இது போல மனிதர்களின் வாய்களின் வரும் "தேவ வசனங்களை" தேடி சுவிசேஷ கூட்டங்களை நோக்கி ஓடிப்போவது சகஜம். பின்பு, டெலிவிஷன் சேனல் முன்னால் அமர்ந்து "தேவ வசனங்களைக்" கேட்பது. சாத்தானுக்கு நல்ல பைபிள் ஞானம் நன்கு உண்டு. தேவ வசனங்கள் எங்கிருந்தும் வரலாம். ஆனால் தேவன் தன் வார்த்தைகள் மூலம் உங்களிடம் பேச விரும்புகிறார். ஆனாலோ, நீங்களோ சுருளை இழந்த நிலைமையில் இருக்கிறீர்கள். சபை போதகரையே முற்றிலும் நம்பி அவரை ஆண்டவர் தன் ராஜ்ஜியத்தில் அழைத்த பின்பு இந்த உலகமே இருண்டுவிட்டது போல எண்ணி அங்கலாய்க்கும் விசுவாசிகளை நான் கண்டிருக்கிறேன்.

கிறிஸ்தியான் உறங்கும்போதுதான் அதைக் கீழே விட்டிருக்கிறான். நீங்களும் உங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் உறங்கி சபை போதகரின் மேல் விசுவாசம் வைத்து தேவன் கொடுத்த சுருளை மறந்து விட்டீர்களே!

நீங்களும் மலையுச்சி அடையாமல் இருப்பதற்கு கரணம் இதுதான். கிறிஸ்தியான் மலையுச்சியை அடைவதற்குள் இருட்டிவிட்டது! கோழையும், அவநம்பிக்கையும் சிங்கங்களைப் பற்றிக் கூறியிருந்தது அவன் நினைவில் எழுந்தது.

உங்கள் வாழ்க்கையிலும் இதுபோலத்தான் நடக்கிறது. "சாத்தானும் அவன் சேனைகளும் நீங்கள் ஊழியம் செய்யப் போகும்போது உங்களை எதிர்த்து நிற்பான்", என்று பயம் காட்டும் கோழை, அவநம்பிக்கை போன்ற போதகர்மார்கள் உங்களை ஆவிக்குரிய மலைஉச்சத்தை அடையாமல் தங்களின் சபைகளின் நான்கு சுவர்களுக்கு உள்ளில் உங்களை அடைத்து வைத்து உங்கள் மூலமாக அவர்களின் ராஜ்யத்தை விரிவாக்குகிறார்கள். உங்களை விசுவாசிகள் என்று அழைத்து தங்களை மாத்திரம் லேவிய ஊழியக்காரர்களாகக் காண்பித்துக்கொள்கிறார்கள்.

இந்த காரியம் எல்லா திருச்சபைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலிக்கன் சபையாயிருக்கலாம். அல்லது பெந்தேகோஸ்தே திருச்சபையாயிருக்கலாம். நடப்பதெல்லாம் பழைய ஏற்பாட்டின் லேவிய ஊழியமே. மேடையில் நடக்கும் காட்சிகளே. மேடையில் அமர்ந்து இருப்பது லேவியர்களே. பிரசங்க மேடையிலிருந்து பேசுவதும் பழைய ஏற்பாட்டின் லேவியர்களே. புதிய ஏற்பாட்டின் புதிய ரசத்தை பழைய ஏற்பாட்டின் துருத்திகளில் ஊற்றி வைப்பதுதான். (New wine in old bottles). புதிய ஏற்பாட்டின் எழுப்புதல் பழைய ஏற்பாட்டின் சீனாய் மலையிலிருந்து ஒருக்காலும் வராது. கொல்கதா மலையிலிருந்துதான் புதிய ஏற்பாட்டின் எழுப்புதல் வரும்.

இன்று சபைமக்களை பரிசுத்தாவியானவர் நமக்கு வைத்திருக்கும் பலவிதமான ஊழியங்களைக் குறித்துப் போதித்து அந்த ஊழியங்களில் பயிற்சி அளித்து தேவனின் பணியில் நிறுத்தும் போதகர்கள் மிகவும் குறைவு. அவர்களுக்கு தெரிந்தது ஒரேயொரு ஊழியம் சபை மேய்ப்பனின் பணிமாத்திரமே. வேறு ஊழியங்களைக் குறித்த வேத அறிவு கிடையாது. தீர்க்கதரிசன ஊழியம் என்றால் என்னவென்றும், அப்போஸ்தலர்கள் எங்கே பணிபுரிய வேண்டும் என்கிற சாத்தியங்களைப் போதிப்பது கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த ஊழியம் என்பது சபை ஊழியம் மாத்திரம் தான். பிரசங்க மேடையில் நின்று மணிக்கணக்கில் பிரசங்கம் செய்து மக்களை உணர்ச்சி அடைய வைப்பதுதான்! ஊழியம் என்றால் வேதத்தைக் கைகளில் எடுத்து மேடையிலிருந்து போதித்தால் போதும் என்ற ஒரு தப்பான கொள்கையை பரப்பும் அநேக பாஸ்டர்மார்கள் (pastors) நம் மத்தியில் உண்டு. ஊழியம் (Ministry) என்றால் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யவேண்டும் என்று போதியாமல் பிரசங்கம் செய்வதுதான் ஊழியம் என்று தப்பாக போதிக்கும் போதகர்கள் நம்மிடையில் உண்டு.

இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது? என்பதைக்கூட அறியாதிருக்கிறார்கள்! புதிய ஏற்பாட்டை இவர்கள் கவனமாய்ப் படிக்கவில்லை. ஆகவேதான் புதிய ஏற்பாடு போதிப்பதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தங்கள் தலைவர்களின் போதகங்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்.

இப்படி உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுருளை படித்து தியானிக்காமல் உங்களின் பாஸ்டரின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்துபோயிருக்கும் தேவமக்கள். ஆண்டவரை நோக்கி மன்னிப்புக் கேட்டு, உங்களது சுருளை எடுத்துப் படித்து, மலையின் உச்சிக்கு ஓடவும். கடினமான மலையுச்சியை அடையவேண்டுமானால் ஆண்டவரின் பாதத்தில் அநேக நேரம் அமர்ந்திருந்து அவரது சத்தத்தை வேதத்தின் மூலமாகவும் தனிப்பட்ட தரிசனம் மூலமாகவும் கேட்கவேண்டும்.

நான் 1981 ம் ஆண்டில் ஒரு தரிசனம் கண்டேன். அதிலே நான் ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுகிறேன். என்னை மலையுச்சியை அடைய விடாமல் தங்கள் கைகளில் துப்பாக்கியை ஏந்தி என்னை துரத்திக்கொண்டு வரும் ஒரு கூட்டத்தாரை காண்கிறேன். நான் உயிர் பிழைக்க மலையுச்சியை அடைய, ஒரு வெள்ளைக்காரர் (பரிசுத்தமனிதன்) என் கரத்தைப்பிடித்து உயரே தூக்கி எடுக்கிறார். மேலே வந்தவுடன் அவர் என்னை மலையின் மேல் நிற்கக்கூடாது என்றும் அப்படி நின்றால் அவர்கள் என்னை சுட்டுவிடுவார்கள் என எச்சரிக்கிறார். பின்பு அங்கே ஒரு உணவின் பண்டகசாலை (godown) (தேவ வார்த்தைகளைத் தியானித்து, கற்றுக்கொள்ளும் இடம்) இருப்பதைக் காண்கிறேன். எனக்கு வேண்டிய ஆகாரங்கள் அங்கே இருப்பதைக் காண்கிறேன். பின்பு சிறிது நேரம் கழித்து நான் ஒரு பட்டாள தளபதி (army captain) போல ஆடை அணிந்து ஒரு போர்க்களத்தில் (battlefield) நுழைகிறேன். அங்கேயுள்ள போர் வீரர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறேன். அவர்கள் எல்லோரையும் தங்களின் ராணுவ ஆடைகளைக் களைந்து, சாதாரண ஆடைகளை (civil dress) அணியும்படி, கூறுகிறேன். ஆனால் அவர்களோ என்னைப் பார்த்து நகையாடினார்கள்.

நான் கொடுத்த எச்சரிக்கை பின்வந்த வேத வசனங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது: "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதிருங்கள்.

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.

கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?

மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. (எபிரெயர் 3:15-17).

இந்த தரிசனத்தின் படி ஆண்டவர் நான் எந்தவிதமான ஊழியம் செய்யவேண்டும் என்று என்னோடு பேசினார். உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய மலையுச்சி உண்டு. இந்த கடின மலையை அடைய வேண்டும். இந்த மலையின் மீது நீங்களும் பரிசுத்தாவியானவரும் மாத்திரம் இருப்பீர்கள். மூன்றாவது நபராக எந்த தீர்க்கதரிசியும் அங்கே இருக்கமாட்டார்கள்.

நீங்கள் மலையுச்சி அடையாமல் தடுக்கும் எந்த விதமான நபரும் உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரர் அல்ல. அவர்களை விட்டு ஓடவேண்டும்.

ஒரு சபையில் அப்போஸ்தல அல்லது தீர்க்கதரிசன அழைப்புள்ள ஏதாவது ஊழியக்காரர் இருப்பார்களானால் பரிசுத்தாவியானவர் அவர்கள் மூலம் ஒரு ஊழிய அழைப்பையோ அல்லது எவ்விதமான ஊழியம் செய்யவேண்டுமென்றோ உங்களிடம் பேசக்கூடும். ஆனால் மலையுச்சியில் போய் தேவனோடு ஐக்கியம் வைப்பது மிகவும் அவசியம்.

மலையுச்சி அடைந்தவுடன், மிகுந்த தாழ்மையுடன் படுத்துக்கொண்டு, உங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் உணவு பண்டாரத்தில் பரிசுத்தாவியானவரின் ஒத்தாசை கொண்டு வேதத்தை ஜெபத்துடன் படித்துத் தியானிக்கவும். இங்கே உங்களுக்கு பரிசுத்தாவியானவர் பயிற்சி கொடுக்கிறார். இது ஒரு வனாந்திரத்தில் பெரும் பயிற்சி. ஆவிக்குரிய பயிற்சி பெற்றவுடன் மலையை விட்டு இறங்கி ஊழியம் செய்யவும். எப்போதெல்லாம் மனிதர்கள் உங்களை நாடி வருகிறார்களோ அவர்களுக்கு பணிவிடை செய்துவிட்டு மீண்டும் மலையுச்சிக்குப் போய் தேவனோடு ஜெபத்தில் தரித்திருக்கவேண்டும். மனித புகழுக்கு அடிமை ஆகக்கூடாது. பரிசுத்தாவியானவர் உங்கள் கைகளின் மூலம் அற்புதம் செய்தால், உடனே உங்களை மறைத்துக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று சுவிசேஷம் சொல்லவேண்டும். உங்களுக்கென்று ஒரு மேடையோ கூடாரமோ வைத்துக்கொள்ளக்கூடாது. உங்களின் மூலம் தெய்வீக சுகம் அல்லது அற்புதம் பெற்றவர்களிடம் போய் உங்களுக்கு எந்தவிதமான உதவியையும் நாடாதீர்கள். அவர்கள் உங்கள் சபையில் அங்கத்தினராக இருப்பார்களானால் அவர்கள் உதாரத்துவமாக கொடுக்கும் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு அவர்களை வற்புறுத்தி காணிக்கை கேட்காதீர்கள். "தசம பாகம்" என்ற பழைய ஏற்பாட்டின் லேவியரின் பங்கைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, புதிய ஏற்பாட்டின் ஆசிர்வாதத்தை இழந்து போகாதீர்கள். பெற்றுக்கொள்ளாமல், கொடுப்பதினால்தான் புதிய ஏற்பாட்டின் ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். சபையிலுள்ள ஏழைகளையும், விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் ஆதரியுங்கள்.

Next.... அலங்கார மாளிகை