வாயடியைச் சந்தித்தல்

Previous....உண்மையானவனின் அனுபவங்கள்

வாயடியைச் சந்தித்தல்

கிறிஸ்டியானும் உண்மையானவனும் ஒருவரோடடொருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும்போது வாயாடி என்ற பெயருடைய ஒருவன் அவர்களுடன் வந்து சேர்ந்துக் கொண்டான். அவன் தானும் பரலோகத்துக்குப் போவதாக கூறினான்.அலப்புத் தெருவிலிருக்கிற வீண்பேச்சாளனின் மகன். பார்த்தால் நல்லவன் போல் தெரிகிறான்.இந்த வாயாடியின் குணாதிசயங்கள், நடத்தைகள் எல்லாம் இந்த சம்பாஷணையில் வெளிப்படுகிறது."தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." (I கொரிந்தியர் 4:20). வாயாடி போன்றவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். ஜெபமோ, விசுவாசமோ, மனம்திரும்புதலோ எதைப்பற்றி வேண்டுமானாலும் அவனால் பேச முடியும். ஆனால் எதையுமே அவன் மனதில் ஏற்றுக்கொள்ளமாட்டான் முட்டையின் வெள்ளைக்கரு தானாக எந்தவிதச் சுவையுமற்று இருப்பதைப் போல அவன் வீடும் விசுவாசமற்ற வீடாகவே இருக்கிறது. அங்கே உத்தம மனஸ்தாபமும் கிடையாது! ஜெபமும் கிடையாது. மிருகத்தைவிட கீழான நிலையில் அவன் பக்தியற்ற வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவ விசுவாசத்திற்கே அவன் நிந்தையையும் அவமானத்தையும் கொண்டுவரக் கூடியவனாக இருக்கிறான் என்று அவனைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவார்கள். அவனால் அந்தப்பகுதியிலேயே கிறிஸ்து நிந்தனைக்குள்ளாகிறார் என்றுதான் சொல்லவேண்டும்! அவனைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? வெளியில் தூய்மையானவன். வீட்டிலோ சாத்தான்.

பணியாளர்களை அநியமாய் திட்டுகிறான்! வீண் வாய்ச்சண்டைக்குச் செல்கிறான்! இதனால் அவனுடன் எப்படிப் பேசுவதென்றே தெரியாமல் அவர்கள் விலகிச்சென்று விடுகிறார்கள்! அவனோடு வாணிபம் செய்பவர்கள் பாடோ இன்னும் பரிதாபமாயிருக்கிறது! இவனோடு வாதாடுவதற்குப் பதில் திருடர் கையில் பொருட்களை எடுத்துக் கொடுத்துவிடுவது மேல் என்று எண்ணுகிறார்கள்! ஏனென்றால் முடிந்தால் இவன் தந்திரம் பண்ணி அவர்களையே ஏமாற்றிவிடுவான்! தகப்பன் என்றால் பிள்ளைகளுக்கு தற்போதனைகளை அளிப்பார்கள் என்றுதானே படித்திருக்கிறோம்? ஆனால் இவனோ அவர்களை எத்தர்களாக்கப் பயிற்சிக் கொடுக்கிறான்! இவர்களில் யாராவது இளகிய மனமுள்ளவர்களாகவோ. பயந்தவர்களாகவோ காணப்பட்டால் அவர்களை அறிவீனவர்கள் என்று திட்டுகிறான்; பெரிய பொறுப்புக்களை அவர்களிடம் கொடுப்பதில்லை; மற்றவர்களிடமும் அவர்களைப் பாராட்டிப் பேசுவதில்லை! நமக்குத் தெரிந்தபடி இவன் அநேகர் பாவத்தில் விழுந்து போகவும், பின்வாங்கிப் போகவும் காரணமாக இருந்திருக்கிறான். ஆண்டவர்தாம் அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் அவன் இன்னும் அநேகரை அழிவுக்கு இட்டுச் சென்றுவிடுவான்.

நற்செய்தியைக் கேட்பதும் பேசுவதுமே போதுமானது என்று நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். கேட்பது என்பது விதையை விதைப்பது போன்றதே! ஆனால் விதை முளைவிட்டு மரமாக வளர்ந்து கனிகொடுக்க வேண்டாமா? நற்செய்தியெனும் விதையை நம் இதயத்தில் வேரூன்றி ஆவியின் கனிகளாகப் பலன் கொடுக்க வேண்டும். தமது கனிகளைக் கொண்டே நாம் நியாயத்தீர்க்கப்படுவோம் என்பதை மறந்துவிடக்கூடாது. விசுவாசம் என்பது செயல்மூலம் வெளிப்பட்டதா என்பதே கண்டறியப்படும். நமக்குள் இருக்கும் பயிர் அறுவை செய்யப்படுவதே இறுதி முடிவு! அறுப்பில் தானியத்தைத்தானே விவசாயி எதிர்பார்க்கிறான்! எனவே உண்மையான விசுவாசமில்லாத எதுவும் இறுதி நியாயத்தீர்ப்பில் பயனற்றதாகி விடும். வாயாடியின் விசுவாசப் பேச்செல்லாம் அன்று ஒன்றுமில்லாதாகிவிடும்.

இவன் அப்போஸ்தலர் பவுல் கூறுவதுபோல "சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" ( 1 Cor 13:1) இருக்கிறான். இவன் உயிரற்ற வெறும் ஓசை எழுப்பும் இசைக் கருவியைப் போலவே இருக்கிறான். இவனின் வாயின் வார்த்தைகள் தேவதூதனின் வார்த்தைக்கு ஒத்ததாக இருந்தாலும்கூட அவர்கள் நித்திய ஜீவனைப் பெறும் ஆண்டவருடைய பிள்ளைகளின் பாக்கியத்தைப்பெற முடியாது.

கடைசியில் கிறிஸ்தியானும் உண்மையுள்ளவனும் வாயடியை வழியனுப்பி விட்டனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

வாயடியைப்போல அநேக கிறிஸ்தவர்கள் நம் மத்தியிலிருக்கிறார்கள். இவர்கள் சத்தியத்தை தனது தலை அளவில் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் ஒரு மயமால வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சபைகளுக்கு ஒழுங்காக செல்கிறார்கள். ஆராதனையில் கலந்துக்கொள்கிறார்கள். காணிக்கை கொடுக்கிறார்கள். இவர்கள் வேத அறிவில் தேர்ச்சிப்பெற்றவர்கள். இவர்களைப்போல போதகர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மணிக்கணக்காக ஆண்டவரைப் பற்றி பேசுவார்கள். ஆனால் ஆண்டவரை தங்கள் வாழ்க்கையின் மூலம் வெளிப்படுத்தமாட்டார்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டாலும் நாளடைவில் அழிந்து போகும் உலகத்தால் கவரப்பட்டு வெறும் வாயடிகளாக மாறிவிடுகிறார்கள்.

Next.... மாயாபுரியில் பயணிகள்