6giant

Previous.....சந்தேகக் கோட்டையில் விழுந்தனர்

நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனின் கையில்

மழையிலிருந்து தப்புவதற்காக ஒரு பாறை இடுக்கினுள் சென்று அமர்ந்தார்கள். களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கிவிட்டார்கள்! அவர்கள் தங்கிய இடத்துக்குச் சற்றுத் தொலைவில் தான் சந்தேகக் கோட்டை என்ற கோட்டை இருந்தது. நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன் தனது மனைவியோடு அங்கே வசித்து வந்தான்.மறுநாள் காலை. தனது நிலத்தைச் சுற்றிப் பார்க்க வந்த அரக்கன் தூங்கிக்கொண்டிருக்கும் இருவரையும் கண்டு கடும் கோபம் கொண்டான். யாரது, எனது நிலத்தில் படுத்து உறங்குவது? என்று கர்ணகடுரமான குரலில் கேட்டான். திடுக்கிட்டு விழித்த இருவரும் அரக்கனைக் கண்டு பயந்து நடுநடுங்கினார்கள்.ஐயா, நாங்கள் மோட்சத்துக்குச் செல்லும் பயணிகள். வழிதவறி இங்கு வந்துவிட்டோம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள், என்று கெஞ்சினான் கிறிஸ்தியான். ஆனால் அரக்கனோ அவர்களைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கோட்டையிலுள்ள பாதாளச் சிறையில் அடைத்துவிட்டான்! மூன்று நாட்கள் இரவும், பகலும் அவர்களைத் திரும்பியே பார்க்கவில்லை! உண்ண உணவு கிடையாது! குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை! பாறாங்கல் தரையில், பாதாள அறையின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, சோர்வோடு கிடந்தார்கள் இருவரும்!

அரக்கன் தனது மனைவியிடம் இவர்களைப் பற்றிக் கூறினான். அவிசுவாசம் என்ற அவனது மனைவி மிகவும் கொடூரமானவள். கொஞ்சம்கூட இரக்கம் காட்டாமல் அவர்களை நன்றாக அடிக்கும்படி ஆலோசனை கூறினாள் அவள்.

பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன் தனது குறுந்தடியைக் கொண்டு அவர்களை நையப் புடைந்தான்! ஆனால் அசையாமல் விழுந்துகிடந்த இருவரும் ஒன்றுமே பதில் பேசவில்லை! மறுநாள் இரவு அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்த அவிசுவாசம் தனது கணவனிடம் அவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டுமாறு யோசனை கூறினாள். பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன், நீங்கள் இனித் தப்பிச் செல்ல முடியாது. உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதுதான் ஓரே வழி என்று பயங்காட்டினான்! ஆனால் கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மனம் தளர்ந்துவிடவில்லை! ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டு மேலும் ஒரு நாளைக் கழித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அவிசுவாசம் தனது கணவனை அழைத்து, நீர் இதற்குமுன் இங்கு கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் காட்டிப் பயயமுறுத்தும் என்று கேட்டுக்கொண்டாள். அரக்கன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏற்கனவே அங்கே கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் காட்டினான். அந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு பயந்தாலும், இருவரும் தற்கொலை செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். அரக்கன் அவர்களை மீண்டும் பாதாளச் சிறையில் அடைத்தான்.

அப்போது கிறிஸ்தியான், அடடா, என்னிடம் ஒரு சாவி இருக்கிறதே என்று கூறியபடி ஆண்டவரின் வாக்குத்தத்தம் என்ற சாவியை வெளியே எடுத்தான். இதோ இந்தச் சாவியைக் கொண்டு எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம் என்றான் உற்சாகத்துடன். சரி, வா போகலாம் என்று எழுந்தான் நம்பிக்கை.

இருவருமாக பாதாளச் சிறையின் கதவண்டை வந்தார்கள். கிறிஸ்தியான் வாக்குத்தத்தம் என்ற சாவியைக் கொண்டு பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான்! ஆனால் பெரிய இரும்புக் கதவை அசைப்பது தான் கடினமாக இருந்தது. முழுமுயற்சியோடு கதவைத் திறந்துவிட்டார்கள்! அந்தச் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அரக்கன் விழித்துவிட்டான்.

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தப்பி ஓடுவதைக் கண்ட அரக்கன் அவர்களை விரட்டினான். ஆனாலும் அவனுக்குத் திடீரென மூட்டுவலி வந்துவிட்டது! ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டான்! பயணிகள் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு வந்து சேர்ந்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

ஆவிக்குரிய ஜீவியத்தில் வழி விலகிப் போகும்போது சந்தேகக் கோட்டை என்ற கோட்டையிலுள்ள "நம்பிக்கையற்றவன்" என்ற அரக்கன் கைகளில் நாம் விழுந்துவிடுகிறோம். தப்பான தத்துவங்களைப் போதிக்கும் ஊழியக்காரர்களின் சபைகளிலோ, வேறு தப்பான தத்துவங்களைப் போதிக்கும் சுவிசேஷகர்களின் கூட்டங்களிலோ மாட்டிக்கொண்டு ஒரு நம்பிக்கையை இழந்து, ஒரு பெரும் படுகுழிக்குள் தள்ளப்பட்டுவிடுகிறோம். இந்த அரக்கன் கையில் மாட்டிக்கொண்டு, அநேக நாட்களாக துன்புறுத்தப்படுகிறோம். இந்த கோட்டையில் நாம் இருக்கும்போது என்ன நேரிடுகிறது? எதிர் பார்த்தது அல்லது தீர்க்கதரிசனம் உரைத்தது நடை பெறாமல் எல்லாம் தலை கீழாக நடக்கிறது.

"ஆண்டவர் ஏன் பொய்யுரைத்தார்? ஆண்டவர் என் கஷ்டங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கிறாரே! இவருக்கு கண் இல்லையா! என் பாஸ்டர் சொன்ன படியெல்லாம் செய்துவிட்டேனே! ஒழுங்காக சபை கூட்டங்களுக்கு வருகிறேன், தசம பாகம் ஒழுங்காக கொடுக்கிறேன். பின், எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கிறது! பாஸ்டர் எத்தனை முறை என் தலை மேல் கைகள் வைத்து ஜெபித்தபின் எனக்கு ஏன் இந்த தீராத வியாதி வாட்டிக்கொண்டிருக்கிறது? தேவனின் சித்தத்தை அறிந்துகொள்ளும்படி நான் போகாத தீர்க்கதரிசிகள் இல்லையே! ஏன் ஆண்டவர் என்னோடு பேசமாட்டேங்கிறார்? பத்து நாட்களில் நடக்கும் என்று உரைத்த தீர்க்கதரிசனம் ஏன் இன்னும் நிறைவேறவில்லை? எனக்கு இப்போது மடிந்து போகாமல் வேறு வழியில்லை," என்று புலம்புகிறீர்களோ? இந்த குகையில் உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய ஆகாரமும் ஜீவ தண்ணீரும் கிடைக்காமல் நொந்துகொண்டிருக்கிறீர்களோ?

இந்த குகையில் இதற்கு முன்னால், ஆண்டவரை மறுதலித்து ஆவிக்குரிய ஜீவியத்தில் மரித்து பிணமான அநேகரை உங்களுக்கு சாத்தான் காண்பித்து, உங்களது விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவான். இந்த அரக்கனை வழி நடத்துவது சாத்தான்தான்! இப்போது உங்கள் கையிலிருப்பது தேவன் உங்களுக்கு கொடுக்கும் வாக்குத்தத்தமான திறவுகோலை எடுத்து, நீங்கள் அடைபட்டு கிடைக்கும் பாதாள குகையை திறக்கவேண்டும். இந்த வாக்குத்தத்தை அறிய வேண்டுமானால் உங்களது கையிலுள்ள சுருளை எடுத்துப் படித்து, 'ஜெபம்' என்ற ஆயுதத்தை எடுக்கவேண்டும். இப்போது நீங்கள் வாசிக்கும் தேவனின் வாக்குத்தங்களை, இதற்கு முன்பாக உங்களுக்கு கள்ள போதர்கள் மூலமாக உங்களுக்கு இதற்கு முன்னே அருளப்பட்டிருக்காது. பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டபின், இரும்புக் கதவை அசைப்பது தான் கடினமாக இருக்கும். எனென்றால், உங்கள் மனதில் ஏற்கனவே கள்ள ஊழியர்களின் மூலமாக கிடைத்த வாக்குத்தந்தங்கள், கள்ள போதனைகள், உங்களை தேவ வசனத்தை நம்பவிடாமல், தேவனின் மகத்துவத்தையும், அவரின் வல்லமையையும் அறியாமலிருக்கும்படி, சத்துரு போராடுவான்! தேவனோடு நீங்கள் நேரடியான தொடர்பு வைக்கவிடமாட்டான்! உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தர் அவசியம் என்று உங்கள் காதுகளில் ஊதுவான்!

நீங்கள் விடாப்பிடியாக கதவை திறக்கும்போது, அரக்கனின் பிடி தளர்ந்து விடும். "அவனுக்கு மூட்டு வலி வந்துவிட்டது," என்று அருமையாக ஜான் பண்ணியன் விவரித்திருக்கிறார். இந்த அரக்கனை நீங்கள் அழிக்க முடியாது. தப்பித்தான் செல்லமுடியும். நீங்கள் சென்ற பாதையில் இன்னும் அநேகர் வருவார்கள். உங்களின் சாட்சி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் இருக்கட்டும்.

உங்கள் சபையில் எதாவது கள்ள அல்லது தப்பான உபதேசம் இருக்குமானால், அதை பகுத்தறிந்து (discernment) அந்த தத்துவத்தை நிராகரிக்கவேண்டும். இன்று எந்த சபையோ பூரணமானது அல்ல. இந்த அரக்கனின் கையிலிருந்து தப்பினால் போதும்.

Next...மூன்று விதமான அரக்கர்கள்