உண்மையானவனின் அனுபவங்கள்

Previous.....மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்

உண்மையானவனின் அனுபவங்கள்

உண்மையானவனை நண்பனாக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தியான் அவனோடு உறவாடுகிறான். எனக்கும் வழியில் எத்தனையோ சோதனைகள் ஏற்ப்பட்டன என்றான் உண்மையானவன்.அப்படியா? எங்கே அதைப்பற்றிச் சொல் பார்ப்போம் என்று ஆர்வத்தோடு கேட்டான் கிறிஸ்தியான்.சொல்கிறேன் கேள். நீங்கள் விழுந்ததுபோல நான் அவநம்பிக்கைச் சேற்றில் விழாமல் தப்பிவிட்டேன். ஆனால் கடினமலையின் அடிவாரத்தில் வரும்போது வஞ்சமாநகரைச் சேர்ந்த ஆதாம் என்பனைச் சந்தித்தேன். ஆவன் என்னைத் தன்னுடைய வீட்டுக்கு வரும்படியும், எல்லா உலக இன்பங்களையும் தருவதாகவும் ஆசை காட்டினான். முதலில் ஆசைப்பட்ட நான் பிறகு என்னுடைய தவறை உணர்ந்தேன். அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு ஓடிவந்து விட்டேன் என்று பெருமுச்சுவிட்டான் உண்மையானவன்.

நல்லதாகப் போயிற்று! என்றான் கிறிஸ்தியான்.

அதோடு முடிந்துவிடவில்லை! நான் கொஞ்சம் ஆசைப்பட்டதுக்குத் தண்டனையும் கிடைத்துவிட்டது! என்றான் உண்மையானவன்.

எப்படி? கேட்டான் கிறிஸ்தியான்.

கடின மலையிலிருந்து இளைப்பாறும் தலத்தைத் தாண்டியிருப்பேன். அப்போது ஒருவர் என்னை நோக்கி வேகமாக வந்தார். அவரைப் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டேன். அதற்க்குள் அவர் ஒரு சாட்டையை எடுத்து என்னை அடிக்கத் துவங்கிவிட்டார். ஏன் ஜயா, என்னை அடிக்கிறீர்கள்? என்று பரிதாபமாக கேட்டேன். நீ ஆதாம் கூறிய உலக இன்பத்துக்கு ஆசைப்பட்டாயல்லவா? என்று கடிந்து கொண்ட அவர் மேலும் அடித்தார். ஜயா, கிருபைகூர்ந்து என்னை விட்டுவிடும் என்று கெஞ்சினேன் என்றான் உண்மையானவன்.

ஆச்சச்சோ, அப்புறம் ? கேட்டான் கிறிஸ்தியான்.

அப்போது ஒருவர் வந்து என்னை அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார். அவர் கைகள் ஆணிகளால் துளைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் அவர் தான் நமது ஆண்டவர் இயேசு என்று அறிந்து பரவசமுடன் அவரைத் துதித்தேன். பிறகு நான் தாழ்மையின் பள்ளத்தாக்கில் திருப்தியின்மை என்ற பெயரையுடையவன் என்னைச் சந்தித்தான். தாழ்மையின் பள்ளத்தாக்கில் நடப்பது நமது பெருமைக்கு ஏற்றதல்ல என்றான். நானோ மேன்மைக்கு முன்னானது தாழ்மை, அழிவுக்கு முன்னானது அகந்தை (நீதி.15:33,16:18) என்ற வசனங்களை எடுத்துக்கூறி அவனிடமிருந்து தப்பிவிட்டேன் என்றான் உண்மையானவன்.

வேறு ஒருவரையும் நீ பார்க்கவில்லையா? என்று கேட்டான் கிறிஸ்தியான்.

இன்னும் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் பெயர் வெட்கம். நாம் நமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பது இழிவானது என்று அவன் வாதம் செய்தான்.

நானோ மனுசருக்குள்ளே, மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது (லூக்கா 16:15) என்ற வசனத்தைக் கூறி நாம் தேவனுக்கு முன்பாக மிகவும் தாழ்வானவர்கள், அற்பமானவர்கள் என்றேன். அவன் பதில்கூறாது போய் விட்டான். அதன்பிறகு ஒருவரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை என்றான் உண்மையானவன்.

இவ்வாறு அவர்கள் பேசியபடி சென்றபொழுது நற்செய்தியாளரைச் சந்தித்தார்கள். கிறிஸ்தியான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! நற்செய்தியாளர் அன்போடு அவர்களைப்பற்றி விசாரித்தார். இருவரும் நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தார்கள்.

எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து இதுவரை வெற்றிகரமாக வந்துவிட்டீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். ஆனாலும் இனிமேல்தான் உங்களுக்குப் பெரிய ஆபத்துக்கள் இருக்கின்றன. சற்றுத் தொலைவில் மாயாபுரி என்ற நகரம் இருக்கிறது. அங்குள்ள விரோதிகள் உங்களைக் கொல்ல முயலுவார்கள். நீங்கள் இரத்தச் சாட்சிகளாக மரிக்க நேரிட்டாலும் நேரிடலாம். என்றாலும் மரணபரியந்தம் உண்மையாக இருங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவார் (வெளி.2:10) என்று கூறிய நற்செய்தியாளர் ஜெபத்தோடு அவர்களை வழியனுப்பிவைப்பார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இவர்களின் சம்பாஷணையை கவனத்தோடுக் கவனிக்கவேண்டும். இவர்களின் நெருங்கிய உறவு இந்த சம்பாஷணையில் வெளிப்படும். இவ்வாறு அவர்கள் பேசியபடி சென்றபொழுது, நற்செய்தியாளரைச் சந்திக்கிறார்கள். நற்செய்தியாளர் இவர்கள் மத்தியில் சரியான சமயத்தில் வந்து அவர்களை வழி நடத்துகிறார். இன்று இதுபோல நம்மை வழி நடத்தும் உண்மையான நற்செய்தியாளர்கள் மிகவும் குறைவு. நம்மிடமிருந்து ஏதாவது தங்களின் சுவிசேஷக ஊழியங்களுக்கு ஆதாயம் கிடைக்குமா என்று தான் இவர்கள் நம் மத்தியில் கடந்து வருகிறார்கள். பணத்தை எதிர்பார்க்கவில்லையென்றாலும் நமது ஜெபத்தை எதிர்பார்க்கின்றனர். அவர்களை நாம் கனம்பண்ண விரும்புகிறார்கள். அவர்களின் செய்திகளை கேட்டு 'ஆமென்' என்றும் 'அல்லேலூயா' என்றும் ஆர்ப்பரிக்க விரும்புகிறார்கள். நாம் அவர்களின் ஊழியங்களுக்கு பண உதவி செய்தால் ஆசீர்வாதங்கள் வரும் என்று நமக்கு போதிக்கிறார்கள்.

உங்களை தனியாக மோட்ச பாதையில் நடத்துவது ஒரு சில போதகர்கள் மாத்திரம் தான். பெரும்பாலானோர், அவர்களின் கூட்டத்திற்கு வந்து அவர்களின் செய்திகளை கேட்கும்படி விரும்புவார்கள்.

"சற்றுத் தொலைவில் மாயாபுரி என்ற நகரம் இருக்கிறது. அங்குள்ள விரோதிகள் உங்களைக் கொல்ல முயலுவார்கள்", என்று உங்களுக்கு எச்சரிப்பு கொடுக்கும் உண்மையான நற்செய்தியாளர்கள் எங்கே? மாயாபுரியின் சந்தைக்கு நேராக நடத்தும் கள்ள சுவிசேஷகர்கள் தான் நம் மத்தியில் உண்டு. அற்புதங்களுக்காவும் தெய்வீக சுகம் கிடைப்பதற்கு மாத்திரம் ஜெபித்து, உங்களுக்கு ஆண்டவர் எல்லா ஆசீர்வாதங்களையும் கட்டளை இடுவார் என்று சொல்வார்கள். உங்களுக்கு இந்த அழிந்து போகும் நகரத்தில் வீடும், பங்களாக்களும், கார்களும் கிடைப்பதற்கு ஜெபித்து அல்லது தீர்க்கதரிசனம் சொல்லி கடந்து செல்வார்கள்.

"இனிமேல்தான் உங்களுக்குப் பெரிய ஆபத்துக்கள் இருக்கின்றன .....மாயாபுரியில் விரோதிகள் உங்களைக் கொல்ல முயலுவார்கள். நீங்கள் இரத்தச் சாட்சிகளாக மரிக்க நேரிட்டாலும் நேரிடலாம், என்றாலும் மரணபரியந்தம் உண்மையாக இருங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவார் (வெளி.2:10)", என்று உங்களுக்க உண்மையாய் ஜெபித்து வழிநடத்தும் உண்மையான நற்செய்தியாளர்கள் எங்கே?

Next.... வாயடியைச் சந்தித்தல்