மகிழ்ச்சி மலையில் பயணிகள்

Previous.....மூன்று விதமான அரக்கர்கள்

மகிழ்ச்சி மலையில் பயணிகள்

அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலைக்கு நம்பிக்கையும், கிறிஸ்தியானும் வந்து சேர்ந்தார்கள். பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் அமர்ந்து களைப்பாறினார்கள்.மலையுச்சியில் அறிவு, ஞானம், கவனம், தங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். பயணிகளைக் கண்டவுடன் அவர்களை அன்போடு வரவேற்றார்கள். உணவளித்து உபசரித்தர்கள். கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு விவரமாகக் கூறினார்கள். அவற்றை ஆவலோடு கேட்ட மேய்ப்பர்கள் இரவு தங்கிப் போகும்படி வேண்டிக் கொண்டார்கள். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் இரவைக் கழித்தார்கள்.

மறுநாள் காலையில் எச்சரிக்கை என்ற பெயரையுடைய குன்றுக்கு அழைத்தச் சென்றார்கள். அங்கிருந்து பார்த்தபோது சற்றுத் தொலைவில் கண்பார்வையற்ற சிலர் கல்லறைகளுக்கு நடுவே தட்டுத் தடுமாறியவாறு சுற்றிவருவது தெரிந்தது!

யார் இவர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.

இந்த மலைக்கு வரும் வழியில் கற்பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை இருந்ததல்லவா? அந்தப் பாதையில் சென்று, சந்தேகக் கோட்டை என்ற கோட்டையின் அரக்கனுடைய கையில் பிடிபட்டவர்கள் தாம் இவர்கள். அவன் இவர்கள் கண்களைக் குருடாக்கி இப்படி அலையவிட்டுவிட்டான் என்றார்கள் மேய்ப்பர்கள்.

திடுக்கிட்ட கிறிஸ்தியானும், நம்பிக்கையும் ஒருவரையொருவர்பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் கண்கள் கலங்கின! தங்களைக் காப்பாற்றிய ஆண்டவரை எண்ணித் துதித்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலை என்பது ஒரு ஆவிக்குரிய கூடுகையை குறிக்கிறது. "இந்த மலையுச்சியில், அறிவு, ஞானம், கவனம், என்ற மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். பயணிகளைக் கண்டவுடன் அவர்களை அன்போடு வரவேற்று. உணவளித்து உபசரித்தார்கள்". இதுதான் ஒரு உண்மையான ஆவிக்குரிய கூடுகை. இது ஒரு ஆவிக்குரிய மலை உச்சியை அடைந்து, ஒரு தேவ தரிசனத்தை பெற்றக் கூட்டத்தார். இவர்கள் அறிவு, ஞானம், கவனம் என்ற மூன்று குணாதிசயங்களைப் பெற்ற ஊழியர்கள். இவர்களை, ஜான் பண்ணியன், மேய்ப்பர்கள் என்று குறிப்பிடுகிறார். இவர்கள், நரக பாதை வழி போய் அழிந்தவர்களை பற்றியும், நரகத்தைப் பற்றியும், பிரசிங்கிப்பார்கள். இவர்கள் எச்சரிக்கை செய்யும் உண்மையான தீர்க்கதரிசிகள்.

இன்று அநேக தேவபிள்ளைகள் சந்தேகக் கோட்டையின் அரக்கனுடைய கையில் பிடிபட்டு தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் குருடராகி நமது சபைகளில் நிறைந்து இருக்கிறார்கள். இவர்களின் கண்களைத் திறக்க நாம் ஜெபித்து வழிநடத்தவேண்டும்.

Next.....நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி