பயந்தான் கொள்ளி மனிதன்

Home

முந்திய பகுதி........நேர்மை என்ற பழைய பயணி

பயந்தான்கொள்ளி மனிதன் (Mr. Fearing)

சிறிதுநேரம் கழித்து கிரேட் ஹார்ட்டும் நேர்மையும் (Mr.Honest) இன்னொரு பயந்தான்கொள்ளி, (Mr. Fearing) என்ற பெயருடைய பயணியை பற்றி உரையாடல் நடத்துகிறார்கள். இந்த பயணியை கிரேட் ஹார்ட் தன் எஜமானரின் (இன்டர்பிரேட்டேர்-பொருள்கூறுவர்) வீட்டிலிருந்து மோட்சப்பட்டணத்தின் வாசல்வரை கொண்டுசேர்த்ததாக கூறினார். தானும் அவனோடு பயணம் செய்ததாக நேர்மை கூறினார். அவநம்பிக்கை என்ற குட்டையில் (Slough of Despond) ஒரு மாதமாக வெளிவரமுடியாமல் தவித்தானாம். கூட வந்தவர்கள் எல்லாரும் கடந்து போய்விட்டனராம். பின்பு நுழைவாசலில் உள்ளே நுழைய தைரியம் இல்லாமல் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தானாம். நுழைவாசல் திறந்தவுடன் அவன் ஒளிந்துகொள்ள, மற்றவர்கள் உள்ளே பிரவேசித்துவிடுவார்களாம். கடைசியாக தைரியத்தை வரவழைத்து, வாசலில் தொங்கிய சுத்தியலை எடுத்து மெதுவாக அடித்ததும் கதவு திறக்கப்பட, பயந்து போய் கீழே விழுந்துவிட்டான். பின்பு வீட்டின் காவலாளி அவனைத் தூக்கி எடுத்து, ஆறுதல் செய்து, வாழ்த்தி உள்ளே கொண்டுசென்றாராம். பின்னர் அங்கேயிருந்து அடுத்து போய் சேரவேண்டிய, பொருள்கூறுவரின் வீட்டு வாசலை அடைந்ததும், தைரியமாக உள்செல்லாமல் வாசலிலே குளிரினால் நடுங்கிக்கொண்டு பட்டினியாய் கிடந்து கிடந்தான். அவனது மடியில் அவனது தேவைகளுக்கான ஒரு கடிதம் பொருள்கூறுவரிடத்தில் கொடுப்பதற்காக வைத்திருந்தான். அதில் அந்த பயந்த சுபாவமுள்ள மனிதனுக்கு ஒரு நல்ல திடமான, தைரியமுள்ள வழிகாட்டி அவசியம் என்று குறிப்பிட்டிருந்தது. அவன் வாசலில் துன்புற்றுக் கிடப்பதை பார்த்து இரக்கம் கொண்டு, கிரேட் ஹார்ட் அவனை பொருள்கூறுவரிடத்தில் கொண்டுபோய் சேர்த்தார். பொருள்கூறுபவர், கிரேட் ஹார்டின் பரிந்துரையின்படியும், அவருக்கு காண்பிக்கப்பட்ட தேவைகள் குறிப்பையும் கண்டும் அந்த பயந்த உள்ளம்கொண்ட மனிதனை உள்ளே அழைத்து, விசேஷவிதமாக உபசரித்து, அவனுக்கு பயணத்திற்கு வேண்டிய திராட்சை ரசம் மற்றும் சாப்பாட்டு பொருட்களையும், மற்ற பயணிகளுக்கு கொடுப்பதுபோல கொடுத்து, அவனை மேற்கொண்டு பயணம் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார். பொருள்கூறுபவர் பயந்த பயணிகளை அன்புடன் கவனிக்கும் கருணை உள்ளம் படைத்தவர்.

எங்கே முன்று பேர்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனரோ, அந்த இடத்தை அடைந்தவுடன், பயந்தான்கொள்ளி (Fearing) பயந்து நடுங்கிவிட்டு, சிலுவை, காலியான கல்லறையை (Cross & Sepulchre) கண்டவுடன் புத்துணர்ச்சி அடைந்தான். பின்பு கடின மலையை கண்டோ (Hill Difficulty) சிங்கங்களைப் பார்த்தோ, அஞ்ச வில்லை. ஆனால் அவன் அழகிய மாளிகையில் ஏற்றுக்கொள்ளப்படுவானோ என்று தான் பயந்தான். அங்கேயுள்ள குமாரித்தகளிடமோ (Damsels), அவன் பயமில்லாமல் பழகவும் இல்லை. ஆனால், அந்த இரண்டு வீடுகளிலும் (House of Interpreter & Palace Beautiful) இருக்க விரும்பினானாம். அழகிய மாளிகையிலிருந்து அவமானத்தின் பள்ளத்தாக்கை (Valley of Humiliation) அடைந்ததும், அவனுக்கு இந்த பள்ளத்தாக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்ததாகவும் கூறினான். புல்வெளியில் படுத்து பூக்களைத் தொட்டு மகிழ்ந்துக்கொண்டிருந்தான். ஆனால், மரண இருளின் பள்ளத்தாக்கை அடைந்தபோது அவனை இழந்துவிடுவேன் என்று, அவனை கூட்டிச்சென்ற கிரேட் ஹார்ட் வருத்தப்பட்டார். அவன் பேய்களையும் பூச்சாண்டிகளையும் (Hobgoblins) நினைத்து நடுங்கினானாம்.

இந்த பள்ளத்தாக்கை இவன் கடந்து போகும் மட்டும், பகைஞர்கள் அவனை ஒன்றும் செய்யக்கூடாது என்று பரலோக அரசன் ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தாராம்!

மாயாபுரியின் சந்தையிலும் (Vanity Fair) தன்னை காத்துக்கொண்டான். பின்பு மயங்கும் நிலத்திலும் (Inchanted Ground) விழித்து தன்னைக் காத்துக்கொண்டான்.

கடைசியாக, ஆற்றைக் கடக்கும்போது, பொங்கிவரும் தண்ணீரை பார்த்து கலங்கினான். பின்பு, கிரேட் ஹார்டின் ஒத்தாசையுடன், நீர் குறையும் சமயம் வரை காத்திருந்து, அவன் ஆற்றில் இறங்கி, கடந்து, மோட்சப்பட்டணத்தில் பிரவேசித்து விட்டான். அவனது இந்த அருமையான வாழ்க்கை கதையை, சாட்சியாக சொல்லி கிரேட் ஹார்ட் இத்துடன் உரையாடலை முடிக்கிறார்.

சுய சித்தம் (Self-Will) என்ற பெயருள்ள பயணி

அதன்பின்பு, வேறு ஒரு, சுய சித்தம் (Self-Will) என்ற பெயருள்ள பயணியை பற்றி உரையாடலை துடங்குகிறார்கள். இந்த பயணி பாவத்தை செய்துகொண்டும், அதே நேரத்தில் புண்ணியத்தைப் பண்ணியும், மோட்சத்தை அடையலாம் என்று எண்ணி, நுழை வாசலின் அருகில் கூட வரவில்லையாம்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று நமது சபைகளில் பயந்தாகொள்ளிகள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கின்றனர். இவர்கள் நுழைவு வாயிலில் (Wicket Gate) பயந்து நின்றவர்கள். சபையின் உள்ளில் வந்தும், பயந்து கொண்டே இருக்கிறார்கள். சாத்தானுக்கு பயம். ஜெபிப்பதற்கு பயம். சாட்சி கொடுப்பதற்கு பயம். போதகர்களும் இவர்களை குறித்து ஒரு கவலைகூட இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் சபைகளுக்குள் வந்தாலும் வாசலில் குளிரில் நடுங்கிக்கொண்டு பட்டினியாக இருக்கும் பயந்தான்கொள்ளியை (Fearing) போல இருக்கிறார்கள். இந்த சபைகளின் மேய்ப்பர்களும், இவர்கள் மேல் எந்த விதமான அக்கறையும் கொள்ளாமல், இவர்கள் காணிக்கைகள் கொடுத்து சபைகளுக்கு தவறாமல் வந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இவர்களை எப்படி உபசரித்து, சேவை செய்து மோட்ச பயணத்திற்கு ஆயத்தம் பண்ண வேண்டும் என்று யோசித்துப்பார்ப்பதும் கிடையாது. இவர்களை சீடர்களாக்கி, ஊழியத்தில் நிலை நிறுத்தும் அருட்பணி, இந்த சபைகளில் நடப்பதில்லை. வெறும் பாட்டுப்பாடி, ஆராதனை நடத்தி, இவர்களை தங்கள் சபைகளைவிட்டு வேறு சபைகளுக்கு செல்லாமல் பார்ப்பதுதான் இந்த மேய்ப்பர்களின் தலையான கடமை!

இன்று அநேக முதிர்ந்த ஊழியர்களும் எப்போதும் பயந்துக்கொண்டிருக்கிறார்கள். சுகவீனம் தங்களையோ அல்லது குடும்பத்தாரையோ தாக்கும் என்றும், சாத்தான் அவர்களுக்கு சுகவீனம், மரணம், விபத்துக்கள் போன்றவைகளை விளைவிப்பான் என்றும் பயந்துக்கொண்டிருக்கிறார்கள்.

சுய சித்தம் (Self-Will) போன்ற கிறிஸ்தவர்கள் நமது ஆலயங்களிலே இருக்கிறார்கள், பாவம் செய்தால், செய்யும் புண்ணிய காரியங்களாகிய ஜெபம், பாட்டு, ஆராதனை, காணிக்கை மூலம் பாவமன்னிப்பு கிடைக்கும் என்று நம்பி ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் இருக்கிறார்கள். நுழைவு வாசல் வழி வந்து, சிலுவை, காலி கல்லறை அனுபவங்களை பெறாமலே இருக்கின்றனர். வாழ்க்கை மாறாமலே இன்னும் பழைய உடைகளை தரித்தவர்களாகவே இருக்கின்றனர். சபை மாத்திரம் மாறி இருக்கிறார்களே தவிற அதே வாழ்க்கைதான்! இன்னும் தனது சுய சித்தத்தில் தான் ஜீவிக்கிறார்கள்! சுயம் கல்வாரியில் கிறிஸ்தோவோடு இன்னும் அறியப்படவில்லை.

தொடர்ந்து படிக்க...காயுவின் வீட்டின் (House of Gaius) சிறப்புகள்